Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது.
என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம்.
ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும்.
இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது.
காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள்.
இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள்.
ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது.
தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர்.
அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள்.
தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள்.
மன்மதன் : நான் அலரி மலர்
கணைதொடுப்பனடி – என்
ரதியே மானே ரதியே தேனே
சிவன் தவசை
நான் அழிப்பனடி.
ரதி : அலரி மலர் கணை தொடுத்து
மன்னா மன்னா
சிவன் தபசை நீயழிக்க
வேணா வேணா..
ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார்.
பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும்.
இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை.
சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் .
இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது.
பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது.
கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது.
இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது.
காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை.
காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது.
இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
கிரிஜா மானுஶ்ரீ
கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கை