Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழக கிராமங்களில் எந்தெந்த கடைகளுக்கு உரிமம் கட்டாயம்? எவ்வளவு கட்டணம்? புதிய சட்டம் அமல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பெட்டிக் கடைகள் உள்பட 119 தொழில்களுக்கு வணிக உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டத்தை சமீபத்தில் ஊரக வளர்ச்சித் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
‘புதிய சட்டத்தின்படி உரிமம் பெறுவது சாத்தியமற்றது. இது கிராமப்புற வணிகர்களை அழித்துவிடும்’ என, வணிகர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. இதே கருத்தை அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகளும் முன்வைத்துள்ளன.
வணிக உரிமம் பெறுவதில் என்ன சிக்கல்? புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? ஊரக தொழில்துறை அமைச்சர் கூறுவது என்ன?
புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னணி
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொழில்களை நடத்துவதற்கு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலம் உரிமம் வழங்கப்படுகின்றன. அதுபோலவே கிராமப் புறங்களிலும் ஊராட்சிகள் மூலம் உரிமம் வழங்கப்பட்டாலும் அங்குள்ள வணிகர்கள் அதனை வாங்குவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ‘தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் வழங்கும் விதிகள் 2025’ என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தச் சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், வணிக உரிமம் பெறும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
படக்குறிப்பு, அரசாணை வெளியிடப்பட்டு, வணிக உரிமம் பெறும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதுஎந்தெந்த கடைகளுக்கு உரிமம் கட்டாயம்?
இதில், தேநீர் கடைகள், தையல் கடைகள், பெட்டிக் கடைகள், இறைச்சி கடைகள், சலவைத் தொழில், செருப்பு கடைகள், சைக்கிள் கடைகள், பால் பொருள்கள், சலூன்கள், வேளாண் பொருள் விற்பனையகம், கேபிள் டி.வி, பேன்ஸி கடைகள், அழகு நிலையங்கள், நகைக்கடைகள், அரவை மில்கள், நாட்டு மருந்துகள், மீன் வளர்ப்பு மையங்கள் உள்பட 119 தொழில்களை தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.
இவற்றில் 5 லட்ச ரூபாய் வரையிலான தொழில்களுக்கு குறைந்தபட்ச உரிமக் கட்டணமாக 250 ரூபாயும் அதிகபட்சமாக 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்களின் முதலீட்டுக்கு ஏற்ப 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
‘ஊராட்சி நிர்வாக அலுவலரிடம் உரிமம் பெறாமல் கிராமங்களில் சலவைத் தொட்டியை திறப்பதற்கு அனுமதிக்கக் கூடாது; தனியார் குளியலறைகள், கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பிடங்களைத் திறக்கக் கூடாது’ என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஊராட்சி எல்லைக்குள் உரிய அனுமதியின்றி ஸ்பா, அழகு நிலையங்கள் செயல்படக் கூடாது எனவும் தனியார் இறைச்சிக் கூடங்களை நடத்தவோ பராமரிக்கவோ, விலங்குகளின் தோலை பதப்படுத்தவோ கூடாது எனவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக உரிமத்துக்கான கட்டணத்தை ஆண்டுதோறும் அல்லது 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிராம பஞ்சாயத்துகளுக்குச் செலுத்த வேண்டும் எனவும் புதிய சட்டம் கூறுகிறது.
அவ்வாறு உரிமம் பெற்றாலும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எந்தவொரு வளாகத்திலும் முன்னறிவிப்பின்றி நுழைந்து அதிகாரிகள் ஆய்வு செய்யவும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இல்லாமலோ அல்லது உரிமத்தின் நிபந்தனைகளுக்கு மாறாக செயல்படுவதாக நம்பினால் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் எனவும் இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரியின் (BDO) ஒப்புதல் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், A.M. Vikramaraja fb
படக்குறிப்பு, ஏ.எம்.விக்கிரம ராஜா: “வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல உள்நாட்டு தொழில்களுக்கும் அரசு வழங்க வேண்டும்”பாதுகாப்பு அம்சங்கள் பற்றி புதிய சட்டம் கூறுவது என்ன?
ஒவ்வொரு தொழில்களும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சான்று குறித்தும் புதிய சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
* தொழில் நடத்துவோர் குப்பைகளை பொருத்தமான இடத்தில் மூடப்பட்ட கலன்களில் கொட்ட வேண்டும். அவற்றை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை சுகாதாரமான முறையில் அகற்ற வேண்டும்.
* அரசால் தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் விற்பனை செய்யவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது.
* தீ தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிடம் இருந்து தேவையான சான்றிதழ் பெற வேண்டும்.
* வளாகத்தில் உள்ள கட்டடங்களில் எலிகள் மற்றும் பிற விலங்கினங்கள் இல்லாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை உரிமதாரர் பணியமர்த்தக் கூடாது.
* உணவகமாக இருந்தால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்படி பதிவு சான்றிதழ் அல்லது அல்லது உரிமம் பெற வேண்டும்.
கிராமப்புற கடைகளுக்கு பாதிப்பா?
“ஏராளமான கட்டுப்பாடுகளை புதிய சட்டத்தில் விதித்துள்ளனர். இதனால் தொழில் உரிமம் அனுமதி பெறுவதற்கு வணிகர்கள் செல்லும்போது லஞ்சம் பெருகவே வாய்ப்புகள் அதிகம். பலரும் உரிமங்களைப் பெறுவதற்குப் பயந்து கடையைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்” என்கிறார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா.
“ஆண்டுக்கு ஒருமுறை தொழில் வரியாக 210 ரூபாயும் கடை உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு ஆயிரம் ரூபாயும் செலுத்தி வருகிறேன். பத்துக்கு பத்து என்ற அளவிலான சிறிய மளிகைக்கடை இது. கட்டட உறுதிச் சான்று தருமாறு அதிகாரிகள் கேட்டால் அளிப்பது சிரமம்” எனக் கூறுகிறார், தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன்.
“சிறிய கடையாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 6 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தி வருகிறேன். ஏற்கெனவே ஒரு லட்ச ரூபாயை வட்டிக்கு வாங்கி கடையை நடத்தி வருகிறேன். கூடுதலாக கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்புடையதாக இல்லை” எனவும் பிபிசி தமிழிடம் சிவநேசன் குறிப்பிட்டார்.
“பெரிய வியாபாரிகளால் எளிதில் உரிமம் பெற முடியும். சிறிய வியாபாரிகளால் கட்டட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறை சான்று போன்றவற்றை பெறுவது கடினம்” எனக் கூறுகிறார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவா.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை உரிமக் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட அவர், “சிறிய கடை என்பதால் வேறு எந்த உரிமங்களும் பெறவில்லை” என்கிறார்.
உரிமம் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும்போது கடைகளின் எண்ணிக்கை குறையவே வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, மேட்டுப்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவா.”தொழிலை நடத்த முடியாது”
வணிக உரிமம் பெறுவதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியும், அந்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஏ.எம்.விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை உரிமக் கட்டணமாக வணிகர்கள் செலுத்தி வருவதாகக் கூறும் அவர், “தொழில் வரி, ஜி.எஸ்.டி, வருமான வரி ஆகியவற்றை செலுத்தி வணிகர்கள் செலுத்தி வருகின்றனர். புதிதாக தடையில்லாத சான்றுகளைப் பெற வேண்டும் என்றால் தொழிலை நடத்துவதே சிரமம்” எனவும் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் கொண்டு வந்துள்ள புதிய சட்டம் குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் செய்துள்ளார்.
‘மக்களை சந்திப்போம் தமிழகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் சிவகங்கையில் பிரசாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி “கிராமங்களில் சிறு கடைகளுக்கும் இனி லைசென்ஸ் பெற வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு உரிமம் பெறாத கடைகள் மூடப்பட உள்ளன” எனக் பேசினார்.
அரசின் இந்த உத்தரவால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் கூறுவது என்ன?
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் மற்றும் வணிகர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழ்நாடு ஊரக தொழில்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல தனது வழக்கமான அவதூறு பிரசாரத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.
கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெற வேண்டும் என்ற சட்டம் 1958 ஆம் ஆண்டே கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 159ன் படி அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான வர்த்தக உரிமம் (Dangerous and Offensive Trade Licence) என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது’ எனக் கூறியுள்ளார்.
‘அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருள் வர்த்தக உரிமம்’ என்ற பெயரை, ‘வணிகம் அல்லது தொழில் உரிம விதிகள்’ என மாற்றி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது’ எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உரிமக் கட்டணம் என்பது எப்போதும் உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் இருந்து வருகிறது. இன்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு வகையான நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஊராட்சிகளுக்கு வரி வருமானம் கிடைத்து வருகிறது’ என்கிறார்.
‘தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்தபோதும் முறையான விதிகள் (Rules) இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்களை நிர்ணயம் செய்து வசூலித்து வந்தன. இக்குறைகளை நீக்கும் வகையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடைமுறையின்படி, வணிக உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாக கருதப்படும் (Deemed Approval) என்ற சலுகையும் விண்ணப்பங்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்காமல் நிராகரிக்கக்க கூடாது என்ற நிபந்தனை உள்பட பல்வேறு நன்மைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வணிக உரிமத்தை எளிமைப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அளித்த கோரிக்கை மனுவை ஏற்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘அதன் அடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்’ எனக் கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு