Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அதிரடி டக்கெட்டை ‘அன்புடன்’ வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா – இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆட்டமிழந்த டக்கெட்டின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது.எழுதியவர், தினேஷ் குமார்.எஸ்பதவி, பிபிசி தமிழுக்காக2 ஆகஸ்ட் 2025, 02:06 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா – இங்கிலாந்து இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடுகளையும் கடந்து புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் முதல் நான்கு டெஸ்ட்களும் தட்டையான ஆடுகளங்களில் தான் நடந்தன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தில் தாறுமாறாக பந்துவீசிய டங், ஒரு அபாரமான பந்தின் மூலம் கருண் நாயர் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு சீட்டுக்கட்டு போல, இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
வாஷிங்டன் சுந்தரை சரியாக குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் மூலம் கைப்பற்றிய அட்கின்சன், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரையும் ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த தொடரின் மற்ற போட்டிகளில் தடுமாறிய கருண் நாயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.கடும் நெருக்கடியில் இருந்தபோது நன்றாக விளையாடியவர், அரைசதம் அடித்த திருப்தியில் கவனத்தை தொலைத்துவிட்டாரோ என்று தோன்றும் விதமாக அவர் ஆட்டமிழந்த விதம் அமைந்தது. என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுந்தர் ஆட்டமிழந்த பந்து, அவருடைய திறமைக்கு பொருத்தமான ஒன்றல்ல. இரண்டாம் நாளில் இன்னிங்ஸ் தொடங்கி, வெறுமனே 34 பந்துகளில் இந்திய ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கிய போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவான ஒன்றாக மாறியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிராலி–டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் அடித்து விளையாடினார்கள். கிராலி வழக்கம் போல கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆஃப் டிரைவ் என பாரம்பரிய முறையில் ரன்கள் குவிக்க மறுபுறம் டக்கெட் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என விளையாடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
குறிப்பாக ஆகாஷ் தீப்–டக்கெட் இடையிலான சமர், ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. டியூக்ஸ் பந்து, முதல் 12–15 ஓவர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதால் சிராஜுக்கு தொடக்கத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்த டக்கெட், அபாயகரமான ஷாட் ஒன்றை ஆட முற்பட்டு, ஆகாஷ் தீப் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறதுஆட்டமிழந்து சென்று கொண்டிருந்த டக்கெட் தோள் மீது கைபோட்டு ஆகாஷ் தீப் நடந்துகொண்ட விதம் பேசப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஆகாஷ் தீப் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததுடன் டக்கெட் காட்டிய நிதானத்தை பாராட்டவும் செய்துள்ளனர். இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சிராஜ்–ஆகாஷ் தீப் இருவரும் ரன்களை வாரி இறைத்ததால், கொண்டுவரப்பட்ட பிரசித் கிருஷ்ணா, தொடக்கத்தில் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார்.
ஜெஃப்ரி பாய்காட் அடிக்கடி உச்சரிக்கும் “The corridor of uncertainty” என்று சொல்லக்கூடிய லெங்த்தில் வீசினார். புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கிராலியின் விக்கெட்டை கிருஷ்ணா கைப்பற்றிய பிறகு, ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது.
கிராலி விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஓரளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போப், சிராஜின் தவிர்க்க முடியாத உள்ளே வரும் பந்தில் (Nip backer) எல்,பி.டபிள்யூ ஆகினார். பிரசித் கிருஷ்ணா உடனான வாய்த் தகராறால், வழக்கத்துக்கு மாறாக களத்தில் ஆக்ரோஷத்தை காட்டிய ரூட், அதனாலேயே கவனத்தை தொலைத்து சிராஜ் பந்துக்கு ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார்.முதல் இரு டெஸ்ட்களில் தாறுமாறாக வீசியதால், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்கிற தாகம், அவருடைய பந்துவீச்சில் தெரிந்தது. பெத்தேல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்ற, கடைசிக்கட்ட விக்கெட்டுகள் அனைத்தையும் பிரசித் கிருஷ்ணா சடசடவென கைப்பற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மழை குறுக்கீடு அடிக்கடி இருந்ததால், அதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் களைப்பின்றி பந்துவீசினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், நட்சத்திர வீரர் புரூக் ஒருபக்கம் அடித்து விளையாடினார். அதிர்ஷ்டமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி அவரும் சிராஜ் பந்துக்கு ஸ்டம்புகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசி 9 விக்கெட்களை 155 ரன்களுக்கு இழந்தது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர்.
காயம் காரணமாக வோக்ஸ் பந்துவீச முடியாத சூழலில், டங் புதிய பந்தை கையிலெடுத்தார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு சவால் அளிக்கும் விதமாக, அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போல சிக்ஸர்களும் பவுண்டரியுமாக விளாசி, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அபாரமாக வீசப்பட்ட சில பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தொடரின் ஆரம்பத்தில் தென்பட்ட கவனமும் உற்சாகமும் இப்போது ராகுலின் ஆட்டத்தில் குறைவாகத் தெரிகிறது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் கைகோர்த்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பையும் கிராலி தவறவிட்டபோதும், அந்த வாய்ப்பை சுதர்சன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
ஆட்டம் முடிவதற்கு சில பந்துகள் இருந்த நிலையில், அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரியக்கூடாது என்ற முன்னெச்சரிகையில் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
இன்று சூரியன் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி வலுவான நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வோக்ஸ் இல்லாததால், 3 வேகப் வீச்சாளர்களின் ஸ்பெல் முடிந்தவுடன் எப்படியும் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிதான் இங்கிலாந்து கேப்டன் போப் சென்றாக வேண்டும்.
ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்தின் பந்துவீச்சில் தென்படும் பலவீனத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார முன்னிலை பெற்று இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். நேற்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இப்படியாக ஓவல் டெஸ்டில் இரண்டாவது நாளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு