“13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கிவிடும் என்று கூறிக்கொண்டே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பது ஒரு தெளிவான சுய முரண்பாடு” என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் முன்வைத்த முக்கிய கருத்துக்கள் வருமாறு: 🔹 இந்திய அமைச்சருடனான சந்திப்பு: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடனான சந்திப்பின் போது, தூதரக நடைமுறைகளின்படி இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமே மகஜர் கையளிக்கப்பட்டது. காலதாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கம். 🔹 சமஷ்டி குறித்து பேசப்பட்டதா? நாங்கள் சமஷ்டி பற்றி பேசவில்லை என கஜேந்திரகுமார் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. கலந்துரையாடலின் இறுதியில் எமது இறுதி இலக்கு கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை அமைச்சரிடம் மிகத்தெளிவாக வலியுறுத்தினோம். கையளிக்கப்பட்ட மகஜரிலும் இவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 🔹 மாகாண சபை – இந்தியாவின் சிந்தனை: “மாகாண சபை என்பது இந்தியாவின் சிந்தனையில் உருவான ஒரு கட்டமைப்பு. அதை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதாலேயே இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; உண்மையைத்தான் கூறுகிறோம்.” 🔹 அரசியல் முரண்பாடு: மாகாண சபை முறைமையை தீர்வு என்றோ, முழுமையாக ஏற்கிறோம் என்றோ தமிழ் அரசுக் கட்சி என்றும் கூறியதில்லை. ஆனால், அதனை எதிர்த்துவிட்டு அதே தேர்தலில் போட்டியிட முயல்வது கஜேந்திரகுமாரின் அரசியல் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புவது அரசியல் ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை தந்திருந்த போது, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மாகாண சபை தேர்தல் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேசப்பட்ட விடயங்களே தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன. #SriLankaPolitics #Jaffna #CVKSivagnanam #ITAK #GajendrakumarPonnambalam #ProvinicalCouncilElection #IndiaSriLanka #13thAmendment #TamilPolitics #Federalism #PoliticsNews
📢 கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது சுய முரண்பாடு: சி.வீ.கே.சிவஞானம் சாடல்! – Global Tamil News
8