நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. 

 குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் விடுப்பில் உள்ளமையால் , வழக்கு விசாரணைகளுக்கு திகதியிடப்பட்டது. 

பின்னணி.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். 

அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் கடந்த 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

அதன் போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையிலையே சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.