தமிழ்நாட்டில் கோவில் நிதியில் முதல் கல்லூரியைக் கட்டிய முதல்வர் யார் தெரியுமா? வரலாற்றுப் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1959ஆம் ஆண்டின் இந்து சமய அறிநிலையத் துறைச் சட்டங்களின்படி, ஒரு கோவிலின் வருவாய் அந்தந்தக் கோவில்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்12 ஜூலை 2025

தமிழ்நாட்டில் கோவில்களின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து கல்லூரிகள் கட்டுவது குறித்து முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கேள்வியெழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் கோவில்களின் சார்பில் கல்வி நிலையங்களைக் கட்டுவது எப்போது தொடங்கியது தெரியுமா? அதன் முழு வரலாற்றுப் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, ‘மக்களைக் காப்போம்…தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளார் எடப்பாடி கே. பழனிசாமி.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் பேசிய அவர், கோவில்களின் சார்பில் கல்லூரிகள் கட்டப்படுவதை கையில் எடுத்தார்.

“கோவிலைக் கண்டாலே (தி.மு.கவுக்கு) கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோவிலைக் கட்டுவதற்காக உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் உண்டியலில் பணம் போடுகிறீர்கள். அது அறநிலையத் துறைக்குச் சேர்கிறது. எதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்? அந்தக் கோவிலை அபிவிருத்தி செய்ய. அந்தக் கோவிலை விரிவுபடுத்த.”

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி காட்டுகிறார்கள். அரசாங்கத்தில் இருந்து கல்லூரி கட்டக்கூடாதா? நாங்கள் கொடுத்தோம் அல்லவா? அ.தி.மு.க. ஆட்சியில் இத்தனை கல்லூரியை கட்டிக்கொடுத்திருக்கிறோம். நீங்கள் அப்படியல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு அறநிலையத் துறையில் இருக்கும் நிதியை எடுத்து இதற்கு செலவழிப்பது எந்த விதத்தில் நியாயம்? இதையெல்லாம் ஒரு சதிச்செயலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘கோவிலைக் கண்டாலே (தி.மு.கவுக்கு) கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தையெல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.அவரது இந்தப் பேச்சு விரைவிலேயே பெரும் சர்ச்சையானது. ஆளும் தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எடப்பாடி கே. பழனிச்சாமியின் இந்தப் பேச்சைக் கடுமையாக விமர்சித்தன.

இதற்குப் பிறகு, தனது பேச்சுக்கு விளக்கமளித்தார் எடப்பாடி கே. பழனிச்சாமி. கோவில்களின் சார்பில் கல்லூரிகளைக் கட்டினால், போதுமான நிதி வசதி இருக்காது என்பதால், அரசின் சார்பில் கல்லூரிகளைக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் கூறுவது என்ன?

இருந்தபோதும், எடப்பாடி கே. பழனிசாமியின் பேச்சால் எழுந்த, கோவில்களின் வருவாயில் இருந்து கல்லூரிகளைக் கட்டுவது குறித்த விவாதம் தணியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து சுமார் 200 ஆண்டுகளாக சட்டங்களின் மூலம் இந்து சமய நிறுவனங்களின் மீது அரசு ஏதோ ஒரு வகையிலான கண்காணிப்பைச் செலுத்திவருகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்து சமய நிறுவனங்களைக் கண்காணிக்கவென அரசுத் துறையும் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்தத் துறையின் கண்காணிப்பின் கீழ் சுமார் 35,000 கோவில்களும் மடங்களும் இருந்துவருகின்றன.

1959ஆம் ஆண்டின் இந்து சமய அறிநிலையத் துறைச் சட்டங்களின்படி, ஒரு கோவிலின் வருவாய் அந்தந்தக் கோவில்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறது. இருந்தபோதும் அந்தச் சட்டத்தின் 36வது பிரிவு, கோவிலில் கிடைக்கும் உபரி வருவாயை வேறு விஷயங்களுக்கு செலவழிக்க அனுமதிக்கிறது. எந்தெந்த விஷயங்களுக்குச் செலவழிக்கலாம் என்பதை அந்தச் சட்டத்தின் பிரிவு 66-1 பட்டியலிடுகிறது.

அதன்படி, கோவிலின் உபரி வருவாயை பின்வரும் விஷயங்களுக்கு அளிக்கலாம். பலவீனமான நிலையிலும் நிதி தேவைப்படும் நிலையிலும் உள்ள பிற கோவில்கள், இந்து மதம் தொடர்பான விவகாரங்கள், அந்தக் கோவிலின் மதத்தின் கொள்கைகளைப் பரப்புவது, திவ்யப் பிரபந்தம், தேவாரம் போன்றவற்றைப் பாடுவது, அர்ச்சகர்கள், ஓதுவார்கள் பயிற்சிக் கல்லூரிகளை நடத்துவது, இந்து மதத்தையும் தத்துவத்தையும் இந்துக் கோவில் கட்டுமானக் கலையையும் கற்றுக்கொடுக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நடத்துவது போன்றவற்றை செய்யலாம்.

இந்து மதக் கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங்களை நடத்துவது, நுண்கலைகள், கட்டுமானக் கலைகளை வளர்ப்பது, ஆதரவற்ற இந்துக் குழந்தைகளுக்கான இல்லங்களை நடத்துவது, தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துவது, யாத்ரீகர்களின் மருத்துவத் தேவைக்கான மருத்துவமனைகளை நடத்துவது போன்றவற்றைச் செய்யலாம் என்கிறது இந்தச் சட்டம். அதன்படியே சில கோவில்கள், தங்களது உபரி வருவாயில் கல்வி நிறுவனங்களை நடத்திவருகின்றன.

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவில்களும் மடங்களும் சேர்ந்து மொத்தமாக 56 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்து சமய அறநிலையத் துறையின் 2023-24ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்புகளின்படி, கோவில்களும் மடங்களும் சேர்ந்து மொத்தமாக 56 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இதில் கலை – அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக், 11 மேல் நிலைப் பள்ளிகள், 5 உயர் நிலைப் பள்ளிகள் ஆகியவை அடக்கம்.

இந்து சமய அறநிலையத் துறையின் ஆரம்ப காலச் சட்டங்களில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை. 1926ல் இந்து சமய அறநிலையத் துறை வாரியம் உருவான போதும் 1951ல் இந்த வாரியம் அரசுத் துறையானபோதும் 1959ல் புதிய சட்டம் உருவானபோதும் அவற்றில் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான வழிகள் இல்லை. ஆனால், 1960களின் துவக்கத்தில் இது மாறியது.

கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர்

இதுகுறித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் உதவி ஆணையரான அழ. முத்து பழனியப்பன்,”பழனியில் தண்டாயுதபாணி கோவில் சார்பில் முதன் முதலில் 1960-ஆம் ஆண்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. இதற்கு பழனி ஆண்டவர் காலேஜ் ஆஃப் இந்தியன் கல்ச்சர் எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தக் கல்லூரியில் இந்திய கலாசாரம், தத்துவம், சைவம், வைணவம், கோவில் கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் படித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் பணி வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ” என கோவில்களின் சார்பில் கல்லூரிகள் நடத்தத் துவங்கிய வரலாற்றை விவரித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதற்குப் பிறகு, 1963ல் பழனி கோவிலின் சார்பில் மீண்டும் ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. அது கலைக் கல்லூரி. பழனி ஆண்டவர் காலேஜ் ஃபார் மென். இந்தக் கல்லூரி பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் பாடங்களைக் கற்பித்தது.

இதற்குப் பிறகு, பூம்புகாரில் பல்வேறு கோவில்களின் நிதியைக் கொண்டு ஓரியண்டல் கல்ச்சர் காலேஜ் என்ற கல்லூரி துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு குற்றாலத்தில் பெண்களுக்கு என பராசக்தி மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது. இதற்கான இடத்தை திருவிதாங்கூர் அரசர் தானமாக அளித்தார். இதற்குப் பிறகு மருதமலைக் கோவில், பண்பொழில் கோவில், திருவெண்காடு கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் பள்ளிகளையும் நடத்த ஆரம்பித்தன. பிறகு பழனியில் பெண்களுக்கென ஒரு கல்லூரியும் துவங்கப்பட்டது.

“ஆனால், மேலே குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் தற்போது துவங்கப்படும் கல்லூரிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முந்தைய கல்லூரிகள் அனைத்தும் அரசின் உதவிபெறும் கல்லூரிகளாக இருந்தன. தற்போது துவங்கப்படும் கல்லூரிகள் முழுமையாகக் கோவில்களைச் சார்ந்தே இருக்கும் எனத் தெரிகிறது. கோவில்களால் அவ்வளவு பெரிய செலவைத் தாங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்” என்கிறார் முத்து பழனியப்பன்.

இது தொடர்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அதாவது பழனி ஆண்டவர் காலேஜ் ஆஃப் இந்தியன் கல்ச்சர் கல்லூரிக்கு பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (யுஜிசி) நிதி ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், கோவிலுக்கு நிதிச் சுமை ஏற்படாமல் இருக்க பழனி ஆண்டவர் காலேஜ் ஆஃப் இந்தியன் கல்ச்சர் கல்லூரி, யுசிஜி நிதி நல்கையைப் பெற்றுவந்த பழனி ஆண்டவர் காலேஜ் ஃபார் மென்னுடன் இணைக்கப்பட்டது என்கிறார் முத்து பழனியப்பன்.

பட மூலாதாரம், Getty Images

“மீதமுள்ள நிதியை என்ன செய்வது?”

ஆனால், இதில் வேறு ஒரு பார்வையை முன்வைக்கிறார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் இணை ஆணையரான ஜெயராமன் சிவப்பிரகாசம்.

“உலகில் உள்ள எல்லா மதங்களுமே கல்வி கற்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. கோவில் என்ற நிறுவனத்தின் நோக்கமே மனிதனின் மேம்பாடுதான். அப்படி மேம்பாடு அளிப்பதன் ஒரு பகுதிதான் கல்வி. ஆகவே, கோவில்களின் நிதியில் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் யாரும், இதற்காகத்தான் என் காணிக்கையை செலவழிக்க வேண்டுமென எழுதி போடுவதில்லை.” என்கிறார் அவர்.

மேலும், “கோவில்களின் பராமரிப்பெல்லாம் நிறைவேறிய பிறகு, மீதமுள்ள நிதியை என்ன செய்வது? தங்கச் சிலைகளா செய்து வைக்க முடியும்? அப்படிச் செய்தாலும் அதில் சன்னித்தியம் இருக்குமா? எந்த மதமும் கல்வி கற்பிப்பதை எதிர்க்கவில்லை. ஆகவே, கோவில்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார் சி. ஜெயராமன்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு