இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.எழுதியவர், மனோஜ் சதுர்வேதிபதவி, பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும்.

ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கோனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான்.

கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 2 வீராங்கனைகள் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். திவ்யா தேஷ்முக், இந்த தொடரில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளார்.

உலக சாம்பியனுடன் போட்டியிடுவது யார் என்பது கேண்டிடேட்ஸ் தொடரில் தீர்மானிக்கப்படும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட்டத்தை வெல்லப் போவது யார் ?

ஹம்பிக்கும் திவ்யாவுக்கும் இடையில் பட்டத்தை வெல்வதற்கான போட்டி என்பது, இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

திவ்யா தனக்கு எதிராக விளையாடப் போகும் ஹம்பியின் வயதில் பாதி வயதே உடையவர். அதாவது, ஹம்பிக்கு 38 வயது, திவ்யாவுக்கு 19 வயது.

2014-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட ஹம்பிக்கு , அஹானா என்ற மகள் உள்ளார். அஹானா பிறந்த பிறகு அவர் இரண்டு ஆண்டுகள் போட்டியில் இருந்து விலகி இருந்தார்.

ஹம்பி நீண்ட காலமாக சதுரங்க போட்டிகளில் விளையாடி வந்தாலும், அவரது மகள் பிறந்த பிறகுதான் அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

2017 இல் அவரது மகள் பிறந்த பிறகு, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலக ரேபிட் செஸ் பட்டங்களை வென்றார் ஹம்பி.

இப்போது சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் தருவாயில் உள்ளார்.

மோசமான சூழல் காரணமாக ஓய்வு பெற நினைக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதாகவும், அது தன்னை தொடர்ந்து விளையாடத் தூண்டுவதாகவும் கூறுகிறார் ஹம்பி .

கடந்த வருடம் தனது 37 வயதில் ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் பெரிதாக வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், உலக ரேபிட் செஸ் பட்டத்தை வென்ற பிறகு, ஹம்பி தனது சதுரங்க பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஹம்பி போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹம்பி 2002 ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனதன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இந்த சாதனையை 2008 ஆம் ஆண்டு சீனாவின் ஹூ யிஃபான் முறியடித்தார்.கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளைத் தோற்கடித்தனர்.

ஆனால் திவ்யாவை எதிர்த்து வெற்றி பெற, ஹம்பி போராட வேண்டியிருந்தது.

ஹம்பி தற்போதைய உலக ரேபிட் சாம்பியனாக உள்ளார். ஆனால் ஆரம்ப ரேபிட் ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாமல் சீனாவின் டிங்ஜி லீக்கு எதிராக தோல்வியடைந்தார்.

கடைசி ரேபிட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஹம்பி போட்டியை ‘டை பிரேக்கர்ஸ்’ எனப்படும் பிளிட்ஸ் ஆட்டங்களுக்கு கொண்டு சென்றார்.

இந்தப் போட்டிகளில் ஹம்பி முழு நம்பிக்கையுடன் விளையாடியதைக் காண முடிந்தது. இரண்டு ஆட்டங்களிலும் வென்ற ஹம்பி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு பொன்னான வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திவ்யா தேஷ்முக் 2013 ஆம் ஆண்டு தனது ஏழு வயதில் சாதனை படைத்தார்.இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு பேசிய கோனேரு ஹம்பி, “இந்திய சதுரங்க வரலாற்றுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் திவ்யா மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டி மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

மேலும் “டிங்ஜிக்கு எதிரான ரேபிட் செஸ் போட்டியின் ஆரம்பப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. என்னால் நன்றாக விளையாட முடியவில்லை. ஆனால் பிளிட்ஸ் விளையாட்டுகளில் நான் முழு நம்பிக்கையுடன் விளையாடினேன்” என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், கோனேரு ஹம்பி பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்றார்.சாதனை படைத்த திவ்யா

திவ்யாவின் சதுரங்கப் பயணம் சாதனைகளால் நிறைந்தது.

அவர் 2013 ஆம் ஆண்டு 7 வயதில் பெண்கள் ஃபிடே (FIDE) மாஸ்டர் ஆனார். இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குச் சொந்தமானது.

ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் திவ்யா பெற்றார்.

இதன் மூலம், 34 ஆண்டு வரலாற்றில் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார் திவ்யா .

அது மட்டுமின்றி, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அவர் நெருங்கியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு அவருக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.

அவ்வாறு வெற்றி பெற்றால், கிராண்ட்மாஸ்டரான நான்காவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் திவ்யா படைப்பார்.

இதற்கு முன்பு, கோனேரு ஹம்பி, டி. ஹரிகா மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு ஆகியோர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய பெண்கள்.

திவ்யா சதுரங்க வீராங்கனையானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012 ஆம் ஆண்டு தேசிய சதுரங்கப் போட்டியில் திவ்யா 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பட்டத்தை வென்றார். தற்செயலாகவே தாம் சதுரங்க வீராங்கனை ஆனதாக திவ்யா கூறுகிறார்.

“என் அக்கா பூப்பந்து விளையாடுவாள், என் பெற்றோர் அக்காவுடன் செல்வார்கள். அப்போது எனக்கு நான்கு-ஐந்து வயது இருக்கும், நானும் அவளுடன் செல்ல ஆரம்பித்தேன். நானும் பூப்பந்து விளையாட முயற்சித்தேன், ஆனால் வலையை கூட எட்ட முடியவில்லை. அதே ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அதனைப் பார்க்கத் தொடங்கினேன்” என்று திவ்யா தெரிவித்தார்.

சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும் ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

திவ்யாவின் சகோதரி சிறிது காலத்திற்குப் பிறகு பூப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார், ஆனால் அவரது அர்ப்பணிப்பால், திவ்யா இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் எட்டாத நிலையை அடையப் போகிறார்.

சதுரங்கத்தின் மீதான திவ்யாவின் ஆர்வத்தைக் கண்டு, அவரது தந்தை ஜிதேந்திராவும் தாய் நம்ரதாவும் நாக்பூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சதுரங்க அகாடமியில் அவரது பெயரைப் பதிவு செய்தனர்.

இரண்டு வருட பயிற்சியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய திவ்யா, 2012 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பட்டம் வென்றார்.

இதன் பிறகு, திவ்யாவுக்கு வெற்றிமேல் வெற்றிதான். அதன் நீட்சியாக, சர்வதேச சதுரங்க அரங்கில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

‘ஆனந்தின் குறிப்புகள் எனக்கு சரியான திசையைக் கண்டறிய உதவின’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சாதனை திவ்யாவுக்கு மிகப்பெரியது என்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.2020 ஆம் ஆண்டு வாக்கில், இந்திய ஒலிம்பியாட் அணியின் உறுப்பினரான திவ்யா, நாட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.

இதனால் விளைந்த நன்மையாக, விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து அவருக்கு தொடர்ந்து குறிப்புகள் கிடைக்கத் தொடங்கின.

அவரது விளையாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், அவர் முதலில் 2023 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். பின்னர் சர்வதேச மாஸ்டர் ஆனார்.

இப்போது அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் தருவாயில் இருக்கிறார்.

“இது ஒரு மிகப்பெரிய சாதனை. உண்மை என்னவென்றால், அவர் ஜு ஜினர், டான் சோங்ஜி மற்றும் ஹரிகா போன்ற சிறந்த வீராங்கனைகளை தோற்கடித்துள்ளார். திவ்யா சிறந்த ஆற்றல் கொண்ட வீராங்கனை. எனவே இது எதிர்பாராதது அல்ல. மக்கள் இதை அவரிடமிருந்து எதிர்பார்த்தனர், அதை அவர் நிரூபித்துள்ளார்” என்று திவ்யாவைப் பற்றி விஸ்வநாதன் ஆனந்த் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்திய சதுரங்கத்தின் பொற்காலம்

கடந்த சில வருடங்களாக இந்திய சதுரங்கம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் பல முறை உலகளவில் பட்டங்களை வென்று சதுரங்க உலகில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளார் என்பது உண்மை தான்.

கடந்த ஆண்டு, இந்திய சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக, டி. குகேஷ், அர்ஜுன் எரிகேசி, ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் ஆகிய நான்கு வீரர்கள் உலக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக இரட்டை தங்கம் வென்றது. அப்போது, ஆனந்துக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை டி. குகேஷ் பெற்றார்.

இப்போது திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் புதிய வரலாற்றை உருவாக்கும் தருணம்.

‘பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இருவரும் இன்று மீண்டும் மோதுகிறார்கள். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். மாறாக ஆட்டம் டிராவில் முடிந்தால், டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

யார் வெற்றி பெற்றாலும், இந்தியா நிச்சயமாக தலை நிமிர்ந்து நிற்கும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு