பெங்களூரு பெண்ணுக்கு உலகில் வேறு யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை – இதய அறுவை சிகிச்சை எவ்வாறு நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவப்பு ரத்த அணுக்கள் (மாதிரிப்படம்)எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்திக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீங்கள் ‘ஏ’, ‘பி’, ‘ஓ’ மற்றும் ‘ஆர்ஹெச்’ (‘A’, ‘B’, ‘O’ மற்றும் ‘RH’ ) போன்ற ரத்த வகைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர, சில அரிய வகை ரத்த வகைகளும் உள்ளன.

அந்த வரிசையில் இப்போது இந்தியாவில் ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கிரிப் (CRIB) என அறியப்படுகின்றது.

கிரிப் (CRIB) – ல் உள்ள சி ( C ) என்பது 47 ரத்த வகைகளில் ஒன்றான க்ரோமெரைக் (Cromer -CH) குறிக்கிறது, ஐ (I) என்பது இந்தியாவையும் பி (B) என்பது பெங்களூருவையும் குறிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இது பெங்களூரு அருகே உள்ள ஒரு பெண்ணிடம் கண்டறியப்பட்ட ரத்த வகை. இந்த அரிய வகை இரத்தம் 38 வயதான பெண் ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இதய அறுவை சிகிச்சை செய்யும்போது, ரத்தம் செலுத்த வேண்டிய தேவை வந்தால், அப்போது பயன்படுத்துவதற்காக ஒன்று அல்லது இரண்டு பாட்டில் ரத்தத்தை தயாராக வைத்திருப்பது வழக்கமான நடைமுறை.

ஆனால் இங்கு இந்த வழக்கத்தை கூட மருத்துவர்களால் பின்பற்ற முடியவில்லை. ஏனென்றால், நிபுணர்களால் அந்தப் பெண்ணின் ரத்த வகையை அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சம்பவம் நடந்து 11 மாதங்கள் கழிந்துவிட்டன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கூடுதலாக ரத்த மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், தற்போது அறுவை சிகிச்சை நடந்த அந்த நாளை நினைவுகூரும்போது, மருத்துவர் அங்கித் மாத்தூர் நிம்மதியாக உணர்கிறார்.

மருத்துவர் அங்கித் மாத்தூர் பெங்களூருவில் உள்ள ரோட்டரி-டிடிகே ரத்த மையத்தின் கூடுதல் மருத்துவ இயக்குநராக உள்ளார்.

கோலாரில் உள்ள ஆர்எல் ஜலப்பா மருத்துவமனையின் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளும் முக்கிய நபராகவும் அவர் பங்கு வகித்துள்ளார். அந்த பெண்ணுக்கு இதயப் பிரச்னை இருந்ததால், இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மற்ற ரத்த வகைகளிலிருந்து வேறுபட்ட புது வகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்த மாதிரிகள் உறுதிப்படுத்துவதற்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டன (மாதிரி படம்)”அந்தப் பெண்ணின் ரத்த வகை வேறு எந்த ரத்த வகையுடனும் பொருந்தவில்லை. நாங்கள் அதை மற்ற ரத்த வகைகளுடன் கலந்து சோதித்தோம், ஆனால் அது ஒவ்வொரு முறையும் எதிர்வினையாற்றியது” என்று மருத்துவர் அங்கித் மாத்தூர், பிபிசியிடம் தெரிவித்தார்.

“அதன் பிறகு, நாங்கள் அவரது குடும்பத்தினருக்குள் அதைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் 20 குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகளை எடுத்தோம். அனைவரும் எங்களுடன் ஒத்துழைத்தனர். ஆனால், யாருடைய ரத்தமும் அவரது ரத்தத்துடன் பொருந்தவில்லை” என்றும் கூறுகிறார்.

அதன் பிறகு, ரத்த மாதிரியை பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள இன்டர்நேஷனல் பிளட் க்ரூப் ரெபெரென்ஸ் லெபாரட்டரிக்கு (IBGRL) அனுப்பி சோதிப்பது தான் அடுத்த வழியாக இருந்தது. அந்த ஆய்வகத்தில் தான் உலகம் முழுவதிலுமிருந்து ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு, அவை மற்ற ரத்த வகைகளுடன் பொருந்துகிறதா என்று சோதிக்கப்படும்.

அதாவது, எவ்வாறு தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள் பெங்களூருவில் உள்ள ரோட்டரி-டிடிகே ரத்த மையத்திற்கும், வட இந்தியாவில் சண்டிகரில் உள்ள பிஜிஐ (PGI) மருத்துவமனையிற்கும் அனுப்பப்படுகின்றதோ, இதுவும் அதே நடைமுறையைப் போன்றது தான்.

அதைப் பற்றிய முழுமையான பகுப்பாய்வைச் செய்ய அவர்களுக்கு 10 மாதங்கள் ஆனது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில், நோயாளியின் ரத்தத்தில் ஒரு தனித்துவமான ஆன்டிஜன் இருப்பதாக அவர்கள் பதில் அனுப்பினர்.

அதன் பிறகு, இந்தத் தகவல் சர்வதேச ரத்தமாற்ற சங்கத்திற்கு (ISBT) அனுப்பப்பட்டது. அங்கே ரத்த சிவப்பணு நோயெதிர்ப்பு மரபணு மற்றும் டெர்மினாலஜி குழுவின் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் கிரிப் (CRIB) என்ற பெயரை அங்கீகரித்தனர்” என்று மருத்துவர் அங்கித் மாத்தூர் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 35வது ஐஎஸ்பிடி (ISBT) மாநாட்டில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அரிய மரபணுக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரின் ரத்த வகை என்பது அவரது பெற்றோரின் மரபணுக்களைப் பொறுத்தது (கோப்புப்படம்)ஒருவரின் ரத்த வகை என்பது அவரது பெற்றோரின் மரபணுக்களைப் பொருத்தது. அப்படியென்றால், இந்த பெண்ணின் விஷயத்தில் மரபணு அமைப்பில் ஏதேனும் சிக்கல் இருந்ததா? என்ற கேள்வி மருத்துவர் மாத்தூரிடம் முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினருக்காவது இந்த ஆன்டிஜன் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் குடும்பத்தில் யாருக்கும் அது இல்லை என்பதைக் கண்டறிந்தோம்” என்கிறார்.

ஆன்டிஜன்கள் என்பது உடலில் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு வகை புரதம்.

“உடலில் ஏதாவது உருவாகும் போது, அதற்குத் தேவையான முழு தகவல் பெற்றோர் இருவரிடமிருந்தும் வருகிறது. பாதி தகவல் தந்தையின் மரபணுக்களிலிருந்து கிடைக்கிறது. அதில் ஏதேனும் குறை இருந்தால், தாயின் மரபணுக்கள் அதை நிறைவு செய்யும். அதேபோல், தாயின் மரபணுக்களில் குறை இருந்தால், தந்தையின் மரபணுக்கள் அதை ஈடு செய்யும்,” என்று மருத்துவர் மாத்தூர் விளக்கினார்.

“ஆனால் இந்த விஷயத்தில், உடலில் உள்ள தகவல் பாதியளவுதான் இருக்கிறது. அதனால் தான் அவர்களின் ரத்த வகை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இங்கு அந்த ஆன்டிஜன் ‘குரோமராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

“இதுவரை குரோமர் இரத்தக் குழு அமைப்பில் 20 ஆன்டிஜன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிரிப் (CRIB) இப்போது இந்த அமைப்பின் 21வது ஆன்டிஜனாக மாறியுள்ளது” என்றும் மருத்துவர் அங்கித் மாத்தூர் கூறினார்.

அவசர காலத்தில் அத்தகைய நோயாளிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் சொந்த ரத்தத்தை மருத்துவர் சேகரிப்பார் (கோப்புப்படம்)கோலாரைச் சேர்ந்த இந்தப் பெண் நோயாளியைப் போல, சிலருக்கு ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பாதுகாப்பான சிகிச்சை அளிப்பது சவாலாகவே உள்ளது.

அவர்களுடைய உடலில் சில முக்கிய புரதங்கள் இல்லாததால், சாதாரண முறையில் ரத்த மாற்றம் செய்தால், உடல் அதை அந்நியமாகக் கருதி ‘ஆன்டிபாடிகள்’ என்று அழைக்கப்படும் எதிர்ப்பு மூலக்கூறுகளை உருவாக்கி, அந்த ரத்தத்தை அழிக்க முயலும்.”

“இது போன்ற சூழ்நிலையில், குடும்பத்தில் கிரிப் (CRIB) வகை இரத்தத்தைக் கொண்ட ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வேறு எந்த வழியும் இல்லை” என்கிறார் மருத்துவர் அங்கித் மாத்தூர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மற்றொரு வழி என்னவென்றால், அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் சொந்த ரத்தத்தை மருத்துவர் சேகரிப்பார். இதனால் அவசரநிலை ஏற்பட்டால், நோயாளிக்கு அதே ரத்தம் வழங்கப்படும். இது ‘ஆட்டோலோகஸ் ரத்தமாற்றம்’ என்று அழைக்கப்படுகிறது” என அவர் விளக்குகிறார்.

‘ஆட்டோலோகஸ் இரத்தமாற்றம்’ என்பது ஒரு அசாதாரணமான செயல்முறை அல்ல. அரிதான இரத்த வகைகள் உள்ள நோயாளிகளுக்கு, இந்த முறை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

வேறு ரத்த வகையிலிருந்து ரத்தத்தை எடுக்கவோ அல்லது கொடுக்கவோ முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாம்பே ரத்த வகை என்பது ஒரு அரிய ரத்த வகை, இது உலகில் ஒரு மில்லியனில் ஒருவருக்கு காணப்படுகிறது (மாதிரி படம்)கிரிப் (CRIB) ரத்த வகை, 47 வகையான ரத்த வகைகளில் ஒன்றாகும். இதில் 300 ஆன்டிஜன்கள் உள்ளன. இது மற்ற வகைகளை விட தனித்துவம் வாய்ந்தது கிடையாது. ஆனால் ரத்தமாற்றம் செய்யும்போது, பொதுவாக ஏபிஓ (ABO) மற்றும் ஆர்ஹெச்டி (RhD) ரத்த வகைகள் பொருந்துகிறதா என்பதை மட்டுமே பரிசோதிக்கின்றனர்.

மும்பையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்முனோஹெமடோலஜியின் (National Institute of Immunohaematology- ICMR-NIIH) முன்னாள் துணை இயக்குநராக இருந்த மருத்துவர் ஸ்வாதி குல்கர்னி, 1952-இல் மருத்துவர் ஒய்.எம்.பெண்டே மற்றும் மருத்துவர் எச்.எம்.பாட்டியா ஆகியோர் கண்டுபிடித்த அரிய வகையான ‘பாம்பே’ அல்லது ‘ஹெச்ஹெச் (HH)’ வகை குறித்து கூறுகிறார்.

“பாம்பே பினோடைப் உள்ளவர்களுக்கு, ஓ (O) குழுவைப் போலவே, ஏ (A) மற்றும் பி (B) ஆன்டிஜன்கள் இருக்காது. ஆனால், ஓ (O) இரத்த வகையைக் கொண்டவர்களிடமிருந்து அவர்கள் ரத்தத்தைப் பெற முடியாது,” என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

அரிய ரத்த வகையான ‘பாம்பே’ ரத்த வகை என்பது, உலகில் ஒரு மில்லியன் மக்களில் ஒருவருக்கு மட்டுமே காணப்படுகிறது. ஆனால், மும்பையில் அதன் விகிதம், ஒவ்வொரு பத்தாயிரம் மக்களில் ஒருவருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவர் ஒய்.எம். பெண்டே மற்றும் மருத்துவர் எச்.எம். பாட்டியா ஆகியோரால் 1952 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரத்த வகை, இந்தியாவில் அதிக மக்களிடம் காணப்படுகிறது.

“கோலாரைச் சேர்ந்த பெண் நோயாளியின் விஷயத்திலும் இதே நிலைதான், அவர் யாரிடமிருந்தும் ரத்தம் எடுக்க முடியாது, ஆனால் அவர் மற்றவர்களுக்கு ரத்த தானம் செய்யலாம். பாம்பே ரத்தக் குழு உள்ளவர்கள் செய்வது போல,” என்கிறார் மருத்துவர் அங்கித் மாத்தூர்.

“பாம்பே மற்றும் குரோமர் ரத்த வகைகளில் கிரிப் (CRIB) ஆன்டிஜனைத் தவிர, ‘இந்திய ரத்த வகை அமைப்பு’ என்ற புதிய அமைப்பும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 1973-ஆம் ஆண்டு ICMR-NIIH (Indian Council of Medical Research – National Institute of Immunohaematology) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது” என மருத்துவர் ஸ்வாதி குல்கர்னி குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அரிய வகை ரத்தத்தை தானம் செய்பவர்கள்

அரிய ரத்த வகைகளை தானம் செய்பவர்களின் பட்டியலை தேசிய அளவில் தயாரிக்க, தேசிய ரத்த நோயியல் ஆய்வகம் (என்ஐஐஎச்) முயற்சி செய்கிறது, என்று கூறுகிறார் மருத்துவர் ஸ்வாதி குல்கர்னி.

இது, அரிதான ரத்த வகைகளைக் கொண்டு, தானம் செய்பவர்களின் தகவல்கள் ஒன்றிணைந்த ஒரு தரவுத்தளமாக இருக்கும். இதன் மூலம், அந்த ரத்தத்தை நோயாளிகளுக்கு முறையாகவும், விரைவாகவும் வழங்க முடியும்.

உடலில் பல்வேறு வகையான ஆன்டிபாடிகளை உருவாக்கி, பொருத்தமான இரத்த வகை தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்தப் பதிவு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

சிவப்பு இரத்த அணுக்களில் ‘அலோஇம்யூனைசேஷன்’ ஏற்படும் சூழ்நிலைகளிலும், எதிர்மறை ஆன்டிஜென்கள் தேவைப்படும் நேரங்களிலும், இந்த வகைப் பதிவேடு மிகவும் முக்கியமானதாகிறது.

ஏனெனில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அந்நிய மூலப்பொருளை எதிர்த்து போராட ஆன்டிபாடிகளை உருவாக்கும்.

தலசீமியா நோயாளிகளில், 8 முதல் 10 சதவீதம் வரை நோய்த்தடுப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

“பொது மக்களில், ரத்த மாற்றம் தேவைப்படும் நோயாளிகளில் ஆன்டிபாடிகள் உருவாகும் வாய்ப்பு சுமார் 1 முதல் 2 சதவீதம் வரை உள்ளது. ஆனால், அலோஇம்யூனைசேஷன் ஏற்படும் அளவும், ரத்த வகையில் ஆன்டிஜன்கள் உருவாகும் விகிதமும், வெவ்வேறு இனக்குழுக்களில் மாறுபடக்கூடும்” என்கிறார் மருத்துவர் ஸ்வாதி குல்கர்னி.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு