ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை – இரான் கடும் எதிர்வினை ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.15 நிமிடங்களுக்கு முன்னர்

இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

“இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தடைகளை பாரபட்சமானது என்று வர்ணித்துள்ள இரான், “இவை சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும், பொருளாதார ஏகாதிபத்தியத்தின் புதிய வடிவமாகவும் உள்ளன” என்று கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , “இரானிய ஆட்சி வெளிநாடுகளில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், அதன் சொந்த மக்களை அடக்கவும் பயன்படுத்தும் வருவாயைக் குறைக்க இன்று அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இரான் தயாரிக்கும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை பெரிய அளவில் விற்றதும், வாங்கியதும் கண்டறியப்பட்டதால், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அதிபர் டிரம்ப் முன்பு கூறியது போல, இரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்க முடிவு செய்யும் எந்தவொரு நாடும் அல்லது தனிநபரும் அமெரிக்கத் தடைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நிதித் துறையின் நடவடிக்கை

அமெரிக்க நிதித்துறை ஹுசைன் ஷம்கானியின் பெரிய கப்பல் வணிகத்துடன் தொடர்புடைய 115க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் அரசியல் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகன்தான் ஹுசைன் ஷம்கானி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பங்கஜ் நாக்ஜிபாய் படேலின் பெயரும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என பிடிஐயின் செய்தி குறிப்பிடுகிறது.

தியோடர் ஷிப்பிங் உள்ளிட்ட ஹுசைன் ஷம்கானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல கப்பல் நிறுவனங்களில், படேல் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், இந்திய குடிமக்களான ஜேக்கப் குரியன் மற்றும் அனில் குமார் பனக்கல் நாராயணன் நாயர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நியோ ஷிப்பிங் என்ற நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள்.

இந்த நிறுவனம் அப்ரா என்ற கப்பலை வைத்திருக்கிறது. ஹுசைன் ஷம்கானியின் நெட்வொர்க்கால் இயக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதிதான் அப்ரா.

தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள்

சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை.

அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்:

இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்:

இந்தியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை (மெத்தனால் உட்பட) இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில், 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன.

ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்:

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை, குறிப்பாக, டோலுயீனை இறக்குமதி செய்தது.

இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 49 மில்லியன் டாலரை விட அதிகம் .

ராமனிக்லால் எஸ். கோசாலியா & கோ:

இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து மெத்தனால் மற்றும் டோலுயீன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது.

இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்:

இந்த நிறுவனம் அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது.

இந்த காலகட்டத்தில் மொத்த கொள்முதல் சுமார் 14 மில்லியன் டாலர். இந்த சரக்குகளில் சில துபையை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சன் பாலிமர்ஸ்:

இந்த நிறுவனம் இரானின் டானாய்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்திடமிருந்து பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கியதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது. அதன் மொத்த கொள்முதல் 1.3 மில்லியன் டாலரை விட அதிகம்.

பட மூலாதாரம், Getty Images

இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?

தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளோ, பணமோ, அமெரிக்க குடிமகன் அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவையும் முடக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதைப் பற்றிய விவரங்களை அமெரிக்க நிதி அமைச்சகத்தின் “வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC)”-க்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களின் நடத்தை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரானின் பதில்

அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை இரான் கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்தியாவில் உள்ள இரான் தூதரகமும், இரான் வெளியுறவு அமைச்சகமும், இதை பாரபட்சமானது மற்றும் தீய நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்துள்ளன.

“அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒரு கருவியாக மாற்றுகிறது. இதன் மூலம் இரான் மற்றும் இந்தியா போன்ற சுதந்திர நாடுகள் மீது தனது விருப்பத்தைத் திணித்து அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புகிறது” என்று இரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”அமெரிக்காவின் புதிய தடைகள் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதித்து, அதன் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கெடுக்கும் தீய நோக்கம் கொண்டவை. இந்த ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத தடைகள், குற்றச் செயலாகும். இவை சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்றன. இவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு