Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒரு எழுத்தர் ‘சென்னை நிகழ்வால்’ ராணுவ வீரனாகி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலிய சாகச வரலாறு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராபர்ட் கிளைவ் ஒரு டீனேஜராக இருந்த போது மிகவும் குறும்புக்காரராகவும் வன்முறையை விரும்புவராகவும் இருந்தார்.எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி21 நிமிடங்களுக்கு முன்னர்
குழந்தைப் பருவத்திலிருந்தே, ராபர்ட் கிளைவின் பிம்பம் ஒரு குறும்புக்கார மற்றும் வன்முறையான குழந்தையாக இருந்தது. ஏழு வயதிற்குள், அவர் சண்டையிடுவதற்கு அடிமையாகிவிட்டார். பணிவு, தாராள மனப்பான்மை மற்றும் பொறுமை போன்ற சில குணங்களுக்கும் கிளைவுக்கும், அவரது வாழ்நாள் முழுவதும் எந்த தொடர்பும் இல்லை என்றே கூறலாம்.
பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் ஃபாரஸ்ட் தனது ‘தி லைஃப் ஆஃப் லார்ட் கிளைவ்’ என்ற புத்தகத்தில், “கிளைவ் டீனேஜ் பருவத்தை எட்டும்போது, அவர் ஒரு வகையான இளம் குற்றவாளியாகவே மாறிவிட்டார்.” என்று எழுதியுள்ளார்.
“தனது கிராமத்தில் பிரச்னைகளை சந்திக்கும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு கும்பலை வழிநடத்தி வந்தார். அவருக்குக் கீழ்ப்படியாத வியாபாரிகளின் கடைகளில் தண்ணீரைப் பாய்ச்சி சேதப்படுத்துவது அவரது பொழுதுபோக்காகும்.”
கிளைவ் 17 வயதை எட்டும்போது, அவரது தந்தை ரிச்சர்ட் கிளைவ், அவரைக் கட்டுப்படுத்துவது தனது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்தார்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநருடன் பரிச்சயம் இருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அவரது பரிந்துரையின் பேரில், ராபர்ட் டிசம்பர் 15, 1742 அன்று முதல் முறையாக கிழக்கிந்திய கம்பெனி அலுவலகத்திற்குச் சென்றார், அங்கு அவர் ஒரு எழுத்தராக அதாவது கிளர்க்-ஆக நியமிக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் ஒரு கப்பலில் இந்தியா நோக்கி பயணித்தார்.
பட மூலாதாரம், BLOOMSBURY
படக்குறிப்பு, இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை நிறுவியவர் ராபர்ட் கிளைவ்.தொடக்கம் முதலே இந்தியா மீது இருந்த எரிச்சல்
இந்தியா பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. வழியில், அவர் கப்பலில் இருந்து கடலில் விழுந்து மயிரிழையில் தப்பினார். தற்செயலாக, ஒரு மாலுமி அவரைக் கவனித்து, நீரில் மூழ்காமல் காப்பாற்றினார்.
மெட்ராஸை (இன்றைய சென்னை) அடைந்த பிறகு, கிளைவ் தனிமையான மற்றும் சலிப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கினார். சில சமயங்களில் அவர் தனது தோழர்களுடன் சண்டையிடுவார்.
ஒருமுறை அவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் செயலாளரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இதனால் ஆளுநர் அவரைப் பொதுவில் மன்னிப்பு கேட்கச் சொன்னார்.
வில்லியம் டால்ரிம்பிள் தனது ‘தி அனார்க்கி’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “கிளைவ் வெகு சீக்கிரமாக இந்தியாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார், அவரது வாழ்நாள் முழுவதும் அந்த வெறுப்பு குறையவில்லை.”
“இந்தியாவில் ஒரு வருடம் கழித்த பிறகு, தனது வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். தாய்நாட்டை விட்டு வெளியேறியதிலிருந்து ஒரு நாள் கூட தான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டார்”
“அவர் பெரும் மனச்சோர்வில் இருந்தார், ஒரு முறை தற்கொலைக்கு கூட முயன்றார்.”
பட மூலாதாரம், BLOOMSBURY
படக்குறிப்பு, வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய ‘தி அனார்க்கி”எந்த இந்திய மொழியையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை’
கீத் ஃபீலிங் தனது ‘வாரன் ஹேஸ்டிங்ஸ்’ புத்தகத்தில், “கிளைவ் ஒருபோதும் இந்தியாவின் மீது ஆர்வம் காட்டியதில்லை. அதன் அழகால் அவர் ஒருபோதும் ஈர்க்கப்படவில்லை. அதன் வரலாறு, மதங்கள் மற்றும் பண்டைய நாகரிகம் பற்றி அறியும் விருப்பமும் அவருக்கு இல்லை. இங்குள்ள மக்களைப் பற்றி அவருக்கு எந்த ஆர்வமும் இல்லை. அவர் இந்திய மக்களை ஏளனமாகப் பார்த்தார்.” என்று எழுதியுள்ளார்.
ஆனால் கிளைவ் தொடக்கத்திலிருந்தே எதிராளியின் திறன்களை அளவிடும் திறனையும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறனையும் கொண்டிருந்தார்.
விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிந்து செய்யும் குணமும் அவரிடம் இருந்தது. 1746இல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையை தாக்கி வென்றபோது, அவரது இந்தக் குணம் வெளிப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆற்காடு முற்றுகைக்குப் பிறகு ராபர்ட் கிளைவ் முக்கியத்துவம் பெற்றார்.லெப்டினன்ட் பதவியைப் பெற்ற கிளைவ்
பிரெஞ்சு ஜெனரல் தூப்ளே மெட்ராஸைக் கைப்பற்றியபோது கிளைவ் அங்கே இருந்தார். இரவில் நகரத்திலிருந்து பதுங்கிச் சென்று, பிரெஞ்சு வீரர்களிடம் சிக்காமல் நடந்தே சென்று கோரமண்டல் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய பிரிட்டிஷ் தளமான ஃபோர்ட் செயிண்ட் டேவிஸை அடைந்தார்.
இங்கு ‘ஓல்ட் காக்’ என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் என்பவர் கிளைவுக்கு சண்டையிட பயிற்சி அளித்தார். கிளைவின் திறமையை முதலில் அங்கீகரித்தவர் லாரன்ஸ் தான்.
1740களில், தூப்ளே நவாப்களுக்கு சேவை செய்ய தனது படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். கிளைவ் தனது ராணுவத் திறமையால் லெப்டினன்ட் பதவிக்கு உயர்ந்தார். அதே நேரத்தில், லாரன்ஸ் மற்றும் கிளைவ் ஆகியோர் பிரெஞ்சு வீரர்களின் பாணியைப் பின்பற்றி தங்கள் படைகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்.
ஆரம்பத்தில், கிழக்கிந்திய கம்பெனியிடம் சில நூறு வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் சரியான சீருடைகள் கூட இல்லை. 1750களின் நடுப்பகுதியில் தனது தந்தைக்கு அனுப்பிய கடிதத்தில், கிளைவ் பின்வருமாறு எழுதினார், ‘அந்த நாட்களில் நாங்கள் போர்க் கலையில் கத்துக்குட்டிகளாக இருந்தோம்’.
1751 ஆகஸ்ட் 26 அன்று கர்நாடக நவாப்பின் தலைநகரான ஆற்காட்டை முற்றுகையிலிருந்து விடுவிக்க, பலத்த மழைக்கு மத்தியில், 200 பிரிட்டிஷ் மற்றும் 300 இந்திய வீரர்களைக் கொண்ட படையுடன் அணிவகுத்துச் சென்றார் கிளைவ். அப்போதுதான் அவர் முதன்முதலில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
சர் பாண்ட்ரல் மூன் தனது ‘தி பிரிட்டிஷ் கான்க்வெஸ்ட் அண்ட் டாமினியன் ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தில், “ஒரு புயலின் போது, தாக்குதல் நடத்தி பிரெஞ்சு வீரர்களையும் அவர்களது சகாக்களையும் ஆச்சரியப்படுத்தினார் கிளைவ். இந்த வெற்றி, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஒரு வெற்றிகரமான ராணுவ படையெடுப்பை நடத்த முடியும் என்ற தோற்றத்தை முதல் முறையாக அளித்தது. நிறுவனத்தின் நம்பிக்கையை அதிகரிப்பதில் இந்த வெற்றி பெரிதும் பங்களித்தது. ஒரு ராணுவ வீரராக, வேகம் மற்றும் விவேகத்தைப் பயன்படுத்துவது அவருக்கு மிகவும் பிடித்த உத்தி.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரெஞ்சு ஜெனரல் தூப்ளேசரணடைந்த பிரெஞ்சு தளபதி
1752ஆம் ஆண்டு மெட்ராஸ் மீதான தாக்குதலை முறியடித்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் கிளைவ். அவரும் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸும் நவாப் முகமது அலியை தோற்கடித்து ஆற்காடு மற்றும் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றினர். 1752 ஜூன் 13 அன்று பிரெஞ்சு தளபதி, கிளைவிடம் சரணடைந்தார்.
மொத்தத்தில், கிளைவ் 85 பிரெஞ்சு வீரர்களையும் 2000 இந்திய வீரர்களையும் சிறைபிடித்தார்.
சர் பாண்ட்ரல் மூன், “இந்த வெற்றி தூப்ளேவின் லட்சியங்களுக்கு கடுமையான அடியைக் கொடுத்தது. செய்தியைக் கேட்டதும் அவரால் தனது உணவைக் கூட உண்ண முடியவில்லை.”
“சில நாட்களுக்குப் பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவமானத்துடன் பிரான்சுக்குத் திரும்பினார். மறுபுறம், கிளைவ் மெட்ராஸில் ஒரு ஹீரோவாக வரவேற்கப்பட்டார்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ராபர்ட் கிளைவ் தலைமையில் நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கு எதிராகப் போர் அறிவிக்கப்பட்டது.லெப்டினன்ட் கர்னல் பதவியில் கிளைவ்
இந்த வெற்றிக்காக, கிளைவுக்கு குவாட்டர்-மாஸ்டர் பதவி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், 40 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதியும் வழங்கப்பட்டது.
மார்ச் 23, 1753 அன்று, கிளைவ் மற்றும் அவரது மனைவி ‘பாம்பே கேஸில்’ என்ற கப்பலில் பிரிட்டனுக்குப் பயணம் செய்தனர். லண்டனை அடைந்ததும், அவர் உடனடியாக குடும்பத்தின் கடன்களை அடைத்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் முயற்சி செய்தார், ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை வெற்றி பெறவில்லை.
பிரெஞ்சு தாக்குதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, அவர் மீண்டும் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார். இந்த முறை கிளைவுக்கு மெட்ராஸின் துணை ஆளுநர் பதவியும், ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவியும் வழங்கப்பட்டது.
1756ஆம் ஆண்டு வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவில் உள்ள ஃபோர்ட் வில்லியமைக் கைப்பற்றியபோது, அந்தச் செய்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னைக்கு எட்டியது.
அதே நேரத்தில், ராபர்ட் கிளைவ் அட்மிரல் வாட்சனின் கப்பல்களுடன் கோரமண்டல் கடற்கரையிலிருந்து வந்தார். அவர்கள் ஒரு பிரெஞ்சு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர், ஆனால் கிளைவ் வங்காளத்தில் கம்பெனிக்கு விடுக்கப்பட்ட சவாலை எதிர்கொள்வது மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
இரண்டு மாத ஆயுத்தப் பணிகளுக்குப் பிறகு, 785 பிரிட்டிஷ் வீரர்கள், 940 இந்திய வீரர்கள் மற்றும் 300 மாலுமிகள் கல்கத்தாவுக்கு கடல் வழியாகப் புறப்பட்டனர்.
இந்தக் கடற்படையின் முதல் கப்பல் டிசம்பர் 9 ஆம் தேதி கல்கத்தாவை அடைந்தது. அதற்குள் கிளைவின் வீரர்களில் பாதி பேர் நோய்களால் இறந்துவிட்டனர். ஜனவரி 3 ஆம் தேதி கிளைவ் சிராஜ்-உத்-தௌலாவுக்கு எதிராகப் போரை அறிவித்தார்.
கிழக்கிந்திய கம்பெனி ஒரு இந்திய மன்னருக்கு எதிராக முறையாகப் போரை அறிவித்தது அதுவே முதல் முறையாகும். அவர்கள் முதலில் ஹூக்ளி மலைத்தொடர்களைக் கொள்ளையடித்து, பின்னர் வில்லியம் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றினர். சிராஜ்-உத்-தௌலா தனது அமைதித் தூதரை கிளைவிற்கு அனுப்பினார்.
பிப்ரவரி 9 அன்று, அலிநகர் ஒப்பந்தம் கையெழுத்தானது, இது நிறுவனத்தின் பழைய உரிமைகளை மீட்டெடுத்தது. மறுநாள் சிராஜ்-உத்-தௌலா முர்ஷிதாபாத்திற்குத் திரும்பினார். ஆனால் ஜூன் 13 அன்று கிளைவ், சிராஜ்-உத்-தௌலாவுக்கு ஒரு கடிதம் எழுதி, அவர் அலிநகர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறத் தொடங்கிவிட்டதாக எச்சரித்தார்.
அதே நாளில், கிளைவ் 800 பிரிட்டிஷ் மற்றும் 2,200 தென்னிந்திய துருப்புகளுடன் பிளாசியை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முர்ஷிதாபாத் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஓவியம்பிளாசி போர்
1757 ஜூன் 23 அன்று காலை 8 மணிக்கு, பிளாசி போரில் முதல் குண்டு வீசப்பட்டது. பிளாசி முர்ஷிதாபாத்திற்கு தெற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த குண்டு சிராஜின் துருப்புகளால் வீசப்பட்டது. கிளைவ் இதைக் கண்டு சற்று ஆச்சரியப்பட்டார், காரணம் சிராஜின் துருப்புகளிடம் பீரங்கிகள் இல்லை என்று உளவாளிகள் கிளைவிடம் தெரிவித்திருந்தனர்.
தொடக்கத்தில் இழப்புகளைச் சந்தித்த பிறகு, கிளைவ் தனது படைகளை சிறிது சிறிதாக பின்வாங்கச் செய்தார். நண்பகலில், வானம் மேகமூட்டமாக மாறியது, மின்னல் மின்னத் தொடங்கியது, போர்க்களத்தில் ஒரு பெரிய புயல் வீசியது. சிறிது நேரத்தில், வறண்ட நிலம் சேறு நிரம்பியதாக மாறியது.
வில்லியம் டால்ரிம்பிள் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “கம்பெனியின் வீரர்கள் தங்கள் துப்பாக்கி வெடிமருந்தையும் (Gun powder) பீரங்கிகளையும் மழையிலிருந்து பாதுகாக்க தார்பாய்களைப் பரப்பினர். மழை தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள், சிராஜின் அனைத்து பீரங்கிகளும் நனைந்து, அமைதியாகிவிட்டன. கம்பெனியின் பீரங்கிகளும் செயலிழந்திருக்கும் என்று நினைத்து, நவாபின் தளபதி மிர் மதன் தனது வீரர்களை முன்னோக்கி நகர உத்தரவிட்டார்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிளாசி போரில் கிளைவ்இந்தப் போரை மேலும் விவரிக்கும் குலாம் உசேன் கான் தனது ‘சாய்ர் முத்தக்ரீன்’ என்ற புத்தகத்தில், “பீரங்கி குண்டுகளைச் சுடுவதில் பிரிட்டிஷ் வீரர்களுக்கு நிகர் யாருமில்லை. அவர்களிடம் ஒழுக்கமும் வேகமும் இருந்தது” என்று எழுதியுள்ளார்.
“அவர்கள் தோட்டாக்களையும், ஷெல் குண்டுகளையும் கடுமையாகப் பொழிந்ததால், சிராஜின் வீரர்கள் அங்கேயே நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பீரங்கிகளின் சத்தத்தால் அவர்களின் காதுகள் கிழிந்தன. தோட்டாக்களால் உருவான ஒளியால் அவர்களின் கண்கள் கூசின.”
சிராஜின் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட வீரர்களில் சிராஜின் ராணுவத் தளபதி மிர் மதனும் ஒருவர். அவர் தனது வீரர்களை முன்னோக்கி நகர ஊக்குவித்துக் கொண்டிருந்தபோது, அவரது வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டதும், சிராஜ்-உத்-தௌலாவின் படையில் விரக்தி பரவியது.
அவர்கள் மீர் மதனின் உடலை சுமந்துகொண்டு கூடாரங்களுக்குள் நுழைந்தனர். மதியத்திற்குள் அவர்கள் கூடாரங்களை விட்டு வெளியேறி அங்கிருந்து ஓடத் தொடங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிளாசி போரில் பிரிட்டிஷ் படையை ராபர்ட் கிளைவ் வழிநடத்தினார்.சிராஜைத் துரத்திய கிளைவ்
அதே நேரத்தில், கிளைவின் துணை மேஜர் கில்பாட்ரிக் முன்னேறி, சிராஜின் வீரர்கள் விட்டுச்சென்ற நிலைகளைக் கைப்பற்றத் தொடங்கினார்.
ஆனால், உத்தரவுகள் இல்லாமல் மேற்கொண்டு தொடர கில்பாட்ரிக்கைத் கிளைவ் அனுமதிக்கவில்லை.
கிளைவ் இதைப் பற்றி அறிந்ததும், ‘உத்தரவுகளை மீறியதற்காக கில்பாட்ரிக்கை கைது செய்யப் போவதாக’ கோபமாக ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் கட்டளைகளை மீறுவது தொடர்பான கில்பாட்ரிக்கின் பிடிவாதமே கிளைவுக்கு வெற்றியைக் கொடுத்தது.
சிராஜின் படை போர்க்களத்தை விட்டு வெளியேறியது. ஆரம்பத்தில் அவர்கள் பின்வாங்குவது போல் தோன்றியது, ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு நெரிசல் ஏற்பட்டது.
தனது முதற்கட்ட அறிக்கையில் கிளைவ் பின்வருமாறு எழுதியுள்ளார், “நாங்கள் எதிரியை ஆறு மைல்கள் துரத்தினோம். அவர்கள் 40 பீரங்கிகளை விட்டுச் சென்றனர். சிராஜ்-உத்-தௌலா ஒட்டகத்தில் தப்பித்து மறுநாள் காலை முர்ஷிதாபாத்தை அடைந்தார்.” இந்த அறிக்கை, தேசிய ஆவணக் காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
பிளாசியில் வெற்றி பெற்றதன் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஒரு பெரிய ராணுவ சக்தியாக உருவெடுத்து, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிளாசி போர்க்களத்திலிருந்து சிராஜ்-உத்-தௌலா பின்வாங்குவதை சித்தரிக்கும் ஓவியம்ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரராக மாறிய கிளைவ்
கிளைவ் 1757 ஜூன் 27 அன்று முர்ஷிதாபாத்திற்குள் நுழையவிருந்தார், ஆனால் அவர் அங்கே படுகொலை செய்யப்படலாம் என்று ஜகத் சேத் அவரை எச்சரித்தார், எனவே கிளைவ் ஜூன் 29 அன்று தான் அங்கு வந்தார்.
சர் பாண்ட்ரல் மூன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “கிளைவ் மிர் ஜாபரை அரியணையில் அமர்த்தினார். நிறுவனம் அவரது நிர்வாகத்தில் தலையிடாது என்றும் வணிகத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் கிளைவ் பகிரங்கமாகக் கூறினார்.”
முர்ஷிதாபாத் கருவூலத்தில் 1.5 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது, அது கிளைவ் எதிர்பார்த்ததை விடக் குறைவு.
வில்லியம் டால்ரிம்பிள், “இந்தப் படையெடுப்பில் கிளைவ் தனிப்பட்ட முறையில் 2 லட்சத்து 34 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதியைப் பெற்றார். இது தவிர, அவருக்கு ஆண்டுதோறும் 27 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டும் ஒரு ஜாகிர் (Jagir- ஒரு நிலப் பகுதி) வழங்கப்பட்டது. 33 வயதில், கிளைவ் ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரரானார்.” என்று எழுதியுள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கிளைவ் பிரிட்டன் வந்தபோது, அவர் ஒரு ஹீரோவைப் போல வரவேற்கப்பட்டார். பின்னர் பிரிட்டனின் பிரதமரான வில்லியம் பிட், அவரை ‘சொர்க்கத்தில் பிறந்த ஜெனரல்’ என்று அழைத்தார்.
1761ஆம் ஆண்டு, கிளைவ் ஷ்ரூஸ்பரி தொகுதியிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது.
இதன் பிறகு, கிழக்கிந்திய கம்பெனியின் வேண்டுகோளின் பேரில், கிளைவ் மீண்டும் கல்கத்தாவிற்கு ஆளுநராகவும் அதன் படைகளின் தளபதியாகவும் அனுப்பப்பட்டார். கிளைவ் மே 1765 இல் கல்கத்தாவை அடைந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிராஜ்-உத்-தௌலாவின் தோல்விக்குப் பிறகு முர்ஷிதாபாத்தில் உள்ள மிர் ஜாபரின் அரசவையில் கிளைவ்.கிளைவ் மீதான விசாரணை
1767 ஆம் ஆண்டு, கிளைவ் இந்தியாவை விட்டு வெளியேறி மீண்டும் பிரிட்டன் சென்றார். அங்கு, 1773 ஆம் ஆண்டு, தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
அங்கு கிளைவ் தனது உரையில், தான் ஒரு ‘ஆடு திருடன்’ போல நடத்தப்படுவதாகக் கூறி, தன் மீதான விசாரணையை கடுமையாக எதிர்த்தார்.
“பிளாசிக்குப் பிறகு, ஒரு பெரிய இளவரசர் என் மகிழ்ச்சியைச் சார்ந்து இருந்தார். ஒரு வளமான நகரம் என் கருணையால் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பணக்கார வங்கியாளர்கள் என் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க போட்டியிட்டனர். தங்கமும் ரத்தினங்களும் நிறைந்த கருவூலம் எனக்காகத் திறக்கப்பட்டது. தலைவரே, எனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவற்றைக் கண்டு நானே ஆச்சரியப்படுகிறேன்” என்று அவர் கூறினார்.
தனது இரண்டு மணி நேர உரையில், கிளைவ் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பேசினார். இறுதியில் அவர் ஒரு பிரபலமான வசனத்தை உச்சரித்தார், “நீங்கள் என் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் என் கௌரவத்தை விட்டுவிடுங்கள்.”
அவர் விசாரணை அறையை விட்டு வெளியே வந்தபோது, அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. இரவு முழுவதும் நீடித்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, கிளைவ் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் திரும்பப் பெறப்பட்டன. அவருக்கு ஆதரவாக 155 உறுப்பினர்களும், அவருக்கு எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, படிப்படியாக பிரிட்டனில் ராபர்ட் கிளைவுக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கின.கிளைவின் முடிவு
இந்த விசாரணையில் கிளைவ் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை.
அவருடைய செல்வத்தை அனுபவிக்க அவருக்கு அதிக அவகாசம் இல்லை.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் தவறான செயல்கள் பற்றிய செய்தி பிரிட்டனை அடைந்ததும், அங்குள்ள பொதுமக்களின் கருத்து அவர்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியது.
நவம்பர் 22, 1774 அன்று, ராபர்ட் கிளைவ் தனது 49வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எந்த தற்கொலைக் குறிப்பையும் விட்டுச் செல்லவில்லை. இரவின் இருளில் ஒரு கல்லறையில் அவர் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறையில் எந்தக் கல்வெட்டும் வைக்கப்படவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு