பதவி விலகினாா்  சி.வை.பி. ராம் – Global Tamil News

by ilankai

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கியஸ்தர்களில் ஒருவரான கலாநிதி சி.வை.பி. ராம் (Dr. C.Y.P. Ram) தனது பதவிகளைத் துறந்துள்ளாா்.  2026-ஆம் புத்தாண்டு தினமான நேற்று (ஜனவரி 1), அவர் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். கட்சியில் அவர் வகித்த வடகொழும்பு பிரதான அமைப்பாளர் பதவி , கட்சியின் உதவிச் செயலாளர் பதவி , ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் பதவி ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அவா் அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக “தனிப்பட்ட காரணங்கள்” என்று அவர் குறிப்பிட்டாலும், இதன் பின்னணியில் அவரது மகன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை இருப்பதாகக் கருதப்படுகிறது.   கொழும்பு மாநகர சபையில் (CMC) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக உள்ள சி.வை.பி ராமின் மகன் டானியல் ராம் அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட (Budget) வாக்கெடுப்பின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கட்சித் தலைமை அதனை எதிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்த போதும் ஆனால், டானியல் ராம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததினால் டானியல் ராமின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி இடைநிறுத்தியிருந்தது. தனது மகன் தவிர்க்க முடியாத காரணத்தால் வரவில்லை என்றும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை நியாயமற்றது என்றும் அதிருப்தி அடைந்த கலாநிதி ராம், தனது பதவிகளைத் துறக்க முடிவு செய்துள்ளார். கலாநிதி ராம் கட்சியின் நீண்டகால விசுவாசி என்பதாலும், வடகொழும்பில் பலமான செல்வாக்கு கொண்டவர் என்பதாலும், அவரது பதவிவிலகலை ஏற்றுக்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

Related Posts