“பணியிட மாறுதலில் முறைகேடு” ; அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் (கோப்புப்படம்)எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், கலந்தாய்வுக்கு முன்பே பல இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும், கலந்தாய்விலும் பல பணியிடங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக நடைபெறும். வழக்கமாக மே மாதத்துக்கு முன்பே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கலந்தாய்வு துவங்கும்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவில்லை. ஜூன் 19 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை விண்ணப்பிக்கவே அவகாசம் வழங்கப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து கலந்தாய்வு துவங்கி, வரும் 30 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக 38 ஆயிரம் ஆசிரியர்கள், எமிஸ் வாயிலாக விண்ணப்பித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்களை நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்கள்!

கலந்தாய்வில் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அதில் ஆட்சேபம் இருந்தால் அதுபற்றி முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். பள்ளி திறப்பதற்கு முன்பே இந்த பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுவிடும். வெவ்வேறு தகுதி, நிலையிலுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கிறது.

ஆனால் இந்த கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பே, நிர்வாக மாறுதல் என்ற பெயரில், ஆசிரியர்கள் பலருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலந்தாய்வில் பல காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பே, பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாக கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்கின்றன.

பட மூலாதாரம், BBC/Thangabasu

படக்குறிப்பு, கலந்தாய்வில் பல காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டச் செயலாளர் நிவாஸ் சண்முகவேல் ,”முன்பு ஒன்றிய அளவில் பணி மாறுதலுக்கு விண்ணப்பித்தாலே சீனியாரிட்டியை இழக்கும் நிலையிருந்தது. நீதிமன்ற உத்தரவால் ஸ்டேட் சீனியாரிட்டியே கருத்தில் கொள்ளப்படுமென்று 2022 ஆம் ஆண்டில் ஓர் அரசாணையை (எண்:243) இந்த அரசு வெளியிட்டது. அதன்படி சீனியாரிட்டியிலுள்ள ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.” என்றார்.

”ஊதியத்தை உயர்த்தித்தர நிதித்துறை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு எந்த பயனுமில்லை என்பதால் இதை நீக்க வேண்டுமென்பது ஜாக்டோ–ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் ஸ்டேட் சீனியாரிட்டியை இழக்காமல் எந்த மாவட்டத்துக்கும் பணியிட மாறுதல் பெறலாம் என்பதைப் பயன்படுத்தியே தற்போது முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.” என்றார் அவர்.

ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உபரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிர்வாக மாறுதல் என்பதை, சாதாரண பணியிட மாறுதலுக்கும் பயன்படுத்துவதில்தான் பெருமளவில் முறைகேடு நடக்கிறது என்பது பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கான ஆதார ஆவணமே இன்றி நிர்வாக மாறுதல் தருவதாக இவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், BBC/Govindaraju

படக்குறிப்பு, சிவகங்கையில் நடைபெற்ற ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம்பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி அருகேயுள்ள சேத்துமடை அண்ணாநகர் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் ஐரின் ஸ்டெல்லா, ”என்னுடைய ஊர் வேட்டைக்காரன்புதுார் அசோக் நகர். நான் இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியராக பணியேற்று 17 ஆண்டுகளாகிவிட்டது. துறைரீதியாகத்தான் எனக்கு இங்கே பணி மாறுதல் தரப்பட்டது. எனக்கு ஓர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஊருக்கு அருகிலுள்ள பள்ளியில் இடமாறுதல் வாய்ப்புக்குக் காத்திருந்தேன்.” என்கிறார்.

”எங்கள் ஊருக்கு அருகிலுள்ள பிஏபி காலனியில் உள்ள பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியர் ஓய்வு பெற்றபின்பு அந்தப் பள்ளிக்கு முயற்சி செய்யலாம் என்று பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன். அதுவரை கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கடந்த மே மாதம் அவர் ஓய்வு பெற்றார். இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் கலந்தாய்வு துவங்கும் முன்பே, அந்தப் பள்ளிக்கு வேறு ஒரு பள்ளியில் 4 ஆண்டுகளே பணியாற்றிய ஒருவருக்கு நிர்வாக மாறுதல் தரப்பட்டுள்ளது. அவர் இப்போதே அங்கு பணியில் சேர்ந்துவிட்டார்.” என்றார் ஐரின் ஸ்டெல்லா.

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை உள்ளடக்கிய பள்ளிக்கல்வித்துறையிலும் இதுபோன்று பணியிட மாறுதலில் பெரும் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டுகிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜூ. முன்பு கலந்தாய்வு முடிந்தபின் காலியாகவுள்ள இடங்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை இப்போது கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கொடுத்துவிடுகின்றனர் என்கிறார்.

”வழக்கமாக கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்படும். ஆனால் இப்போது முதலில் ஒரு தேதியை அறிவித்துவிட்டு, அதற்கு முன்பாக மற்றொரு தேதியை அறிவித்து கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதிலும் காலிப்பணியிடங்கள் நிறைய மறைக்கப்பட்டுள்ளன. ” என்றார் கோவிந்தராஜூ.

இந்த நிர்வாக மாறுதலால் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் ஜேம்ஸ்குமார் என்ற ஆசிரியரும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு சிலுக்கபட்டி என்ற ஊரிலுள்ள பள்ளியில் 17 ஆண்டுகள் பணியாற்றியநிலையில், உபரி ஆசிரியரை மாற்றும் சூழலில், ஜூனியர் ஆசிரியர் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமை அடிப்படையில் விலக்களித்து, இவரை 2022 ஆம் ஆண்டில் இந்த பள்ளிக்கு மாற்றியுள்ளனர். தனது ஊரிலிருந்து 28 கி.மீ. தினமும் பயணிக்கும் இவர், 5 கி.மீ, துாரத்திலுள்ள சண்முகநாதபட்டிணம் பள்ளியில் காலியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

பட மூலாதாரம், BBC/Thangabasu

படக்குறிப்பு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசுநடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய ஜேம்ஸ்குமார், ”ஜூலை 14 அன்று நடந்த கலந்தாய்வில் இந்த பள்ளி கிடைக்குமென்று நான் பங்கேற்றேன். காலை 11:30 மணிக்கு நான் அதில் பங்கேற்கும் வரை அந்த இடம் காலியாக இருந்தது. ஆனால் கலந்தாய்வில் இடம் காண்பிக்கப்படவில்லை. அன்று மதியம் 2:30 மணிக்கு தேனி மாவட்டத்திலிருந்து ஓர் ஆசிரியர் நிர்வாக மாறுதல் வாங்கிவந்து அங்கு பணியில் சேர்ந்துள்ளார். இடையில் என்ன நடந்தது என்பதை யாராலும் யூகிக்க முடியும். கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில்தான் கலந்தாய்வில் இவ்வளவு முறைகேடு அரங்கேறியுள்ளது.” என்றார்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் மறைக்கப்பட்டிருப்பதாக ஜேம்ஸ்குமார் தெரிவித்தார். தொடக்கக்கல்வித் துறையிலும் இதேபோன்று பணியிடங்களை மறைத்து, கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருப்பதை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். பல உதாரணங்களை சுட்டிக்காட்டிய அவர், தென்காசி மாவட்டத்தில் அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு கள்ளக்குறிச்சியிலுள்ள ஒரு ஆசிரியருக்கு இப்போதே பணியிட மாறுதல் தரப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் இதுபோன்று பல்வேறு பணியிட மாறுதல் குறித்த தகவல்களை பட்டியலிட்டனர். சிலவற்றுக்கு அதற்கான உத்தரவுகளைக் காண்பித்த அவர்கள், மற்ற பல பணியிட மாறுதல்கள் குறித்து தகவல்களை மட்டும் தெரிவித்தனர். இவர்கள் கூறும் அந்தத் தகவல்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

தென் மாவட்டங்களுக்கான பணியிட மாறுதல்களே அதிகம்!

இத்தகைய நிர்வாக மாறுதல் உத்தரவுகளுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினரின் அழுத்தத்தால், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர்) அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவுகள் தரப்படுவதாகக் கூறுகின்றனர். இதில் பெருமளவில் பணம் விளையாடுகிறது என்பதும் அனைத்து சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது.

இதுபற்றி விளக்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகி நிவாஸ் சண்முகவேல், ”இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. எங்களுடைய விசாரணையில் ஒரே மாதத்தில் 250 பேருக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் உத்தரவு தரப்பட்டுள்ளது. இது மாதந்தோறும் தொடர்கிறது. இதிலும் தென் மாவட்டங்களுக்கே அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பணியிட மாறுதலுக்கு பணம் வாங்கப்படுகிறது. வடக்கிலிருந்து மேற்கு மாவட்டம் வர ரூ.5 லட்சம் மட்டுமே.” என்றார்.

தென் மாவட்டங்களில்தான் அதிகளவிலான ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமிருப்பதால், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தே அதிகளவிலான ஆசிரியர்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் தங்கள் ஊர்களுக்கு அருகில் பணியிட மாறுதல் வாங்குவதற்கு இவ்வளவு பணத்தைத் தருவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர்.

பட மூலாதாரம், BBC/Nivas Shanmugavel

படக்குறிப்பு, பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்”குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்தில் இருந்து 8, 10, 12 லட்சம் என்று இடத்துக்குத் தகுந்தாற்போல் பணியிட மாறுதலுக்கு பணம் கைமாறியிருக்கிறது. அதனால்தான் கலந்தாய்வு துவங்கும் முன்பே நுாற்றுக்கணக்கான பணியிட மாறுதல்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் வழங்கப்பட்டு, கலந்தாய்வுக்கு முன்பே பலரும் புதிய இடத்தில் பணியில் சேர்ந்துவிட்டனர். இப்போது நடப்பது எம்.டிரான்ஸ்பர் அதாவது மணி டிரான்ஸ்பர். ” என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் தங்கபாசு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கங்களைப் போலவே இந்த குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகளும் எழுப்பத் துவங்கியுள்ளன. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தென்மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் விதிகளை மீறி நிர்வாக மாறுதல் வழங்கப்படுவது சட்டவிரோதமானது, கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியிருந்தார்.

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடியும் முன்பே, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக மாறுதல் அடிப்படையில் கொல்லைப்புறமாக காலியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருவதாக தனது அறிக்கையில் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.

”கோடை விடுமுறைக்கு முன்பே நடத்த வேண்டிய கலந்தாய்வை பணம் ஈட்டவும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டவும் தாமதமாக நடத்தியுள்ளனர். ஆசிரியர்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். நிர்வாக மாறுதலில் மொத்தமாக அவர்களை தென்மாவட்டங்களுக்கு சென்றுவிட்டால் வடமாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வடமாவட்டங்கள் மிகவும் பின் தங்குவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.” என்று அன்புமணி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது இடமாறுதலுக்கான தகுதியும், தேவையும் கொண்டவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று குற்றம்சாட்டியிருந்த அவர், நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அத்துமீறலால் சமூகநீதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இந்த மோசடி முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

”அதிமுக ஆட்சியிலும் இதே முறைகேடு நடந்துள்ளது!”

நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆளும்கட்சியின் நிர்ப்பந்தத்தின்பேரில், பணியிட மாறுதலுக்கு அதிகாரிகள் உத்தரவு வழங்கினாலும் அதிலும் பயன்பெறுவது ஆசிரியர்கள்தானே என்ற கேள்வியை ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்குப் பதிலளித்த அவர்கள் அது ஆசிரியர்கள் தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டதுடன், இதனால் உண்மையிலேயே பாதிப்புக்குள்ளான ஓர் ஆசிரியரின் உரிமை மறுக்கப்படுவதாகவும், இதில் சங்கங்கள் தலையிட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

”இதைத் தவிர்ப்பதற்கு மாவட்டத்துக்குள் நடக்கும் பணியிட மாறுதலை, மாவட்ட அளவிலான முதன்மை கல்வி அலுவலர் அளவில் ‘ஆஃப்லைன்’ முறையில் நடத்த வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற விருப்ப விண்ணப்பங்களை மட்டும் ஆன்லைன் முறையில் ஏற்று கலந்தாய்வை நடத்தலாம். இதனால் நீண்ட காலமாக பணியிட மாறுதலுக்குக் காத்திருக்கும் ஆசிரியர்கள் ஏமாறமாட்டார்கள்.” என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்டத்தலைவர் கோவிந்தராஜூ.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்று முறைகேடாக பணியிட மாறுதல் நடக்கவில்லையா, பணம் கைமாறவில்லையா என்ற கேள்வியையும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பிபிசி தமிழ் எழுப்பியது. அதற்கும் பதிலளித்த பலரும், அப்போதும் இதேபோன்று பணியிட மாறுதலில் பணம் விளையாடினாலும், இப்போது நடக்கின்ற அளவுக்கு அதிகளவில் நடக்கவில்லை என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் தங்கபாசு, ”அதிமுக ஆட்சியில் கலந்தாய்வு முடிந்தபின் காலியாகவுள்ள இடங்களுக்கு மட்டும் இப்படி நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் முதல் 2 ஆண்டுகள் மிகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் கலந்தாய்வு நடந்தது. ஆனால் 2 ஆண்டுகளாக மெதுவாக லஞ்சமும் முறைகேடும் புகுந்து இந்த ஆண்டில் பெரும் உச்சத்துக்குப் போய்விட்டது.” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பதில் பெற முயன்றபோது, அவரிடம் பதில் பெறமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநர் (பணியாளர்) ராஜேந்திரனிடம் பிபிசி தமிழ் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது அனைத்தையும் மறுத்த அவர், ”ஆசிரியர் பணியிட மாறுதல் முறைப்படியும், சரியாகவும் நடந்து வருகிறது. ” என்றார்.

கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தரப்பட்டது, பல்வேறு பணியிடங்களை மறைத்தது பற்றி ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ள தகவல்களைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ”கலந்தாய்வு பற்றி தெளிவாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசின் அறிவுறுத்தலின்படியே நடக்கிறது. எங்குமே தவறு நடக்கவில்லை. எந்த மாவட்டத்திலிருந்தும் இதுபோன்று புகார்கள் எதுவும் வரவில்லை. நீங்கள் சொல்வதைப் போல முறைகேடாக பணியிட மாறுதல் தரப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு