பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்க மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அடையாள விழிப்புணர்வு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்படு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் இருக்கின்றது. இந்த மணல் விசேடமாக  இல்மனைற் கனிமத்தை கொண்டதாக இருபதனால் அதற்கு உலகளவில் பரந்துபட்ட கேள்வி இருந்து வருகின்றது.

இந்நிலையில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்தேசி நிறுவனம் ஒன்று குறித்த இல்மனைட் மணலை அகழ்ந்து எடுக்க முயற்சித்து வருகின்றது.  அதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்து வந்த நிலையில் இந்த அரசாங்கத்தினால் அது வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறு பல்தேசிய நிறுவனங்கள் மன்னாரின் இல்மனைட் மணலை அகழ்ந்தெடுத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னாரின் மக்கள் வாழ் நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களில் இருப்பையும் கருவறுத்துச் சென்றுவிடும் நிலை உருவாகும்.

இந்த அழிவை தடுப்பதற்கும் எமது பூர்வீக நிலத்தையும் மக்கள் இருப்பையும் பாதுகாக்கவே கரு, நில பாதுகாப்பு என்ற கரு பொருளுடன் போராட்டம் ஒன்றை செய்ய நாம் வீதிக்கு இறங்கவுள்ளோம். எமது இந்த போராட்டத்துக்கு மன்னார் மாவட்ட மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

எமது இந்த போராட்டத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கையெழுத்து போராட்டம் என்பன முதன்மை பெறவுள்ளதுடன் போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.