கீழடி அகழாய்வு அரசியல் : வடக்கு, தெற்கு பிளவை பிரதிபலிக்கிறதா?

பட மூலாதாரம், ASI

படக்குறிப்பு, கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் இது. அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு தொழில் ரீதியிலான நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.எழுதியவர், செரிலான் மொல்லன்பதவி, பிபிசி28 ஜூலை 2025, 13:21 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

தென்தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள், வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியுள்ளன.

தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், 15 அடி (4.5 மீ) ஆழத்தில் அகழிகளில் புதைக்கப்பட்ட சுடுமண் பானைகளின் துண்டுகள், செங்கல் கட்டமைப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் 2,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை, சுமார் கி.மு 580-ஐ சேர்ந்தவை என தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்புகள் இந்திய துணைக் கண்டத்தின் தற்போதைய நாகரிகம் பற்றிய கதைகளை மாற்றி அமைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இது நவீன இந்தியாவின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலை மேலும் ஆழப்படுத்த ஒரு அரிய வாய்ப்பாகும் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நகர்புற கட்டமைப்புகளுக்கான சான்று

மதுரையில் இருந்து 12 கி.மீ (7 மைல்) தொலைவில் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் ஓர் கிராமம் கீழடி. 2013ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் ஆய்வு (ASI) ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனால் அகழ்வாராய்ச்சிக்காக பட்டியலிடப்பட்ட 100 இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பண்டைய மதுரைக்கு அருகே இருப்பதாலும், 1975ஆம் ஆண்டு இந்த இடத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் சிவப்பு மற்றும் கருப்பு நிற மண்பாண்ட பொருளை கண்டுபிடித்ததாலும் இங்கு 100 ஏக்கர் நிலத்தை அகழாய்வுக்கு தேர்ந்தெடுத்தார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

படக்குறிப்பு, கீழடி அருகே மனித எலும்புக்கூடுகள் மற்றும் உணவு, பானைகள் போன்ற பொருட்கள் அடங்கிய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன2014ஆம் ஆண்டு முதல் 10 கட்டங்களாக நடந்த அகழாய்வில், இதுவரை முதுமக்கள் தாழிகள், செப்புக் காசுகள், மணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்கள் என 15,000-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அகழாய்வுக்காக ஒதுக்கப்பட்ட 100 ஏக்கரில் வெறும் 4 ஏக்கரில் இருந்து மட்டுமே கண்டெடுக்கப்பட்டவை. தற்போது இவை அருகில் உள்ள அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“செங்கல் கட்டமைப்பு மற்றும் நீர் அமைப்புகள்தான் இவற்றில் முக்கிய கண்டுபிடிப்புகளாக உள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நகர்புற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றாகும்” என்கிறார் கீழடியில் மாநில தொல்பொருள் குழுவை வழிநடத்தும் அஜய் குமார்.

“இது ஒரு கல்வியறிவு பெற்ற நகர்ப்புற சமூகமாக இருந்துள்ளது. தனித்தனியே வாழ்விடங்களை அமைத்து, தொழில்துறை வேலைகளை செய்து வந்துள்ளனர். உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் நடைமுறையும் இங்கு இருந்துள்ளது” எனக் குறிப்பிடுகிறார்.

இது தென்னிந்தியாவின் முதல் பெரிய மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட பண்டைய நகர்ப்புற குடியேற்றம் என்பதைக் குறிப்பிடுவதாக அஜய் குமார் தெரிவித்தார்.

வடக்கு-தெற்கு பிளவு

1900களில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது துணை கண்டத்தில் நாகரிகத்தின் தோற்றத்தைக் கண்டறியும் பெரும்பாலான முயற்சிகள் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில்தான் நடந்தன.

அதனால் இந்த கீழடி அகழாய்வு தமிழ்நாட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

“இந்த கண்டுபிடிப்புகளால் எனது பாரம்பரியத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்” என தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் வில்லியம் டேனியல் பெருமிதம் கொள்கிறார்.

“இந்த அகழாய்வு, நமது நாகரிகமும் வட இந்திய நாகரிகத்தைப் போலவே பழமையானது மற்றும் முக்கியமானது என தென்னிந்திய மக்களை பெருமிதத்தில் ஆழ்த்தும்” என்றார்.

கீழடியை சுற்றி நடக்கும் அரசியல், ஆழமாக வேரூன்றியுள்ள வடக்கு-தெற்கு பிளவைதான் பிரதிபலிக்கிறது. இது நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள கடந்த காலத்தை அறிந்துகொள்வதற்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

படக்குறிப்பு, தோண்டி எடுக்கப்பட்ட சிவப்பு மற்றும் கருப்பு மட்பாண்டங்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன கி.மு 3,300 – 1,300க்கு இடைப்பட்ட காலங்களில் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடந்த சிந்து சமவெளி நாகரிகம்தான் இந்தியாவின் முதல் முக்கிய நாகரிகமாக பார்க்கப்படுகிறது.

அதன் வீழ்ச்சிக்குப் பிறகு, கங்கை சமவெளிகளில் இரண்டாவது நகர்ப்புற நாகரிகமான வேத காலம் மேலோங்கியது. இது கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.

இந்த காலகட்டத்தில்தான் முக்கிய நகரங்கள், அதிகாரமிக்க ராஜ்யங்கள் மேலோங்கின. வேத காலத்தின் எழுச்சி இந்து மதத்துக்கு அடித்தளம் அமைத்தது. இதன் விளைவாக, பண்டைய இந்தியாவின் நகரமயமாக்கல் என்பது ஒரு வடக்கு பகுதியின் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. வடக்கு ஆரியர்கள்தான் திராவிட தெற்கை நாகரிகப்படுத்தியதாக பல ஆதிக்க கதைகளும் சொல்லப்பட்டன.

கல்வியறிவில் முன்னோடி

கல்வியறிவின் பரவல் பற்றிய புரிதலில் இது குறித்து தெளிவாகத் தெரிகிறது.

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மௌரிய மன்னர் அசோகரின் கல்வெட்டுகளில் காணப்படும் அசோகன் பிராமி எழுத்துகள் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது. இதுதான் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான எழுத்து முறைகளுக்கு முன்னோடி ஆகும்.

தமிழ்நாட்டில் பேசப்படுவது தமிழ் மொழியான தமிழ் பிராமி எழுத்துக்கள், இவை அசோகன் பிராமி எழுத்துக்களின் ஒரு கிளை என ஐராவதம் மகாதேவன், ஒய் சுப்பராயலு போன்ற கல்வெட்டு ஆய்வாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.

ஆனால், இப்போது கீழடியில் நடத்தப்படும் அகழாய்வுகள் இந்தக் கதைகளுக்கு சவால் விடும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“கி.மு 6ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்களின் வடிவங்களை கண்டறிந்துள்ளோம். இது அசோக பிராமி எழுத்துக்களை விட பழமையானது எனக் காட்டுகிறது. ஒருவேளை இரண்டும் சிந்து சமவெளி எழுத்துக்களில் இருந்து பிரிந்து, தனித்தனியாக வளர்ந்திருக்கலாம் என நம்புகிறோம்” எனக் கூறுகிறார் அஜய் குமார்.

பட மூலாதாரம், Keeladi Museum

படக்குறிப்பு, கீழடியில் காணப்படும் சில தொல்லியல் குறியீடுகள், சிந்து சமவெளியை ஒத்திருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.”தமிழ்நாட்டில் உள்ள மற்ற அகழ்வாராய்ச்சி இடங்களிலும் கி.மு 4, 5ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளின் வடிவங்கள் கிடைத்துள்ளன” எனக் கூறி அஜய் குமாரின் கூற்றை முன்மொழிகிறார் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கடல் தொல்லியல் பிரிவு பேராசிரியரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான எஸ். ராஜவேலு.

எனினும், தமிழ் பிராமி எழுத்துக்களின் தொன்மையை உறுதியாக நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் மற்றும் ஆதாரங்கள் தேவை என சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் “கீழடியில் கண்டறியப்பட்டுள்ள எழுத்து வடிவங்கள், சிந்து சமவெளியில் கண்டறியப்பட்டதைப்போல் இருக்கிறது” என்ற தமிழ்நாடு தொல்லியல்துறையின் மற்றொரு கூற்று கூடுதல் கொந்தளிப்பை கிளப்பியுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’சிறிய குடியேற்ற தொடர்புகள்’

“சிந்து சமவெளியில் இருந்து மக்கள் தெற்கு பகுதிக்கு புலம்பெயர்ந்திருக்கலாம். இதுவும் ஒரே சமயத்தில் கீழடி மற்றும் கங்கை சமவெளியில் நகரமயமாக்கல் நிகழ வழி வகுத்திருக்கலாம். இதை முழுமையாக புரிந்துகொள்ள மேலும் அகழாய்வு நடத்த வேண்டும்” என்கிறார் அஜய் குமார்.

ஆனால் இது சாத்தியமே இல்லை என மறுக்கிறார், பிகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் அஜித் குமார்.

“அந்த காலகட்டத்தில் இருந்த வெறும் அடிப்படை போக்குவரத்தை வைத்துக்கொண்டு சிந்து சமவெளியில் இருந்து இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து சென்று அங்கு நாகரிகத்தை தோற்றுவித்திருக்க முடியாது.” என்கிறார். கீழடியில் கிடைத்துள்ள கண்டுபிடிப்புகள் ஒரு சிறிய குடியேற்றத்திற்கான தொடர்புகளாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Keeladi Museum

படக்குறிப்பு, தண்ணீரை கொண்டு செல்ல சுடுமண்ணால் ஆன குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.ஆராய்ச்சியாளர்கள் இடையே கண்டுபிடிப்புகள் குறித்து விவாதம் நடைபெறும் சமயத்தில் அரசியல்வாதிகள் கீழடிக்கும் சிந்து சமவெளிக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது எனவும் சிந்து சமவெளி, ஆரம்பகால தென்னிந்திய அல்லது திராவிட நாகரிகத்தின் ஒரு பகுதி எனவும் கூறுகின்றனர்.

வரலாற்றை மறைப்பதாக குற்றச்சாட்டு

இதற்கிடையில் கீழடி அகழாய்வை தலைமை தாங்கிய ASI ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால் இந்த சர்ச்சை அரசியலில் சூடுபிடித்தது.

நெறிமுறையை காரணம் காட்டி, இரண்டு கட்ட அகழாய்வுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்தது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை. தமிழின் பெருமையை மறைப்பதற்காக மத்திய அரசு வேண்டுமென்றே அகழாய்வு பணிகளை தடுப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.

அறிவியல் ரீதியான போதிய ஆய்வுகள் இல்லை என சுட்டிக்காட்டி, 2023ஆம் ஆண்டு ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ASI அறிவுறுத்தியது சர்ச்சையை மேலும் கூட்டியது. ஆனால் ராமகிருஷ்ணன் இதை மறுத்துவிட்டார். தனது கண்டுபிடிப்புகள் நிலையான தொல்பொருள் நடைமுறைகளை பின்பற்றியுள்ளதாக வலியுறுத்தினார்.

மத்திய அரசு ஆய்வறிக்கையை வெளியிட மறுப்பதை ‘தமிழ் கலாசாரம் மற்றும் பெருமையின் மீதான தாக்குதல்’ எனக் குறிப்பிட்டு கடந்த ஜூன் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக ஆளும் மத்திய அரசு தமிழர்களின் வரலாற்றை வேண்டுமென்றே மறைப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

‘ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை ASI நிராகரிக்கவில்லை. துறை வல்லுநர்களை வைத்து அறிக்கையை பரிசீலித்து முடிவு செய்யப்படும்’ என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

படக்குறிப்பு, தரையில் புதைந்திருக்கும் சுடுமண்ணால் ஆன ஒரு வளையக் கிணறுதொல்லியல் கண்டுபிடிப்புகளைக் காண, அகழாய்வு தளத்தின் அருகே உள்ள அருங்காட்சியகத்துக்கு குழந்தைகள், பள்ளி சிறுவர்கள் வந்து செல்கின்றனர். அதே நேரம் அகழாய்வு தளத்திலேயே திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் தொடர்கின்றன.

கீழடி குறித்த புத்தகத்தை எழுதியுள்ள பத்திரிகையாளர் சௌமியா அசோக், தனது முதல் கீழடி பயணத்தை நினைவுகூர்கிறார்.

“நமது கடந்த கால பயணத்தை புரிந்துகொள்ள வரலாற்றை அறிய வேண்டியது அவசியம். வடமேற்கு பகுதியைச் சேர்ந்த கார்னிலியன் மணிகள், ரோமானிய செப்பு நாணயங்கள் போன்ற தடயங்களை வைத்துப் பார்க்கையில், நம் முன்னோர்கள் நாம் நினைத்துப் பார்ப்பதை விட அதிக தொடர்புகொண்டவர்கள் என்பதை கீழடி அகழாய்வு காட்டுகிறது” என்கிறார்.

“இன்று நாம் காணும் பிளவுகள் வரலாற்றை விட நிகழ்காலத்தால் வடிவமைக்கப்படுகின்றன” எனக் கூறுகிறார் சௌமியா அசோக்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு