யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் தான் முன் வைத்த வேண்டுகோள்களை செயற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள பிரதமர் பூரண சம்மதத்தை வழங்கியுள்ளார் என யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பாதுகாக்கப்பட்டு தற்போது பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் இலத்திரனியல் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ள நூல்களை யாழ்ப்பாண நூலகத்திலிருந்தும் கையாளக்கூடிய வகையில் இணையவழியில் இணைப்பித்தல்.

மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிராந்தியங்கள் சார்ந்து 1800 கள் தொடக்கம் 1950 வரையான காலப்பகுதிக்குட்பட்டு வெளியிடப்பட்ட அல்லது சேகரித்து பெரிய பிரித்தானியாவினுடைய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நூல்களை வன்பிரதியாகப் பெற்றுக்கொள்ளல் அல்லது வன்பிரதியாக்கம் செய்து பெற்றுக்கொள்ளல்.

அத்துடன் நெதர்லாந்து பல்கலைக்கழகங்களிலும் எமது நூல்கள் இருப்பதாக அறியக்கிடக்கிறது. அவை தொடர்பிலும் உரிய தகவல்கள் ஆதார பூர்வமாகக் கிடைக்கப்பெற்றதும் கவனம் செலுத்தப்படும்.

இவற்றின் மூலமாக எமது யாழ்ப்பாண நூலகத்தில் 1981 ல் எரித்து அழிக்கப்பட்ட சில அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்திருந்த பிரதமரிடம் கோரியுள்ளார்.