Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘இந்தியாவுக்கு பாக்., எண்ணெய் விற்கலாம்’ – டிரம்ப் நம்புவது போல பாகிஸ்தானில் வளங்கள் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை அறிவிக்கும் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கக்கூடும் என்று கூறியிருந்தார்.எழுதியவர், தன்வீர் மாலிக்பதவி, ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பாகிஸ்தானின் பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“யாருக்குத் தெரியும், ஒருவேளை ஒரு நாள் அவர்கள் இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனை செய்யலாம்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ளூர் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடர்ந்து குறைந்து உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய செய்தி வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் பெட்ரோலியம் தகவல் சேவைகள் வழங்கிய தகவலின்படி, கடந்த சில மாதங்களில் எண்ணெய் உற்பத்தி 11 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், பாகிஸ்தானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் உற்பத்தி குறைந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதேபோல் பாகிஸ்தானில் இயங்கிவரும் முக்கிய எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் உற்பத்தியும் குறைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, எண்ணெய் இருப்புக்கள் எங்கே உள்ளன என்று பலர் கேள்வி கேட்பதைக் காணலாம். பாகிஸ்தானில் எந்தெந்த பகுதிகளில் எண்ணெய் தேடப்படுகின்றது?
இந்தத் தேடலில் அமெரிக்கா பங்கேற்கும் என வெளிவந்துள்ள செய்தி, சீனா பாகிஸ்தானில் செய்துவரும் முதலீட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இது போன்ற சில முக்கியக் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க பிபிசி முயற்சித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானின் மொத்த எண்ணெய் தேவையில் 15 சதவீதம் மட்டுமே அந்நாட்டில் இருந்து எடுக்கப்படுகிறது.பாகிஸ்தானிடம் எவ்வளவு எண்ணெய் இருப்பு உள்ளது?
பாகிஸ்தானில் எண்ணெயை கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் பல நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக , நாட்டில் எண்ணெய் தொடர்பான ஆய்வோ அல்லது உற்பத்தியோ குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.
பாகிஸ்தான் பெட்ரோலியம் தகவல் சேவைகளின் தரவுகளின்படி, டிசம்பர் 2024 வாக்கில், நாட்டின் எண்ணெய் இருப்பு 23.8 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது.
“பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய், நாட்டின் தேவைகளில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்கிறது, மீதமுள்ள 80 முதல் 85 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது” என பல எண்ணெய் நிறுவனங்களில் மூத்த பதவிகளில் பணியாற்றிய எரிசக்தி நிபுணரான முகமது வாசி கான் பிபிசியிடம் கூறுகிறார்.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் மதிப்பீட்டின்படி, பாகிஸ்தானில் ஒன்பது பில்லியன் பீப்பாய்கள் வரை பெட்ரோலிய இருப்பு உள்ளது, ஆனால் வணிக ரீதியாகக் கிடைக்கும் வரை அவற்றை உறுதியாகக் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
“பாகிஸ்தானில் எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு செய்ய கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதற்குக் காரணம், இந்தப் பணிக்கு மூலதன முதலீடு மற்றும் தேவையான தொழில்நுட்பம் இல்லாததே” என்று விளக்குகிறார் வாசி .
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் எடுக்க, அமெரிக்க அரசு ஒரு பெரிய எண்ணெய் நிறுவனத்தை அணுக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்பாகிஸ்தானில் எண்ணெய் ஆய்வுப் பணிகள் எங்கு நடைபெறுகின்றன?
தற்போது, பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் எண்ணெய் இருப்புகள் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
இந்தத் துறையில் உள்ள நிபுணர்களின் கூற்றுப்படி, இதற்கான பெரும்பாலான பணிகள் சிந்து மாகாணத்தில் நடைபெறுகின்றன என அறியப்படுகின்றது.
பாகிஸ்தானில் எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி குறித்த பாகிஸ்தான் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் தகவலின்படி, தற்போது சிந்துவில் உள்ள மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளின் எண்ணிக்கை 247 ஆக உள்ளது .
பஞ்சாபில் இந்த எண்ணிக்கை 33 ஆக உள்ளது, அதே நேரத்தில் கைபர் பக்துன்க்வாவில் 15 எண்ணெய் கிணறுகளிலும், பலுசிஸ்தானில் நான்கு எண்ணெய் கிணறுகளிலும் பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில் பல கிணறுகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டு அவை இப்போது வறண்டுவிட்டன. மேலும் மற்றவற்றில் பணிகள் நடந்து வருகின்றன எனவும் இந்தத் தகவலின் மூலம் தெரியவருகிறது.
பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் எரிசக்தித் துறை நிபுணர் அஃபியாவின் கூற்றுப்படி, தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், பாதுகாப்பு கவலைகள், வரி மற்றும் வருவாய் அமைப்பு போன்றவற்றால் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் தற்போது அதிக வேலைகள் நடக்கவில்லை என தெரிய வருகிறது.
பாகிஸ்தானில், 2021 செப்டம்பரில், எண்ணெய் மற்றும் எரிவாயு மேம்பாட்டு நிறுவனம், கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் லக்கி மார்வத் மாவட்டம், பிட்னி எஃப்ஆர் பகுதியில் பெரிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளை கண்டறிந்தது.
பின்னர், 2022 ஜூனில், மாடி பெட்ரோலிய நிறுவனம், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள பன்னு வெஸ்ட் பிளாக்கின் தெஹ்சில் ஷேவா பகுதியில் இதேபோன்று எண்ணெய் இருப்பு உள்ளதை, கடைசியாகக் கண்டறிந்தது.
பெட்ரோலியப் பிரிவு நாடாளுமன்றச் செயலாளர் மியான் கான் புக்தியை பிபிசி தொடர்பு கொண்டபோது, சிந்து மாகாணத்தில் இது குறித்து நிறைய பணிகள் நடைபெற்று வருவதாகவும், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வாவில் ஏராளமான எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாகவும், அதிலிருந்து எண்ணெய் எடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு குறித்து கேட்டபோது, அதைப் பற்றி இவ்வளவு சீக்கிரம் எதுவும் கூற இயலாது என்று அவர் கூறினார், அதே நேரத்தில் இந்த ஒப்பந்தம்பாகிஸ்தானின் எண்ணெய் துறைக்கு சாதகமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கடந்த காலங்களில் பல அமெரிக்க நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இதற்கு முன்பு எந்த அமெரிக்க நிறுவனமாவது பணியாற்றியுள்ளதா?
பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்த பணியாற்ற உள்ளதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த கூட்டாண்மைக்கு, ஒரு எண்ணெய் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.
கடந்த காலங்களில், பல அமெரிக்க நிறுவனங்கள் பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக எரிசக்தி துறை நிபுணர் முகமது வாசி கான் தெரிவித்தார்.
குறிப்பாக, ஆக்ஸிடென்டல் பெட்ரோலியம் மற்றும் யூனியன் டெக்சாஸ் ஆகியவை எண்ணெய் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்த நிறுவனங்கள் பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் ஆரம்ப வளர்ச்சி கட்டங்களில் முக்கிய ஆதரவை வழங்கி வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமீப காலங்களில் அவற்றின் பங்களிப்பு குறைந்துவிட்டது, ஆனால் இந்த நிறுவனங்கள் இந்தத் துறையில் முக்கிய பங்கு வகித்த ஒரு காலம் இருந்தது என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் சீனா பாகிஸ்தானில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.இது பாகிஸ்தானில் சீன முதலீட்டைப் பாதிக்குமா?
இந்த அறிவிப்பை நேர்மறையான வணிக பின்னணியில் பார்க்க வேண்டும் என்கிறார் வாசி கான்.
“சீனா பாகிஸ்தானின் நம்பகமான மற்றும் நீண்டகால கூட்டாளி. அமெரிக்க நிறுவனங்களின் ஈடுபாடு இந்த உறவைப் பாதிக்காது. உண்மையில், இது வாய்ப்புகளை பன்முகப்படுத்த உதவும் என்பதால், சீன மூலதன முதலீட்டின் தற்போதைய பற்றாக்குறையை ஈடுசெய்யக்கூடும்” என்று வாசி கான் கூறினார்.
“இந்த சாத்தியக்கூறு சீனாவிற்கும் சமமாக பயனளிக்கும். பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் வலுவான இருப்பைக் கொண்ட சீன நிறுவனங்கள், கட்டுமானம், பொறியியல் அல்லது சேவைகள் போன்ற துறைகளில் புதிய பாத்திரங்களை வகிக்க முடியும்” என்று அவர் விளக்குகிறார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நிலவியல் சார் அரசியல் பொருளாதார நிபுணர் ஜாஹித் ஹுசைன், அமெரிக்காவின் அறிவிப்பு இப்போதுதான் வெளிவந்துள்ளது, அதில் என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரங்களும் இன்னும் தெரியவில்லை என்றார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சீனாவின் மூலதன முதலீடு மற்றும் பாகிஸ்தானில் உள்ள திட்டங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது ஆனால் அது வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் என்ன வகையான எதிர்வினை எழுந்துள்ளது?
டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“அதிபர் டிரம்பின் சமூக ஊடகப் பதிவின் மூலம், பாகிஸ்தான் தன்னிடம் எண்ணெய் இருப்பு உள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. இது இப்போது ஒரு நகைச்சுவையாகிவிட்டது” என்று ஹுசைன் நதீம் என்ற பயனர் கூறியுள்ளார்.
“பாகிஸ்தானின் பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில், பாகிஸ்தான் தனது எண்ணெய் இருப்புகளின் மதிப்பு அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது” என்று ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் சமூக ஊடகமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
“அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா பாகிஸ்தானின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை ஆராய்வதற்கு உதவும், மேலும் ஒரு நாள் அதை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மக்களை கேலி செய்கிறார். இது மோதிக்கு ஒரு பெரிய அவமானம்” என்று பைசல் ரஞ்சா என்பவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல்,” இது டிரம்பின் மனநிலையை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்தியா தனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு 25 சதவீத வரி மற்றும் அபராதம் என்ற முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெளிவாக விரும்புகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
“அமெரிக்காவின் மகிழ்ச்சி என்பது மற்றவர்களின் வலியின் மீது கட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அந்த ‘மகிழ்ச்சியைப்’ பெறத் தகுதியானவர் யார் என்பதை டிரம்ப் தான் தீர்மானிப்பார்” என்று கன்வால் சிபல் கூறினார்.
மேலும்,”பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களில் அமெரிக்க முதலீடு செய்வது தொடர்பான பேச்சு, மற்ற நாடுகள் அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்திக் கூறும் கருத்துக்கு முரணாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.டிரம்பின் தனது கருத்தில் இந்தியாவை குறிப்பிடப்பட்டதை கிண்டலாகக் கருதுகிறார் கன்வால் சிபல்.
“இரான் உள்ளிட்ட முக்கிய எண்ணெய் வழங்கும் நாடுகளை இந்தியா அணுகக்கூடிய நிலையில், பாகிஸ்தான் ஒருநாள் இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் என்று அபத்தமாக கேலி செய்வது ஏன்? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த அனைத்து வழிகளையும் முயற்சிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.” என்று கான்ஸ்டன்ட் கார்ட்னர் என்ற பெயர் கொண்ட மற்றொரு இந்திய பயனர் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானிய பயனர் ஃபரித் கூட இதேபோன்ற கருத்தைக் கொண்டுள்ளார்.
“”டிரம்ப் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறேன். கற்பனையான எண்ணெய் இருப்புகள் பற்றி பேசி, உடனடி முடிவுகளைப் பெறலாம் என்று அவர் எண்ணுகிறார்.” என அவரது பதிவு கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு