நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்புஒரு மணி நேரத்துக்கு முன்னர்காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு – கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் பலி

பட மூலாதாரம், Reuters

காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14 பேர் இறந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இறந்தவர்களின் இரண்டு குழந்தைகளும் அடங்கும். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 147 ஐ எட்டியுள்ளது.

இவர்களில் 88 பேர் குழந்தைகள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காஸாவின் 2.1 மில்லியன் மக்கள் அடிப்படைத் தேவைகளுக்குக் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு ‘அதிகரித்து வருகிறது’ மற்றும் காஸாவில் ‘பட்டினி ஒவ்வொரு கதவையும் தட்டுகிறது’ என்று கூறினார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI

பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

“இது ஒன்றும் பாகிஸ்தான் உடனான பிரச்னை கிடையாது. நாகரிகத்திற்கும், காட்டு மிராண்டித்தனத்திற்கும் இடையிலான பிரச்னை. நம் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” எனப் பேசினார்.

“நாங்கள் புத்தரின் இயல்பை கொண்டவர்கள். போரை விரும்புபவர்கள் அல்ல. இன்றும் கூட வளமான பாகிஸ்தான் அமைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் நரேந்திர மோதி அரசு தெளிவாக உள்ளது என்ற அவர் மேலும் “ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர முற்றுப்பெறவில்லை எனவும் பாகிஸ்தான் மீண்டும் பிரச்னை செய்தால் நடவடிக்கை தொடரும் எனவும் பிரதமர் மோதி கூறியுள்ளார்” எனவும் பேசினார்.

“பாகிஸ்தானின் மனதில் இருந்த கருத்து வேறுபாட்டை தற்போது ஆபரேஷன் சிந்தூர் மூலம் களைந்துள்ளோம். இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதுவும் களையப்படும் பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், 2016 சர்ஜிகல் ஸ்ட்ரைக், 2019 பாலகோட் வான்வழி தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என அமைதியை நிலைநாட்டு புதிய வழிகளை கையில் எடுத்துள்ளோம்.” என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

4 மணி நேரங்களுக்கு முன்னர்தாய்லாந்து – கம்போடியா இடையே சண்டை நிறுத்தம் அறிவிப்பு

பட மூலாதாரம், YouTube/Associated Press

படக்குறிப்பு, மலோசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் (நடுவே) உடன் கம்போடியா பிரதமர் ஹுன் மனட் (இடது) மற்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தாம் வெச்சயாசாய்தாய்லாந்து – கம்போடியா இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளும் உடனடி நிபந்தனையற்ற மோதல் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இல்லத்தில் அவரால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில், கம்போடியா பிரதமர் ஹுன் மனட், தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தாம் வெச்சயாசாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இருநாடுகள் இடையே பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகக் கூறிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம்” அமலுக்கு வரும் என்று அன்வர் கூறினர்.

அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்நிபந்தனையாக இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பல மாதங்களாக நீடித்து வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஜூலை 24 முதல் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

4 மணி நேரங்களுக்கு முன்னர்தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

பட மூலாதாரம், Mailee Osten-Tan/Getty Images

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உணவுச்சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஓர் டோர் கோர் மார்கெட்டில் நடந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபர் பின்னர் தன்னை தானோ சுட்டுக்கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட 5 பேரில் 4 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் ஒருவர் அங்கு பணிபுரிந்தவர் என்றும் காவல்துறை கூறுகிறது. இரண்டு சந்தை விற்பனையாளர்கள் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தாய்லாந்து குடிமகனான அந்த ஆயுததாரிக்கு, உணவுச்சந்தை பாதுகாப்புப் பணியாளர்களுடன் முன்பு பிரச்னை இருந்ததாக உள்ளூர் ஊடகங்களிடம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

5 மணி நேரங்களுக்கு முன்னர்நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலையா? குடும்பத்தினர் போராட்டம்

நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் கொலை தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும் கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) என்பவர் படித்துள்ளார்.

அப்போது இருவரும் காதலித்து வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. “இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 27) மதியம் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

தாத்தாவுக்கு சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச அழைத்துள்ளார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடினார்.” என காவல்துறை கூறுகிறது.

இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது கவின்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது சுர்ஜித் என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து போலீசார், சுர்ஜித்தை கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியாட்கள் நுழைவதை தடுக்க போலீசார், காவல் நிலையத்தை பூட்டிவிட்டனர்.

இது ஆணவக் கொலை என குற்றம் சாட்டி, ஆறுமுகமங்கலத்தில் கவின்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

6 மணி நேரங்களுக்கு முன்னர்மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு: தாய் மற்றும் சகோதரரிடம் சிபிஐ விசாரணை

படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் 15-வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை அஜித்குமார் வீட்டில் நேரில் சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் மற்றும் அவரது தாய் மாலதியை விசாரணைக்காக மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு காரில் அழைத்து வந்தனர்.

மடப்புரத்தில் அவர்களது வீடுகளில் விசாரணை நடத்தியபோது சிபிஐ அதிகாரிகள் நவீன் குமார் மற்றும் அவருடைய தாய் மாலதி ஆகியோரின் ஆதார் அட்டைமற்றும் புகைப்படங்களை எடுத்து வருமாறு கூறி, மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகளின் மற்றொரு குழு அஜித்குமார் வழக்கு சம்பந்தமாக விசாரிக்கும்போது வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக புகார் கொடுத்த தலைமை காவலர் கண்ணன் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றபோது வீடு பூட்டி இருந்ததால் , திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 30 சதவிகித வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார்அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு தரப்பினரும் அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15 சதவிகித இறக்குமதி வரியை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டேர் லேயன் இடையேயான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

முன்னதாக, 30 சதவிகித வரியை விதிப்பதாக வெள்ளிக்கிழமை டிரம்ப் எச்சரித்திருந்தார். இருப்பினும், இரு நாடுகளும் அதை பாதியாகக் குறைக்க ஒரு ஒப்பந்தத்தை எட்டினர்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், சில பொருட்களுக்கு பூஜ்ஜிய வரிகளுடன் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அதன் சந்தைகளைத் திறக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவரும் இந்த ஒப்பந்தத்தைப் பாராட்டினார். இந்த ஒப்பந்தம் இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாடுகள் அதிபர் டிரம்ப் வரிகளை விதித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர, பிரிட்டன், ஜப்பான், இந்தோனீசியா, பிலிப்பின்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் அவர் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும், ’90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள்’ என்ற தனது இலக்கை டிரம்ப்பால் அடைய முடியவில்லை.

7 மணி நேரங்களுக்கு முன்னர்அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துவருவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளதாக, ‘லைவ் லா’ செய்தி தெரிவித்துள்ளது.

ஆங்கில நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் தெருநாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தலைப்பிட்டு வெளியான செய்தியின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், “தடுப்பூசி செலுத்தப்படாத தெரு நாய்களால் பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் விசாரணையின்போது, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, உரிய உத்தரவு தலைமை நீதிபதி அமர்வு முன்பு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்ததாக, லைவ் லா செய்தி குறிப்பிட்டுள்ளது.

7 மணி நேரங்களுக்கு முன்னர்ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: மக்களவை ஒத்திவைப்பு

பட மூலாதாரம், YT/ Sansad TV

படக்குறிப்பு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து உறுப்பினர்களையும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின்போது நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால், அவை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறியதால், மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அனைத்து உறுப்பினர்களும் அமைதி காக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.

சில எம்.பிக்களின் பெயர்களை குறிப்பிட்ட அவர், “ஆபரேஷன் சிந்தூர் குறித்து

விவாதிக்க வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் அதேசமயம் அவைக்கு நீங்கள் இடையூறு செய்கிறீர்கள். அவை செயல்பட ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? கேள்வி நேரம் அவையின் மிக முக்கியமான நேரம்.” என தெரிவித்தார்.

இதையடுத்து, அவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

8 மணி நேரங்களுக்கு முன்னர்ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆறு வழியாக உபரி நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று இரவு வினாடிக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி உபரி நீர் வந்துகொண்டிருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

ஒகேனக்கல் காவல்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாக வரும் நீர்வரத்து குறித்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை அளவீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சத்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று இரவுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 மணி நேரங்களுக்கு முன்னர்காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு ‘ஆபத்தான அளவை’ எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஜோர்டான் ஞாயிற்றுக்கிழமை காஸாவுக்கு உதவிப் பொருட்களை வீசியது.காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு ‘ஆபத்தான அளவை’ எட்டியுள்ளதாகவும், அது வேகமாக அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

காசாவில் மீண்டும் உதவிப் பொருட்களை வான்வழியாக வீசத் தொடங்கியிருக்கும் நேரத்தில், WHO-வின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காஸாவில் 25 டன் உதவிப் பொருட்களை வீசியதாக ஜோர்டான் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், காஸாவின் சில பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், நிவாரணப் பொருட்களை அனுப்ப ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) ஒரு வழிப்பாதையைத் திறப்பதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

‘வேண்டுமென்றே பட்டினி கொடுமையை ஏற்படுத்துவதாக பொய்யாக கூறப்படுவதை மறுப்பதற்காக’ இதைச் செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதே நேரத்தில், இந்த விஷயம், ‘தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக’ ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் சில பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாக UN AID தலைவர் டாம் பிளெட்சர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, 100க்கும் மேற்பட்ட லாரிகள் உதவிப் பொருட்களை ஏற்றி காஸாவுக்கு வந்ததாக ஆரம்ப தகவல்கள் சுட்டிக்காட்டியதாக பிளெட்சர் கூறினார்.

9 மணி நேரங்களுக்கு முன்னர்பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பவர்கள் நடைபயணம் செல்கின்றனர் – இபிஎஸ் மீது திருமாவளவன் விமர்சனம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் உறவு வைத்துக்கொண்டு “தமிழகத்தை காப்போம்” “மக்களை மீட்போம்” என்கிறார் ஆனால், பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பவர்கள் எல்லாம் தற்போது நடைபயணம் கிளம்பியுள்ளார்கள்” என விமர்சித்தார்.

“திமுகவில் (கூட்டணியில்) இருந்து நீ ஏன் வெளியே வரவில்லை என்கின்றனர். என்னை ஆத்திரமூட்டுவது தான் இதன் நோக்கம். திமுகவில் 10 கட்சிகள் சேர்ந்து உருவாக்கியதுதான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. நாங்கள் எல்லாம் திராவிட முன்மாதிரி. திமுகவை விமர்சிப்பதாக திராவிடத்தை விமர்சனம் செய்கிறார்கள்” என தெரிவித்தார்.

“நான் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் கருணாநிதி, ஜெயலலிதா, ராகுல்காந்தி உள்ளிட்ட அனைவரோடு அரசியல் செய்துள்ளேன். ஆசை காட்டினால் நான் சென்று விடுவேன் என நினைக்கிறார்கள், அது தவறு. கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விசிக. சன்பரிவார் தமிழகத்தில் காலூன்றிவிட கூடாது என கவலைப்படுகின்ற ஒரே கட்சி விசிக. அதனால்தான் திமுகவுடன் உறுதியாக நிற்கின்றோம். எப்போதும் பயணிப்போம்‌, மதச்சார்பின்மைக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்” என திருமாவளவன் பேசினார்.

28 ஜூலை 2025ஜெர்மனியில் தடம்புரண்ட ரயில் – மூன்று பேர் உயிரிழப்பு, பலர் காயம்

பட மூலாதாரம், Thomas Warnack/ dpa

படக்குறிப்பு, அவசரகால குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஸ்டட்கார்ட்டுக்கு அருகிலுள்ள ரூட்லிங்கனில் ரயில் விபத்துக்குள்ளானதாக ரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் தெரிவித்தார். “விபத்துக்கான காரணம் தெரியவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார். விபத்துக்கு சற்று முன்பு அந்தப் பகுதியில் புயல் வீசியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மன் செய்தி நிறுவனமான DPA படி, ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்தனர். உள்ளூர் நேரப்படி மாலை 6:10 மணியளவில், ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் காட்டுப் பகுதியில் தடம் புரண்டன.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் ஜெர்மன் ஆட்சி மன்ற தலைவர் பிரீட்ரிக் மெர்ட்ஸ் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சருடன் தொடர்பில் இருப்பதாக மெர்ட்ஸ் கூறினார். அவசர சேவைகளை வழங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெளிவந்த படங்கள், கவிழ்ந்த ரயில் பெட்டிகளையும், மீட்புப் பணிகளில் ஏராளமான அவசரகாலக் குழுக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகின்றன.

28 ஜூலை 2025பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் – ஜடேஜா,

பட மூலாதாரம், Getty Images

அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை.

வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும்.

இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது.

அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

28 ஜூலை 2025இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்தராக இருந்ததாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்தது போல தாய்லாந்து-கம்போடியா இடையேவும் அதை செய்வது தனக்கு எளிதானது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு வெள்ளை மாளிகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயெனும் அப்போது உடனிருந்தார்.

“தாய்லாந்து மற்றும் கம்போடியாவுடன் நாங்கள் வர்த்தகம் செய்துவருகிறோம். என்றாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி வருவதாக நான் அறிகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட நான் மத்தியஸ்தம் செய்ததால் எனக்கு அது எளிது என கூறுகிறேன்,” என டிரம்ப் தெரிவித்தார்.

“இரு நாடுகளின் பிரதமர்களையும் நான் அழைத்து, போரை தீர்க்காவிட்டால், நாம் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய முடியாது என கூறியிருக்கிறேன். இப்போது அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தயாராக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.

வர்த்தகம் மூலமாக மோதல் நிறுத்தத்தை தன்னால் ஏற்படுத்த முடிந்தால் அது தனக்கு பெருமை என டிரம்ப் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த கூற்றை இந்தியா மறுத்துவருகிறது.

பாகிஸ்தானின் முயற்சிக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

28 ஜூலை 2025நகை வாங்குவதாக நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி திருடியதாக 4 பேர் கைது

நகை வாங்குவது போல சென்று ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றதாக நான்கு பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஷ் (47). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பெருமாநல்லூரில் திருப்பூர் சாலையில் பார்வதி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வரும் பிரகதீஷ் தனது மனைவியுடன் சேர்ந்து நகைக் கடையை நிர்வகித்து வருகிறார்.

நகைக்கடையில் நிவேதா மற்றும் ராமதாஸ் என இருவர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டுவதற்கு முன் பிரகதீஷ் கணக்கு பார்த்துள்ளார். அப்போது வெள்ளி பொருட்களில் ஒரு கிலோ எடை குறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் தனது கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, அன்று பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் நான்கு பெண்கள் நகை வாங்குவது போல வந்து, நகை கடை பணியாளர்கள் கவனத்தை திசை திருப்பிவிட்டு வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த பிரகதீஷ் உடனடியாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி (37), ஜெயமாலா (42), தாரணி (21) மற்றும் கொங்கர் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷோபனா (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் நால்வரையும் கோபிசெட்டிபாளையத்தில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்ட்ட ஜெயமாலா மீது ஏற்கெனவே ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் கவுந்தப்பாடி காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நான்கு பெண்களும் நகைக்கடையில் பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டு லாவகமாக வெள்ளி பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.