Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலய வளாகத்தில் மூன்றாவது கண் உள்ளூர் உற்பத்தி அறிவு திறன் செயற்பாட்டு குழு மற்றும் சமதை பெண்ணிலை வாத நண்பிகள் குழு இணைந்து கடந்த 18/07/2025 திகதி தொடக்கம் 20/07/2025 திகதி வரை கைத்தறி பண்பாடை கொண்டாடுவோம் என்ற தொனிப்பொருளில் செம்பரத்தி கலை ஆக்கங்களாலான கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதிநாள் 20/07/2025 திங்கள் அன்று என்னால் பார்வையிட செல்ல முடிந்தது. கண்காட்சி எனக்கு ஒரு ஆழமான அனுபவத்தை விருந்தளித்தது மட்டுமல்லாது கேள்விகளையும் தொடுத்து விட்டன.
அந்த வகையிலே இக்கண்காட்சியை பற்றி பேச முனையும் போது கைத்தறி ஆடைகள் பண்டைய காலத்தில் இருந்தே காணப்படுகிறது எமது நாடும் ஒரு வளமான கலாசார பன்முகத்துடன் பாரம்பரிய நெசவு வளம் கொண்ட நாடு எமது நாட்டிலும் கைத்தறி ஆடைகள் பண்பாட்டு அடையாளமாக திகழ்கின்றமை ஆங்காங்கே சில மாவட்டங்களில் விரவிக்கிடக்கின்றன. அந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்டத்திலும் இப்போது கைத்தறி ஆடை உற்பத்தி பண்பாடு பின்பற்றப்படுகின்றமை இந்த கண்காட்சியில் வாயிலாக தெரிய வருகின்றது. தற்போது சில மாவட்டங்களிலே நெசவுத் தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களாலே இந்த பாரம்பரிய பண்பாடு இன்னமும் கைவிடாமல் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஆடைகள் மற்றும் கைத்தறி துணிகளால் பல வண்ணமயமான காதணிகள் மணி பைகள் சிறுவர்களுக்கான சட்டைகள் குமரிகளுக்கான ஆடைகள் என்று பல ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஆடைகள் பற்றி பார்க்கும் போது நாம் நினைக்கின்ற ஆடைகளின் பின்புலத்தில் இருக்கும் உற்பத்தி முறை தொழிலாளர்களின் வாழ்க்கை பாரம்பரியங்களை நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை வெளிநாட்டு இறக்குமதி ஆடைகளின் மோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றோம் பலவிதமான வடிவங்களில் பள பளப்பாக மினுமினுப்புடன் பார்க்கும் ஆடைகளே அழகானவை நாம் அணிவதற்கு தரமானவை என்ற எண்ணத்தில் பல பேர் துகள்கிறோம் இல்லை நாங்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை வெளிநாட்டவர்க்கு அந்நிய செலவாணியாக கொடுத்துக் கொண்டிருப்பதே உண்மையான பதிவு.
இந்த கண்காட்சியில் தைக்கப் பட்டிருந்த ஆடைகளில் உழைப்பாளியின் நேரடி பங்களிப்பை கேட்டறியக்கூடியதாக இருந்தது இந்த செயல் திட்டத்தை மூன்று மாதங்களில் தனக்கு கிடைக்கப் பெற்ற நேரங்களை பயன்படுத்தி கைத்தறி துணிகளை எடுத்து ஆடைகளை தைத்ததாகவும் அறிய முடிந்தது.
அங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகளும் கைத்தறி கைவினை உற்பத்தி பொருட்களையும் பார்க்கும்போது அதனுடைய வண்ணங்கள் பாரம்பரிய கலையுடன் பிணைந்து இருந்தது. அதுமட்டுமல்லாது பண்பாட்டை வெளிப்படுத்தி காட்டியது அவை உள்ளூர் கலாசாரத்தின் பிரதிபலிப்பு எனவும் கூறலாம்.
இந்த ஆக்கங்கள் ஒரு பெண்ணுடைய தனித்துவம் அவருடைய கலாசார பண்பாட்டின் பற்று கைத்தறி ஆடைகள் கைத்தறி கைவினைகள் சார்ந்த அவருடைய ஆழ்ந்த கருத்துக்கள் எண்ணங்கள் முயற்சிகள் நாங்கள் உற்பத்தி செய்து நாங்கள் வடிவமைத்து நாங்கள் பெருமையுடன் அளிக்கின்ற ஆடைகளே எங்களது பண்பாடாகும் என்ற நோக்கம் இந்த ஆக்கங்கள் மூலம் புலனாகியது.
உண்மையில் ஆடைகள் பார்ப்பதற்கு அழகானதாகவும் துணியின் பாவனை அதிக நாட்கள் இருக்கும் என்ற எண்ணத்தை விளைவித்தது .வெப்பச் சூழலில் நாம் அணியும் ஆடைகள் எமது உடலை நலத்துடன் பாதுகாக்காது பருத்தி நெசவு ஆடைகளை அணியும் போது உடல் நலனுக்கு உகந்ததாகவும் இருக்கும் ஏனெனில் அவை இயற்கை சாயங்களால் ஆனவை.
காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் கைத்தறி துணியினால் செய்யப்பட்டிருந்த காதணிகள் என்பவற்றை பார்வையிட வந்தவர்கள் அவற்றை நுகர்வதனை பார்க்கக் கூடியதாக இருந்தது.
அத்துடன் அங்கே கைத்தறி துணிப்பைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன அந்த துணிப்பைகளில் நாம் பொருட்களை கொள்வனவு செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும் இதன் மூலம் பொலித்தின் பாவனையை குறைத்துக் கொள்ள முடியும் என்று எண்ணம் அந்தப் பையினை அங்கு வந்தவர்கள் வேண்டும்போது எனக்குள் தோன்றியது.
அங்கு வருகை தருபவர்கள் காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகளை கைவினைப் பொருட்களை நுகர்வது மட்டுமல்லாமல் அவர்களுடைய அனுபவங்களை எழுத்து மூலம் ஆவணமாக எழுதிக் கொடுத்தனர்.
இந்தக் கண்காட்சி பாரம்பரிய நெசவுத்தொழில் பற்றிய முக்கிய விழிப்புணர்வு மற்றும் கலையின் ஈடுபாடு உற்பத்தி செய்யும் திறன் அதனை சந்தைப்படுத்தும் முறைகள் மேலும் பெண்கள் தொழில் செய்வதற்கான வழிகாட்டல் போன்றவற்றை தெளிவுபடுத்தி மையூட்டாக புலப்படுத்தியது
கைத்தறி ஆடை கண்காட்சியுடன் இணைந்ததாக சமதைப்பெண் நிலை வாத நண்பிகள் குழு இணைந்து சிறு பகுதியாக நன்னிலம் என்ற கருப்பொருளில் எங்களது பாரம்பரிய மூலிகை கன்றுகள் நாங்கள் அறிந்த அறியாத பல மரக்கன்றுகள் செடிகள் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கடந்த வருடமும் நன்னிலம் சார் மூலிகை கன்றுகளை பார்வையிட சென்றிருந்தேன் இந்த வருடமும் அவற்றைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்வடைகிறேன்.
இயற்கை பசுமை நிறைந்ததாக அங்கு சிறிய பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலோடு கூடிய நோய்களை சுமந்து கொண்டிருக்கின்றோம் காரணம் நாங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் உடல் நோய்களுக்காக பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம் எமது முன்னோர்கள் மூலிகைகளை பயன்படுத்தி உடல் நோய்களை குணப்படுத்திய வரலாறு உண்டு என்பதனை யாம் அறிந்திருக்கின்றோம்.
ஆதி காலத்தில் உடல் நலத்துக்கு தேவையான இயற்கை மருந்துகளை உணவாகவும் மருந்தாகவும் உட்கொண்டிருக்கின்றனர்
எமது மூதாதையர்கள் உடலில் ஏற்படும் வெட்டு காயங்கள் விஷங்கள் இவற்றையெல்லாம் காத்திரமாக பாரம்பரிய இயற்கை மூலிகைகளின் ஊடாக குணப்படுத்தி இருக்கின்றனர். ஏன் இன்றுவரை சில கிராமங்களில் அதனைப் பின்பற்றுகின்ற வழக்கம் இருக்கின்றது.
அதுமட்டுமல்ல எமது உடலில் வளரும் சில வியாதிகளை குணப்படுத்தும் மூலிகைகள் பற்றி கண்காட்சியில் கேட்டறிந்து கொள்ள முடிந்தது அப்போது அனலடக்கி நாயுருவி ;துத்திஇலை இரிவேலியர் பூனை மீசை கரிசலாங்கன்னி இவையெல்லாம்
நான் அறிந்திடாத இயற்கை மூலிகைகள் இவற்றுடன் தேக்கு சாமை புல் கறுவாமரம் என்று பல மரங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அங்கு வருகை தரும் பெரியவர்கள் தங்களுக்கு தெரிந்த மூலிகை கன்றுகளை கொண்டு கொடுத்ததாகவும் அறிந்து கொண்டேன்அத்துடன் சில தானிய வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன அவை உள்ளூர் உற்பத்தி விவசாய மேம்பாட்டை சுட்டிகாட்டியது அவற்றைப் பார்வையிடும் போது புதுமையான அனுபவத்தை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது .
இக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு எனக்கு அழைப்பிதழ் வழங்கிய உள்ளூர் உற்பத்தி அறிவு திறன் செயற்பாட்டு குழுவினருக்கும் சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
“எங்களது பாரம்பரியம் எங்களது கைகளிலே நாம் வேற்றுநாட்டு பாரம்பரியத்தை சொந்தமாக்குவதை நிறுத்தி எமது பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் எமது சந்ததியினருக்கு கையளிப்போம்”
பல்லுயிர் வாழ வரம் தந்த இயற்கையை நாம் பராமரிப்போம்.
நன்றி!