பூஸா சிறை அதிர்ந்தது: 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு! – Global Tamil News

by ilankai

கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 84 நாட்களில் 110 சார்ஜர்கள், 159 சிம் அட்டைகள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் (Routers) மீட்கப்பட்டுள்ளன. சில ஸ்மார்ட் ரக தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லொக்கு பெட்டி, மிதிகம ருவன், தெமட்டகொட சமிந்த மற்றும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சந்தேகநபர் ஆகியோரின் அறைகளில் இருந்தும் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரான நௌபர் மௌலவியின் அறையில் இருந்து மின்சார வயர் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் சிறையில் இருந்தவாறே பாதாள உலகக் குழுவினர் குற்றச் செயல்களை வழிநடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஊழல் நிறைந்த சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இத்தகைய பொருட்கள் சிறையினுள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலையின் அவசர கால பிரிவினரும் இணைந்து இந்த விசேட தேடுதல் வேட்டையை முன்னெடுத்திருந்தனர்.

Related Posts