இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. குறிப்பாக , திலித் ஜயவீர தலைமையிலான ‘சர்வஜன அதிகாரம்’ கட்சிக்கும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கும் இடையில் இந்த விவகாரத்தில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவுகின்றன. குறிப்பாக திலித் ஜயவீர மற்றும் அவரது தரப்பினர், அரசாங்கம் தங்களுக்குச் சாதகமற்ற ஊடக நிறுவனங்களைக் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கட்சியின் செயலாளர் ரஞ்சன் செனிவிரத்ன ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஊடகங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் மீதான விமர்சகர்களாக இருக்கும் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான அல்லது நிர்வாக ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். எனினும் அரசாங்கத் தரப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறது. மாறாக, சில ஊடக நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்திற்கு எதிராக “போலிச் செய்திகளை” (Fake News) பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டுகிறது. ஊடக சுதந்திரம் என்பது தவறான தகவல்களைப் பரப்புவதற்கான உரிமம் அல்ல என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையிலான பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுப்பதாகவும் அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, ஊடகங்களின் பங்கு மற்றும் அவற்றின் மீதான அரசாங்கத்தின் அணுகுமுறை சர்வதேச அளவிலும் உற்றுநோக்கப்படுகிறது. ஒருபுறம் ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் தூணாகக் கருதப்படும் வேளையில், மறுபுறம் ஊடகப் பொறுப்புக்கூறல் (Media Accountability) அவசியம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்! – Global Tamil News
3