Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்க முடிவா? சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் பதில்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் (கோப்புப்படம்)எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தமிழ்நாட்டில் வசிக்கும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் விவாதப் பொருளாகியிருக்கிறது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனை எச்சரிக்கையானது மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதைப் பொருத்தவரை வசிப்பிட கொள்கை என்பது தான் முக்கியமானது என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
“பிகாரில் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் வாக்கு செலுத்தியுள்ளேன். ஆனால் எனது பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார் திருப்பூரில் வசித்து வரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான சனோஜ் குமார்.
“பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழகத்துடன் இணைப்பது அபத்தமானது” என்று கூறும் தேர்தல் ஆணையம் தமிழக அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்கு என்ன பதில் தந்துள்ளது?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சர்ச்சையின் பின்னணி
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் (கோப்புப்படம்)பிகாரில் சிறப்புத் திருத்தத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் முந்தைய பட்டியலை விட 65 லட்சம் வாக்காளர்கள் குறைவாக இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டனர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்துள்ளனர் அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின் போது, அதற்கான அதிகாரம் தனக்கு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பிகாரிலிருந்து 26 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்திருக்கலாம் எனத் தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.
இந்த நிலையில் பிகாரிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடியிருக்கலாம் என்றும் பிகார் வாக்காளர் பட்டியலில் அவர்கள் நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என செய்திகள் வெளியாகத் தொடங்கின.
தமிழக தலைவர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty/Thirumavalavan/Seeman
படக்குறிப்பு, ப.சிதம்பரம், திருமாவளவன் மற்றும் சீமான் ப.சிதம்பரம்
“6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கப்படலாம் எனப் பரவுகிறது செய்தி எச்சரிக்கையளிக்கக் கூடியது மற்றும் வெளிப்படையாக சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
“நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள்” எனக் கூறுவது புலம்பெயர் தொழிலாளர்களை அவமதிக்கும் எனக் கூறிய அவர், இது தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவர்களின் விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து மாநிலங்களில் தேர்தல் தன்மையை மாற்ற முயற்சிக்கிறது. இந்த அதிகார துஷ்பிரோயம் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முறியக்கப்பட வேண்டும். பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எதிர்பார்க்கும் அதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம்.” ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருமாவளவன்
வடமாநில வாக்காளர்களைச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.” என்றார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.”‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
பிகார் மாநில மக்கள் இங்கு வாக்களிப்பது சரியாக இருக்காது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவர்கள் வேலை செய்ய இங்கு வருகிறார்கள். அதன் பிறகு சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்ன சொல்கிறார்?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் செயல்பட முடியும் எனக் கூறுகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் “வாக்களிப்பதைப் பொருத்தவரை வசிப்பிட கொள்கை என்பது தான் முக்கியமானது. அதன்படி ஒருவர் எங்கு குடியிருக்கிறாரோ அங்கு தான் வாக்களிக்க முடியும். சட்டப்பூர்வமான நிலை இது தான். ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் தற்போது செய்கிறது” எனத் தெரிவித்தார்.
ஆதார் அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்தவர், “அரசால் வழங்கப்படும் ஒரு ஆவணத்தை முழுமையாக அனைவருக்கும் நிராகரித்துவிட முடியாது. சந்தேகம் எழுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே அவற்றைக் கேள்வி கேட்க முடியும் எனத் தெரிவித்தார்.
வாக்காளர் பதிவு பற்றி கேள்விக்கு பதில் அளித்தவர், “தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்தினாலும், ஒரு வாக்காளர் தான் அதற்கான படிவம் மூலம் தன்னை வாக்காளராக இணைத்துக் கொள்ள பதிவு செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, சனோஜ் குமார்பிகாரில் வாக்குரிமை இழந்த தொழிலாளர் கூறுவது என்ன?
பிகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனோஜ் குமார். கடந்த 15 ஆண்டுகளாக பணி நிமித்தமாக தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். “என் அம்மா அழைத்து வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை எனத் தெரிவித்தார். நான் என் மாநிலத்திற்கு தேர்தல் நேரத்தில் சென்று அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ளேன். என் பெயரை எப்படி நீக்கினார்கள் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளைப் போலவே தேர்தல் சமயங்களிலும் தனது ஊரைச் சேர்ந்த பலரும் சொந்த ஊர் திரும்பி வாக்களித்து வருகிறார்கள் எனக் கூறுகிறார் சனோஜ்.
நான் பிகாரில் தொடர்ந்து வாக்களிப்பேன் என்கிறார் சனோஜ் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “என்னைப் போல பலரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. நான் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன். நான் தமிழ்நாட்டில் பல வருடங்களாக தான் வேலை செய்கிறேன். ஆனால் என் சொந்த ஊரில் தான் வாக்களிப்பேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊருக்குச் சென்று முறையாக வாக்களித்து வரும் என்னைப் போன்றவர்களின் உரிமையை பறிப்பது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல – திமுக
படக்குறிப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன்.இத்தகைய முயற்சிகளை திமுக தொடர்ந்து எதிர்க்கும் எனத் தெரிவிக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன். “வட மாநிலத்தவர்கள் வேலைக்காக வருகிறார்கள். சொந்த ஊர்களுக்குத் திரும்ப செல்கிறார்கள். இது முறையானது. ஆனால் அவர்கள் இங்கு வாக்காளர்களாக இணைப்பது தவறானது. வட மாநில மக்கள், வட மாநில கட்சிகளுக்குத் தான் வாக்களிப்பார்கள். இது தமிழ்நாட்டின் நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு முன்னர் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தனக்கு சாதகமாக திருத்தியதாகக் கூறுகிறார் இளங்கோவன். “பிகாரில் மேற்கொள்ளப்படும் திருத்தத்தை திமுக கண்டித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது பற்றி குரல் எழுப்பியுள்ளோம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பல மாதங்கள் இருக்கின்றன. இங்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று இனிமேல் தான் தெரியவரும். அதைப் பொருத்து திமுகவின் நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது – பாஜக
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முரணாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார் பாஜக மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பிகார் மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் அவ்வாறு நீக்கப்படும் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவானவர்கள் எனக் கூறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி மலிவான அரசியல் செய்கிறது. அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது பொதுவான நடைமுறை தான். தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் அதை ஒப்புக்கொள்ளாமல் மோசமான அரசியல் செய்து இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) பற்றிய ப.சிதம்பரத்தின் எக்ஸ் தள பதிவை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், இந்த கூற்று தவறானது மட்டுமின்றி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது. தேசிய அளவில் தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை என்று அந்த பதிவு கூறுகிறது.
பிகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து அந்த மாநிலங்களில் வழக்கமாக வசிக்கும் வாக்காளர்களைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) நடத்தப்பட்ட பின்னரே சரியான புள்ளிவிவரங்களை அறிய முடியும் என்றும் அதில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
“தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் இன்னும் நடத்தப்படவில்லை. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தமிழகத்துடன் இணைப்பது அபத்தமானது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக இதுபோன்ற தவறான அறிக்கைகளை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு