இளைஞர்கள் கொண்டாடி மகிழும் ‘போலி’ திருமணங்கள் – இந்தியாவில் அதிகரிக்கும் புதிய போக்கு

பட மூலாதாரம், Third Place

படக்குறிப்பு, உண்மையான திருமணத்தைப் போலவே அலங்கரிக்கப்பட்ட இரவு விருந்து அல்லது போலியான திருமண நிகழ்வுகள் , இந்திய இளைஞர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.எழுதியவர், நிகிதா யாதவ்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பெரியளவில் நடத்தப்படும் இந்திய திருமணங்களைப் பற்றி நினைக்கும் போது, என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

பிரகாசமான விளக்குகள், பளபளப்பான ஆடைகள், பாலிவுட் பாடல்கள், பலவகை உணவுகள் மற்றும் கொண்டாட்டம் நிறைந்த சூழல்.

இவை அனைத்தும் உணர்ச்சிகரமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கும் அல்லவா?

ஆனால், மணமகனும் மணமகளும் இல்லாமல் இதையெல்லாம் கற்பனை செய்யுங்கள்.

புனித நெருப்பைச் சுற்றி தம்பதிகள் ஏழு முறை சுற்றும் சடங்கு கிடையாது, உறவினர்களோ, அவர்கள் கண்ணீர் மல்க அளிக்கும் பிரியா விடைகளோ கிடையாது. ஆனால், வெறும் திருமண விருந்தும் கொண்டாட்டமும் மட்டும் இருந்தால்?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அது தான், உண்மையான திருமணங்களைப் போலவே கொண்டாடப்படும் போலி திருமணங்களின் சூழல்.

உண்மையான திருமணம் நடக்காமல், திருமணக் கொண்டாட்டத்தை மட்டும் அனுபவிக்க, மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரு புதிய போக்கு, தற்போது இந்திய நகரங்களில் வளர்ந்து வருகிறது.

ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட் விற்கப்படுகிறது.

முழுமையாக கொண்டாட்டத்துக்காகவே வடிவமைக்கப்படும் இந்த நிகழ்வுகள், சடங்குகள், பொறுப்புகள், மன அழுத்தம் எதுவும் இல்லாமல், ஒரு திருமணக் கொண்டாட்டத்தின் முழு அனுபவத்தையும் வழங்குவோம் என உறுதி அளிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், உண்மையான திருமண விழாக்களைப் போலவே கொண்டாடப்படும் விருந்து நிகழ்ச்சி தான், இந்தப் ‘போலி திருமண விழாக்கள்’.

கடந்த சில வாரங்களில், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இத்தகைய போலி திருமணங்கள் பிரபலமடைந்து வருகின்றன.

பொதுவாக இளைஞர்கள் தான் இதில் கலந்துகொள்கிறார்கள். நண்பர்களுடன் இரவு நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் , விருந்தினர்களால் ஏற்படும் அழுத்தம் இல்லாமல் ஒரு பாரம்பரிய இந்திய திருமண முறை மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் விரும்புகிறார்கள்.

கடந்த வாரம், டெல்லியில் நடந்த ஒரு போலி சங்கீத் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டோம். சங்கீத் என்பது திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு நடக்கும் இசையும், நடனக் கொண்டாட்டங்களும் நிறைந்த இரவு.

ஒரு அழகான கேளிக்கை விடுதியில் நடந்த அந்த நிகழ்வில், பெண்கள் பளபளப்பான புடவைகள் மற்றும் லெஹங்காக்கள் அணிந்திருந்தனர்,

ஆண்கள் அழகாக தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட குர்தாக்கள் மற்றும் சட்டைகளில் வந்திருந்தனர்.

ஒரு பாரம்பரிய இசைக்கலைஞர், இளைஞர் கூட்டத்தை நடன தளத்துக்கு அழைத்துச் சென்றார். டக்கீலா நிரப்பப்பட்ட பானி பூரியை (வட இந்திய தெருக்களில் பிரபலமான சிற்றுண்டி) விருந்தினர்களின் கைகளில் காண முடிந்தது.

இதுபோன்ற நிகழ்வில் முதல் முறையாக கலந்துகொண்ட ஷிவாங்கி சரீன், இந்த அனுபவம் “அற்புதமாக” இருந்தது என்கிறார்.

படக்குறிப்பு, போலி சங்கீத் ஒரு மறக்க முடியாத அனுபவம் என்கிறார் ஷிவாங்கி சரீன்.”குடும்பங்களால் நடத்தப்படும் திருமணங்களில், என்ன உடை அணிய வேண்டும், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் போன்ற அழுத்தங்கள் இருக்கும். ஆனால் இங்கே, முழுக்க முழுக்க மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, எங்களால் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிந்தது. இதற்காக முந்தைய நாளே ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, ஒன்றாக தயாரானோம்”என்று பகிர்ந்து கொள்கிறார் ஷிவாங்கி.

இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்கான டிக்கெட் கட்டணம் பொதுவாக 1,500 ரூபாய் (17 டாலர்; 13யூரோ) முதல் தொடங்கி, இடம் மற்றும் வசதிகளைப் பொறுத்து 15,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் செல்கிறது. ஷிவாங்கியும் அவரது நண்பர்களும் ஒரு ஜோடிக்கு 10,000 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

“இதை மாதத்துக்கு ஒரு முறை செலவிடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அந்த அனுபவம் முழுக்க முழுக்க அருமையானது” என்கிறார் ஷிவாங்கி.

‘விருந்தோம்பல் துறையில் புதுமை தான் முக்கியம்’ என்று இந்த நிகழ்வை நடத்திய உணவக உரிமையாளர் ஷரத் மதன் கூறுகிறார்.

“நமது வாடிக்கையாளர்களுக்காக நாம் தொடர்ந்து ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும்,” என்று ஷரத் குறிப்பிடுகிறார் .

இந்த நிகழ்வை திட்டமிடவும், ஏற்பாடு செய்யவும் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவானதாகக் கூறுகிறார் மதன்.

டிக்கெட் விற்பனையின் மூலம் அதைவிட இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என அந்தக் குழு எதிர்பார்த்தது. ஆனால் இது வெறும் லாபத்தைப் பற்றியது மட்டுமல்ல என்கிறார் மதன்.

மேலும், “இது மக்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றியது. அதிக லாபம் கிடைக்காவிட்டாலும், எங்கள் வாடிக்கையாளர்கள் புதிய அனுபவங்களைப் பெற விரும்புவதால், நான் இதைத் தொடர்ந்து செய்வேன்,” என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் பெங்களூரில் 2,000 பேர் கலந்துகொண்ட போலி திருமண விருந்தை நடத்திய 8Club நிகழ்வுகளின் இணை நிறுவனர் கௌஷல் சனானி, போலி திருமணங்களுக்கான உத்வேகம் வெளிநாட்டில் வசிக்கும் இளம் இந்தியர்களிடமிருந்து வந்ததாகக் கூறுகிறார்.

“இங்கிருந்து புலம்பெயர்ந்த மக்கள் ஒன்றுகூடி பாலிவுட் இசைக்கு நடனமாடுவார்கள், பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டாடுவார்கள். நாங்களும் இந்த யோசனையைத் தான் பின்பற்றினோம்” என்று அவர் பகிர்ந்துகொள்கிறார்.

பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு “மிகச் சிறப்பாக இருந்தது” என்றும் அவர் கூறுகிறார்.

அது அவர்களை டெல்லியில் இதேபோன்ற நிகழ்வை திட்டமிட ஊக்குவித்தது. அதற்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுவிட்டன.

அதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னௌ போன்ற நகரங்களில் உள்ள நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் இதுகுறித்து அவரிடம் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

“இப்போது, ஆர்வமுள்ளவர்களுக்கு எங்கள் நிலையான செயல் முறையை (SOP) வழங்குகிறோம். இது அந்த நிகழ்வை எவ்வாறு உருவாக்குவது, லாபம் ஈட்டுவது எப்படி என்பதற்கான வழிகாட்டி,” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், எல்லா போலி திருமண விழாக்களும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.

பட மூலாதாரம், Trippy Tequila

படக்குறிப்பு, இந்த நிகழ்வுகள் முடிந்தவரை உண்மையான திருமணத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.அனுபவங்களை மையமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனமான தேர்ட் பிளேஸ் (Third Place), பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சங்கீத் நிகழ்ச்சியை நடத்தியது. மது இல்லாமல், வெறும் கொண்டாட்டமாக மட்டும் இந்த சங்கீத் அமைந்தது.

“நிகழ்வில் பங்கேற்றவர்களை மணமகன் மற்றும் மணமகள் அணிகளாகப் பிரித்தோம். சரேட்ஸ் (charades) போன்ற விளையாட்டுகளை ஏற்பாடு செய்தோம்” என்று தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் பாண்டே கூறுகிறார்.

மேளதாளங்கள், விருந்தினர்களுக்கான பிரமாண்ட வரவேற்பு, ஜோதிடத்தின் அடிப்படையிலான விளையாட்டுகள் போன்ற அனைத்தும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன. ஆனால் மதுபானங்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டன.

“சில நேரங்களில் மது அருந்துவது உண்மையான அனுபவத்தை மங்கச் செய்கிறது,” என்று கூறும் பாண்டே, “ஒரு கேளிக்கை விடுதி போன்றோ, வழக்கமான நிகழ்வைப் போன்றோ இல்லாமல், இந்தியத் திருமணங்களின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்க விரும்பினோம்”என்று பகிர்ந்து கொள்கிறார்.

வளர்ந்துவரும் இந்த நிகழ்வுகளின் புகழ், இளைஞர்கள் கொண்டாடுவதற்கான காரணங்களைத் தேடும் புதிய மனநிலையை பிரதிபலிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“மக்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவை. கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பம் தேவை . அதற்கு, மகிழ்ச்சியின் அனைத்து அம்சங்களையும் இணைக்கும் திருமணத்தை விட சிறந்த இடம் வேறு இல்லை”என்று எழுத்தாளரும் சமூக விமர்சகருமான சந்தோஷ் தேசாய் கூறுகிறார்.

” உண்மையான திருமணங்களில் ஏற்படும் மன அழுத்தம் இல்லாதபோது, இது உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கின்றது” என்றும் அவர் விளக்குகிறார்.

கடந்த காலத்தில் வாங்கிய விலையுயர்ந்த திருமண ஆடைகளை மீண்டும் அணிவதற்கான ஒரு வாய்ப்பையும் இந்த நிகழ்வுகள் வழங்குகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சரி, இந்த போக்கு தொடருமா?

இத்தகைய போலி திருமணங்கள் தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது எனக் கருதுகிறார் டெல்லியை தளமாகக் கொண்ட டச்வுட் ஈவென்ட்ஸ் (Touchwood Events) நிறுவனத்தின் நிறுவனர் விஜய் அரோரா. அதே வேளையில், அது வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

” ஜென் ஸி (Gen Z) தலைமுறை நிச்சயமாக இதுபோன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்புகிறார்கள்,” என்று கூறும் விஜய் அரோரா,

“இது ஒரு புதிய சந்தை வகையாக உருவானால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அளவு அதிகரிக்கும் என்பதால், முழு துறைக்கும் புதிய வணிக வாய்ப்புகள் உருவாகும்,” என்றும் விளக்குகிறார்.

முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ரைட் ரிசர்ச்சின் (Wright Research) படி, இந்திய திருமணத் துறை சுமார் 130 பில்லியன் டாலர் மதிப்புடையதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. பெரும்பாலான திருமணங்கள் குளிர் காலங்களில் (நவம்பர் முதல் மார்ச் வரை) மற்றும் நல்ல நேரங்களில் நடைபெறும். மழைக்காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுவதில்லை.

இடம் கிடைப்பது, விற்பனையாளர்கள் தயாராக இருப்பது, மக்கள் தொடர்ந்து புதிய அனுபவங்களைத் தேடுவது போன்ற காரணங்களால், இந்தப் போக்கு தொடர்ந்தால், போலி திருமணங்கள் அந்த இடைவெளியை நிரப்பும் வாய்ப்பு உள்ளது.

போலி திருமண நிகழ்வுகள் இவ்வளவு வேகமாக வளர்ந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என அரோரா கூறுகிறார்.

“ஆனால், இது போன்ற நிகழ்வுகள் நாம் கொண்டாட விரும்பும் ஒன்றாக இருப்பதையும், அதில் பங்கேற்கும் ஆர்வத்தோடு இருப்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் நடத்தும் உண்மையான திருமணங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், இந்த போலி நிகழ்வுகள் மூலம் அந்த அனுபவத்தை நாம் பெற விரும்புகிறோம்.”

ஆனால், அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் மகிழ்வாக வெளியேறுவதில்லை.

பட மூலாதாரம், Third Place

படக்குறிப்பு, சில போலி திருமண நிகழ்வுகளில் ஜோதிடத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.பெங்களூருவைச் சேர்ந்த 23 வயதான மார்க்கெட்டிங் நிபுணர் சிருஷ்டி சர்மா, தான் கலந்து கொண்ட போலி திருமண நிகழ்வில் பெரிதாக ஈர்க்கப்படவில்லை எனக் கூறுகிறார்.

“நான் சில வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வசித்து வருகிறேன். அதனால் திருமணங்களில் கலந்துகொள்வதை தவறவிட்டேன்.

அதில் இருந்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ‘அடுத்ததாக உங்களுக்குத் தானே திருமணம்?’ என்று உறவினர்கள் தொந்தரவு செய்யாதது தான்” என்கிறார்.

இந்தப் போலி திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக , சிருஷ்டியும் அவரது தோழிகளும் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க மணிக்கணக்கில் நேரம் செலவிட்டுள்ளனர். ஆனால், நிகழ்வு அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை.

“அவர்கள் மின்னணு இசை கருவிகள் மூலம் உருவாக்கப்படும் (EDM) இசையுடன் தொடங்கினார்கள். இரண்டு மணி நேரம் கழித்துதான் பாலிவுட் பாடல்களுக்கு மாறினர்,” என்று கூறிய அவர்,

“நாங்கள் திருமண விருந்தை எதிர்பார்த்தோம், ஆனால் பீட்சா மற்றும் ப்ரைஸ் தான் கிடைத்தது. அதிலும் இனிப்பு எதுவும் இல்லை, மதுபானம் மட்டும் தான் இருந்தது. அலங்காரம் மிகவும் சாதாரணமாகவும், கடமைக்குச் செய்தது போலவும் இருந்தது” என அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

சிலர் இந்த நிகழ்வுகளை விமர்சித்து, இவை பாரம்பரிய இந்திய நிகழ்வுகள் மற்றும் மதிப்புகளை அவமதிக்கக் கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் டெல்லியில் நடந்த போலி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விதி கபூர் இக்கருத்தை ஏற்கவில்லை.

“மக்களை மணமகன் அல்லது மணமகள் போல உடை அணியச் சொன்னால் அது அசௌகரியமாக இருந்திருக்கலாம், ஆனால் இங்கே இது வெறும் விருந்து மட்டும் தான். அதனைக் கொண்டாட்ட மனநிலையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார் விதி கபூர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு