2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பல வார மதிப்பீடுகளுக்குப் பிறகு, நடுவர் குழுவின் இறுதி அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய விருதுகள் குறித்த முழுமையான அறிவிப்பு டெல்லியில் தேசிய ஊடக மையத்தில் மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது

இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதையாசிரியருக்கான விருது, துணை நடிகருக்கான விருது என மூன்று விருதை பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது. ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்த பார்க்கிங் படத்தில், கார் பார்க்கிங் இடத்திற்காக இரண்டு வீட்டுகாரர்கள் சண்டை போடுவது போல இருந்த கதை நல்ல வரவேற்பை பெற்று படம் ஹிட்டானது.

சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பாலகிருஷ்ணன் வென்றுள்ளார். அதே போல பார்க்கிங் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

அதே போல தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். குடும்ப பாசம், ஆக்ஷன் காட்சிகள், காதல், பாடல் என படம்  அமைந்து  ரசிகர்களை ஈா்த்த    இப்படம், ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது.

அதேபோல சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாத்தி படத்தில் இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷ் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 70வது தேசிய திரைப்பட விருதுகளில், ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், நித்யா மேனன் (‘திருச்சிற்றம்பலம்’) மற்றும் மானசி பரேக் (‘கட்ச் எக்ஸ்பிரஸ்’) ஆகியோர் சிறந்த நடிகை விருதையும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.