உதகை, கொடைக்கானலில் ஹோம் ஸ்டே செயல்படுவது எப்படி? நீதிமன்றம் கடிவாளமிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அதிகரித்துவரும் சட்டவிரோத ‘ஹோம் ஸ்டே’ விடுதிகளைப் பற்றி தகவல் அளிக்க நீதிமன்ற உத்தரவுப்படி ‘ஹெல்ப்லைன்’ எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விடுதிகளால் முறைப்படி வரி செலுத்தி தொழில் செய்யும் ஓட்டல் நிர்வாகங்களுக்கு 50 சதவீதம் வரை வருவாய் இழப்பும், மறைமுகமாக அரசுக்கு வரியிழப்பும் ஏற்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் நடுத்தட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்குவதாக ‘ஹோம் ஸ்டே’ நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

காளான்களைப் போல அதிகரித்து வரும் இவற்றை வரன்முறைப்படுத்துவது அவசியமென்று நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர். என்ன நடக்கிறது?

ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உதகை, கொடைக்கானல் ஆகிய மலைவாசஸ்தலங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இவ்விரு மலைப்பகுதிகளுக்கும் வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் எவ்வளவு வாகனங்கள் வருகின்றன, இந்த நகரங்களில் எவ்வளவு தங்கும் விடுதிகள் உள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் உதவியுடன் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், எந்தெந்த நாட்களில் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்தும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இப்போதும் அதன் அடிப்படையில்தான் இந்த மாவட்ட நிர்வாகங்களால் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஹோம் ஸ்டேக்களை கட்டுப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், தற்போது ‘ஹோம் ஸ்டே’ வசதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதே வழக்கில், நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உரிய துறைகளிடமிருந்து முறையான அனுமதி மற்றும் உரிமங்களின்றி செயல்படும் சட்டவிரோத ‘ஹோம் ஸ்டே’ -க்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மூடவும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்விரு மாவட்டங்களிலும் ‘ஹோம் ஸ்டே’ விடுதிகளை கள ஆய்வு செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நகராட்சி அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ‘ஹோம் ஸ்டே’ விடுதிகள், உரிய கட்டட அனுமதி பெற்றுள்ளனவா, அனுமதியின்றி குடியிருப்பு கட்டடத்தை வணிகக் கட்டடமாக மாற்றியுள்ளனவா என்பதை குழு சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய அமர்வு, அதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் காலக்கெடு வழங்கியது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் (காட்டேஜ்/ஹோம் ஸ்டே/லாட்ஜ்கள்/ரிசார்ட்டுகள்) குறித்த புகார்களை 94427 72709 என்ற உதவி எண்ணிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250150 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) மூலமாகவும், 7598578000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் (புகைப்படம் மற்றும் வீடியோ) மூலமாகவும் பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் புகார் அளிக்கலாம் என்றும் இவ்விரு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஹோம் ஸ்டே’ விடுதிகள் இப்போது வணிகமயமான தொழிலாக மாற்றப்பட்டு விட்டதாக ஓட்டல்கள், ரிசார்ட்கள் நடத்துவோர் குற்றம்சாட்டுகின்றனர்.கடந்த 2022 ஆம் ஆண்டில்தான் தமிழக சுற்றுலாத்துறை சார்பில், படுக்கை மற்றும் காலை உணவு அளிக்கும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு உரிமம் வழங்குவதை அறிமுகம் செய்யப்பட்டு, அதற்குரிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி ‘ஹோம் ஸ்டே’ விடுதிகளை சுற்றுலாத்துறையில் பதிவு செய்வதற்கு இரு பிரிவுகளாகப் பிரித்து (ஸ்டாண்டர்ட், ப்ரீமியம்) ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

என்னென்ன சான்றுகளை எந்தெந்த துறைகளிடமிருந்து பெற வேண்டும், எவ்வளவு வசதிகள், ஆட்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் ‘ஹோம் ஸ்டே’ முதலில் எங்கே துவங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் முதன் முதலில் கோவாவில் இந்த ‘ஹோம் ஸ்டே’ திட்டம் துவங்கியதாக சுற்றுலாத் தொழில்துறையினர் கூறுகிறார்கள்.’ஹோம் ஸ்டே’ என்பதைப் பற்றி விளக்கிய சுற்றுலாத்துறை அலுவலர்கள், “ஒரு வீட்டில் 3 அல்லது 4 படுக்கை அறைகள் இருந்தால், 2 அறைகளில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பார்கள். மற்ற 2 அல்லது 3 அறைகளில் சுற்றுலாப்பயணிகளை தங்க வைத்து, அவர்களுக்கு வீட்டில் சமைக்கும் உணவைப் பகிர்வார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிப்பார்கள். அந்த குடும்பத்திற்கு இது ஒரு வருவாய் ஆதாரமாக இருக்கும். இது ஒரு குடிசைத்தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது” என்றனர்.

இந்தியாவில் முதன் முதலில் கோவாவில் இந்த ‘ஹோம் ஸ்டே’ விடுதிகள் துவங்கியதாகக் கூறும் சுற்றுலாத் தொழில்துறையினர், அதன்பின் கொச்சி, வயநாடு உள்ளிட்ட கேரளா பகுதிகளில் சிறப்பாக நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேரள மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் ஹோம் ஸ்டே தொழில் சிறப்பாக நடப்பதாகவும் சுற்றுலாத் துறையினர் விவரிக்கின்றனர்.இத்தகைய ‘ஹோம் ஸ்டே’ வசதிகள் இப்போது வணிகமயமான தொழிலாக மாற்றப்பட்டு விட்டதாக ஓட்டல்கள், ரிசார்ட்கள் நடத்துவோர் குற்றம்சாட்டியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் நாயர், ”இங்கே ‘ஹோம் ஸ்டே’க்களை மண்ணின் மைந்தர்கள் யாரும் குடும்பமாக நடத்துவதில்லை. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இங்கே இடம் வாங்கி வீடுக்கான அனுமதி வாங்கிக் கட்டி விட்டு, அதை குத்தகைக்குக் கொடுத்து விடுகின்றனர். அதை எடுப்பவர்கள், எவ்விதமான வரியும் செலுத்தாமல், வணிக ரீதியாக அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.” என்கிறார்.

ஒரு ஓட்டல் நடத்துவதாக இருந்தால் அதற்கு கட்டட அனுமதி பெறுவதற்கு இருக்கும் கஷ்டங்களை விளக்கும் சுரேஷ் நாயர், அவற்றுக்கு வணிக ரீதியான சொத்துவரி, வணிக ரீதியான மின் கட்டணம் செலுத்துவதுடன் ஆண்டுதோறும் பல லட்சங்களை ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியாகச் செலுத்துவதாகக் கூறுகிறார்.

”நீலகிரி மாவட்டத்தில் எவ்வித உரிமமும், அனுமதியும் இன்றி பல ஹோம் ஸ்டேக்கள் நடத்தப்படுகின்றன. இதனால் எங்களைப் போன்று வரி செலுத்திவரும் ஓட்டல் நிர்வாகங்களுக்கு 25 லிருந்து 40 சதவீதம் வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்கிறார் சுரேஷ் நாயர்.

கொடைக்கானலில் ஏராளமான சட்டவிரோத ஹோம் ஸ்டேக்கள் இருக்கலாம் என்று கூறும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் கோபி, முன்பு நகருக்குள் மட்டும் இயங்கிய இவை, தற்போது மன்னவனுார், பூம்பாறை என பல பகுதிகளிலும் புற்றீசல்களாக முளைத்து விட்டதாகத் தெரிவிக்கிறார்.

இத்தகைய அனுமதியற்ற ‘ஹோம் ஸ்டே’க்களில் தங்குவோர் குறித்து, காவல்துறைக்கு முறையான தகவல் தெரிவிப்பதில்லை என்று குற்றம்சாட்டும் ஓட்டல் உரிமையாளர்கள், ஓட்டல்களில் இதற்காக சி பார்ம் என்பது பராமரிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Suresh

படக்குறிப்பு, “‘ஹோம் ஸ்டே’க்களை மண்ணின் மைந்தர்கள் யாரும் குடும்பமாக நடத்துவதில்லை” என்கிறார் நீலகிரி ஒட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் நாயர்.7 விதமான விவரங்களை சமர்ப்பிக்க ஹோம் ஸ்டேக்களுக்கு நோட்டீஸ்

தற்போது நீதிமன்ற உத்தரவுக்குப்பின், உதகை மற்றும் கொடைக்கானலில் ஹோம் ஸ்டேக்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை கொடுத்த உரிமம் வைத்துள்ளவர்களிடமும், கட்டட அனுமதி, தொழில் வரி ரசீது, வணிக சொத்து வரி ரசீது, வணிக மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, கட்டட ஸ்திரத்தன்மை சான்று, கட்டடத்தின் வரைபடம், கட்டட ஸ்திரத்தன்மை சான்று, சுகாதாரச்சான்று போன்றவை பெறப்படுகின்றன.

குடியிருப்பாக கட்டட அனுமதி வாங்கி, வணிகக் கட்டடமாக மாற்றப்பட்டதற்கு நகராட்சி வழங்கும் படிவம் (படிவம்-டி) கேட்கப்படுகிறது. உதகையில் ஆயிரக்கணக்கான ஹோம் ஸ்டேக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

படிவம்–டி இருக்கும்பட்சத்தில் அனைத்து சான்றுகளும் இருப்பதாகக் கருதப்பட்டு, அந்த ஹோம் ஸ்டே, முறையான அனுமதியுடன் இயங்குவதாக பட்டியலிடப்படுவதாக சுற்றுலாத்துறை அலுவலர்கள் விளக்குகின்றனர். அனுமதியற்ற ஹோம் ஸ்டேக்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை இருக்கும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹோம் ஸ்டே நடத்துவோர் கூறுவது என்ன?

ஆனால் உதகையில் முறைப்படி ஹோம் ஸ்டே நடத்துவோர் கணிசமாக இருப்பதாகக் கூறுகிறார் கார்த்திக். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோம் ஸ்டே நடத்தி வரும் அவர், உதகை போன்ற சர்வதேச சுற்றுலா நகரங்களில் மண்ணின் மைந்தர்களுக்கு சுற்றுலாத் தொழில்தான் வாழ்வாதாரமாக விளங்குவதால், இதை முறைப்படி நடத்த அனுமதிப்பது அவசியம் என்கிறார்.

எளிய, நடுத்தட்டு சுற்றுலாப் பயணிகள் இவற்றால் அதிகளவில் பலனடைவார்கள் என்பது அவர் உட்பட ஹோம் ஸ்டே நடத்தும் பலரின் கருத்தாகவுள்ளது.

பெயர் கூற விரும்பாத ஹோம் ஸ்டே நடத்தும் ஒருவர், ”சீசன் காலங்களில் தமிழ்நாடு ஓட்டல், யூத் ஹாஸ்டல், வனத்துறை விடுதிகள் உட்பட அனைத்து தனியார் ஓட்டல்கள், விடுதிகளிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுவார்கள். சீசனில் மக்களுக்கு அறையும் கிடைக்காது. செலவிடவும் முடியாது. சொந்த ஊர் திரும்பவும் முடியாது. அந்த நேரங்களில் 500, 600 ரூபாய் என்று அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு, அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுப்பதற்கு ஹோம் ஸ்டேக்கள்தான் உதவுகின்றன.” என்கிறார்.

இத்தகைய ஹோம் ஸ்டேக்களுக்கு, பொதுவான மொபைல் செயலிகளில் தான் பதிவுகள் நடக்கின்றன என்று கூறும் ஹோம் ஸ்டே நிர்வாகிகள், எல்லா இடங்களிலும் உணவு கொடுப்பது சாத்தியமாக இருப்பதில்லை என்கின்றனர்.

பட மூலாதாரம், Manokaran

படக்குறிப்பு, ஹோம் ஸ்டேக்களால், காலங்காலமாக அங்கு குடியிருக்கும் மக்களின் பலவிதமான உரிமைகளும் நிம்மதியும் பறிபோவதாக வருந்துகிறார் குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தலைவர் மனோகரன்.”ஓட்டல் – ஹோம் ஸ்டே இரண்டையும் ஒப்பிடுவதே தவறு ”

பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் செயலாளர் சலீம் பாஷாவிடம் வாடகை குறைவு, நிறைவான சேவை இருப்பதால்தான் ஹோம் ஸ்டேக்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாகக் கூறப்படுவது பற்றி கேட்டபோது, ”ஒரு ஓட்டல் கட்டுவதற்கு முறைப்படி கட்டட அனுமதி வாங்கப்படுகிறது. முறையாக அரசுக்கு பலவிதமான வரி செலுத்தப்படுகிறது. பலருக்கு வேலை வாய்ப்பு தரப்படுகிறது. தங்குவோர்க்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் கணக்கிட்டே வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. அதையும் இதையும் ஒப்பிடுவதே தவறு.” என்கிறார்.

ஹோம் ஸ்டேக்கள் பற்றி விமர்சனம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டத்து வீடு என்ற பெயரில் வெளியாட்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே கட்டும் கட்டடங்களுக்கு அனுமதி வாரி வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகிறார் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார்.

”நீலகிரி மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் வீடுகள் கட்ட அனுமதி கோரிய 8 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் கிடக்கின்றன. ஆனால் அரை ஏக்கர், ஒரு ஏக்கரில் தோட்டத்து வீடுகள் தொடர்ந்து கட்டப்படுகின்றன. ஒரு கட்டடத்துக்கு இங்கு 11 துறைகளில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்கு பணம் கொடுக்க எளிய மனிதர்களால் முடியவில்லை. ” என்கிறார் வினோத் குமார்.

சமீப காலமாக குடியிருப்புகளுக்கு நடுவில் அதிகரித்து வரும் ஹோம் ஸ்டேக்களால், காலம் காலமாக அங்கு குடியிருக்கும் மக்களின் பலவிதமான உரிமைகளும் நிம்மதியும் பறிபோவதாக வருந்துகிறார் குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தலைவர் மனோகரன்.

பிபிசி தமிழிடம் பேசிய மனோகரன், ”வீடுகளுக்கு மத்தியிலுள்ள ஹோம் ஸ்டேக்களில் விடியவிடிய பாட்டுப் போட்டு சத்தம் போட்டு மக்கள் துாக்கத்தைக் கெடுக்கின்றனர். வாகனங்களை சாலைகளில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். நாளுக்கு நாள் இந்த பிரச்னை பெரிதாகி வருகிறது.” என்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தமிழக சுற்றுலாத்துறை பதில் என்ன?

சட்டவிரோத ஹோம் ஸ்டேக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்கா தேவி, ”நீலகிரியில் சுற்றுலாத்துறை சார்பில் 575 ஹோம் ஸ்டேக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கால் கடந்த 2 ஆண்டுகளாக அதுவும் தரப்படுவதில்லை. தற்போது சட்டவிரோத ஹோம் ஸ்டே பற்றி தகவல் தர ஹெல்ப்லைன் தரப்பட்ட பின், நிறைய தகவல்கள் வருகின்றன. மொத்தமாகக் கணக்கு எடுக்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு