இன்றைய ஊடக கலாசாரத்திலே நேர்த்தன்மையான விடயங்களை விட மறைத்தன்மையான விடயங்கள் தான் அதிகம் மக்களை சென்றடைகின்றன. இது பிளந்து கிடக்கும் நம் இனத்திற்கு மேலும் பதட்டத்தையும் பதக்களிப்பையும் உருவாக்குகிறது என யாழ் . பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி மூத்த வைத்திய நிபுணர் பேராசிரியர் சு ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் ஆண்டு நிறைவு விழாவும் , ஊடகவியலாளர் கௌரவிப்பும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். என்னுடைய வாழ்நாளில் நான் பல நிகழ்வுகளில் பங்குபற்றிருக்கின்றேன். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை எனக்குள் உருவாக்குவதுண்டு. இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலமாக நான் ஒரு பெருமிதம்மிக்க உணர்வை அனுபவிக்கின்றேன். அதற்கு காரணம் பல உண்டு. எமது தேசம் பல நெருக்கடிகளை சந்தித்த போதெல்லாம் அந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்கு துணை நின்றவர்கள் ஏராளமானவர்கள். குறிப்பாக இந்த மண்ணில் போர் நடைபெற்ற பொழுது அந்தப் போரின் துயரத்தில் இருந்தும் போரின் தாக்கத்தில் இருந்தும் மீண்டு எழுந்து வருவதற்கும், போருக்குள்ளே வாழ்வதற்கும் நமக்கு துணை செய்தவர்கள் பலர். அவர்களுக்குள் நான் சார்ந்திருக்க கூடிய வைத்தியத்துறை மருத்துவத்துறை ஒரு முக்கியமான பங்கினை உடையது. அந்தத் துறைக்கு சற்றும் தளராத அளவுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய இன்னொரு துறை இருக்குமாக இருந்தால் அது ஊடகத்துறை என்று நான் திடமாகச் சொல்லுவேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. இப்போது இருப்பது போன்று அந்த நாட்களில் ஊடகப் பெருவெளி என்பது அவ்வளவு தூரம் வியாபித்ததாக இருக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் குறிப்பாக வானொலிகளும் இயங்கிக் கொண்டிருந்த அந்த காலத்திலே மக்களுக்கு தேவையான செய்திகளை சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஆற்றிய பங்கு அளப்பரியது. போர் நெருக்கடி மிக்க காலத்திலே ஓர் இரட்டை நிர்வாக சூழ்நிலையில் நமது ஊடகவியலாளர்கள் ஆற்றிய பணி பெரிது. அதற்காக அவர்கள் பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். பல ஊடக நிறுவனங்கள் பல்வேறுவிதமான பாதிப்புகளை எதிர் கொண்டிருக்கின்றன. ஊடகவியலாளர்களுடைய குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததனால் அடையக்கூடிய பின்னடைவுகளைச் சந்தித்து இருக்கிறார்கள். போராளிகளுக்கு சமாந்தரமான தியாகங்களைப் புரிந்தவர்களாக இந்த ஊடகப் போராளிகள் இருந்ததை நான் அறிவேன். இன்று இருப்பது போல அன்று ஊடகங்களை நடத்துவதற்கும் முன் கொண்டு செல்வதற்கும் உரிய சூழல் இருந்ததா என்றால் இல்லை என்பதே ஒரே பதிலாக உள்ளது. அவ்வாறான சூழ்நிலையிலும் நமது ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. இன்று நாம் போருக்கு பின்னால் ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த சூழலிலும் ஊடகவியலாளர்களுக்கு நிறைந்த பொறுப்பு இருப்பதாக நான் உணர்கின்றேன். அதிலும் குறிப்பாக இன்று இருக்கக்கூடிய சூழல் என்பது ஊடகத்தினுடைய வீச்சை அகலப்படுத்தி இருக்கிறது. இந்த வீச்சு அகலப்பட்டதன் காரணமாக பொதுமக்களை சென்றடைகின்ற செய்திகளில் இருக்கும் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. பல ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்போடும் தியாகத்தோடும் இன்றைக்கும் பணியாற்றுகின்ற சூழ்நிலையிலும் ஆங்காங்கு ஒரு சில நெருக்கடிகளைத் தரக்கூடிய ஊடக அறிக்கை இடல்களையும் நாம் காண்கின்றோம். சமூகப் பதட்டங்களை தோற்றுவிக்கும் ஊடக அறிக்கையிடலும் சமூகத்தில் அவசியமற்ற பிரச்சினைகளை திணிப்பதுமான சில ஊடகங்களும் இன்றைய ஊடகப்பெருவெளிகளில் இருந்து உருவாகியிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்புணர்வு என்பது இங்கு இருக்கக்கூடிய மூத்த ஊடகவியலாளர்களுக்கும் அந்தத் துறை சார்ந்த விற்பன்னர்களுக்கும் இருக்கின்றது. இன்று நாம் இங்கு கௌரவிக்கின்ற ஊடகவியலாளர்களுடைய அனுபவங்களை நாங்கள் கேட்கின்ற பொழுது அவர்கள் எவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளே தங்களுடைய அர்பணிப்பான சேவையை ஆற்றினார்கள் என்பது மிகவும் கவனத்திற்குரியது. உயிராபத்து மிக்க நெருக்கடி தொடர்பாடல் மட்டுப்பாடுகள் எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து மட்டுப்பாடு என பல்வேறு நெருக்கடி சூழல்கள் இருந்தபொழுதும் தம்முடைய பொறுப்பை உணர்ந்து தம்முடைய வகிபாகத்தை சரியாக விளங்கிக் கொண்டு நம்முடைய ஊடகவியலாளர்கள் பெரும் பணியாற்றினார்கள். இன்றைக்கும் அந்த நிலைமை இருக்கின்ற பொழுதும் அதில் சற்று தளர்வு இருப்பதாக நான் உணர்கின்றேன். அன்புக்குரியவர்களே குறிப்பாக இன்றைய நாள் இங்கே திரண்டு இருக்கக்கூடிய நீங்கள் அத்தனை பேரும் மிக முக்கியமான ஊடகப் பரப்புகளில் பணியாற்றுகின்றவர்கள். உங்களுக்கு முன்னாலே மிக பிரதானமான ஒரு பொறுப்பு இருக்கின்றது. நம்முடைய சமூகத்தை சரியான செல்நெறியில் செலுத்துகின்ற சாரதிகளாக நீங்களும் இருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஊடகவியலாளர்கள் கொடுக்கின்ற செய்திகளும் உங்கள் அறிக்கையிடலும் நீங்கள் இந்த சமூகத்தை வழிப்படுத்துவதற்கு கொடுக்கின்ற விடயங்களும் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றுகின்றன. வரலாறுகள் தோறும் நமது ஊடகவியலாளர்கள் ஆற்றிய பங்களிப்பு என்பதை நாம் என்றைக்கும் மறக்க முடியாது. அந்தப் பங்களிப்புக்கள் இருந்துகொண்டு தான் நாம் இன்றைய நமது வாழ்க்கை வாழ்வை கட்டமைத்திருக்கின்றோம். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டிலே கலாச்சாரத்திலே ஊடகங்கள் மிக முக்கியமானவை. குறிப்பாக இலங்கையில் வெளிவந்த முதலாவது அச்சு தமிழ் ஊடகமான உதயதாரகை யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது. மிகச்சிறிய நிலப் பரப்பிலிருந்து மிகக் குறைவான மக்கள் செறிவை கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து தினசரி ஐந்து பத்திரிகைகள் வெளிவருகிறது என்றால் இது அற்புதமான விடயம். உலகத்தினுடைய மிக முக்கியமான நகரங்களில் கூட இவ்வாறான விடயங்கள் இன்று இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அச்சு ஊடகங்களாக பத்திரிகைகள் இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருப்பது நமது மண்ணின் ஊடக கலாச்சாரத்திற்கும் ஊடக பாரம்பரியத்திற்கும் ஒரு பிரதானமானஎடுத்துக்காட்டாகும். ஊடகவியலாளர்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய பொறுப்பு என்பது மிகப் பெறுமதியானது. இந்த சமூகத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய சாரதிகளில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் அறிக்கையிடல்களில் நிதானம் இருக்க வேண்டும். சமூகத்திற்கு சொல்லுகின்ற நல்ல செய்திகள் இருக்க வேண்டும். குறிப்பாக இன்றைக்கு இலத்திரனியல் ஊடகங்களுடைய பெருக்கம் அளவு கடந்து இருக்கக்கூடிய சூழலில் நீங்கள் ஆவணப்படுத்துகின்ற விடயங்களில் நமது இனத்தினுடைய வரலாறு மையப் பொருளாக இருக்க வேண்டும். நீங்கள் அறிக்கையிடுகின்ற ஒவ்வொரு விடயங்களிலும் எவ்வளவு தூரம் வரலாற்று விடயங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதில் கவனத்தோடு இருக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளனுடைய பெரிய பலம் என்பது அவனைச் சுற்றி இருக்கக்கூடிய சமூக வலைப்பின்னல். அந்த சமூக வலைப்பின்னல் தான் அவனுக்கு தகவல் வழங்குகின்ற மூலங்களை தீர்மானிக்கின்றது. இங்கிருக்கும் இளம் ஊடகவியலாளர்களுக்கு நான் சொல்லக்கூடிய ஒரு செய்தி நீங்கள் உங்களுக்கான சமூக வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக சில காலம் பணியாற்றிய அந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த காலங்களில் பல ஊடகவியலாளர்கள் எங்களோடு நெருக்கமான உறவினை அன்பினை நட்பினை கொண்டிருந்தார்கள். அதன் மூலமாக வைத்தியசாலை இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டிய செய்திகளையும் வைத்தியசாலையை மையப்படுத்தி சொல்ல வேண்டிய செய்திகளையும் ஊடகங்கள் வாயிலாக இலகுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்திருக்கின்றது. இன்றைக்கு உருவாகி இருக்கக்கூடிய ஊடக கலாசாரத்திலே நேர்த்தன்மையான விடயங்கள் அதிகம் மக்களை சென்றடைவதை விட மறைத்தன்மையான விடயங்கள் எதிர் விளைவுகளை உருவாக்கக் கூடிய விளைவுகள் தான் அதிகம் மக்களை சென்றடைகின்றன. இது பிளந்து கிடக்கும் நம் இனத்திற்கு மேலும் பதட்டத்தையும் பதக்களிப்பையும் தேவையற்ற உருவாக்குகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடயங்களையும் அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்களுக்கு மூத்த ஊடகவியலாளர்கள் உங்கள் வாழ்க்கை அனுபவங்களின் மூலமாக வழிகாட்டுதல் வேண்டும் ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தை பேணுகின்ற மிக முக்கிய தூணாக அதை பாதுகாக்கின்ற முக்கிய காவலனாக இருப்பவை ஊடகங்கள். அதனால்தான் சர்வாதிகாரம் மிக்க ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை தக்க வைப்பதற்காக முதலில் கண் வைப்பது தமக்கு எதிரான ஊடகவியலாளர்களே. இலங்கை தேசத்தில் அவ்வாறு பல ஊடகவியலாளர்களை நாங்கள் இழந்திருக்கின்றோம் இந்த உலகத்தினுடைய வரலாற்றை மாற்றிய பல ஊடகவியலாளர்கள் இந்த மண்ணில் இருந்திருக்கிறார்கள்.இப்போது நாம் இருக்கக் கூடிய நெருக்கடி சூழலிலும் நம்மை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று மக்களை பல வகைகளில் விழிப்புணர்வு ஊட்டி முன்னோக்கி கொண்டு செல்லுகின்ற பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை நீங்கள் உணர்வீர்கள் என நான் நம்புகின்றேன். நான் கூறியிருக்கக்கூடிய கருத்துக்களில் உள்ள ஆதங்கத்தை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற பணிவான வேண்டுகோளோடு உங்கள் ஊடகப் பணி சிறக்க எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
இன்றைய ஊடக கலாச்சாரம் பதட்டத்தையும் பதக்களிப்பையும் உருவாக்குகிறது! பேராசிரியர் சு ரவிராஜ்! – Global Tamil News
5