வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் எழுதியவர், தினேஷ் குமார்பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த டெஸ்ட் தொடர் தனது இயல்பை (எதிர்பாராத்தன்மை) மாற்றிக்கொள்ளாது போல. ஆட்டம் முடிந்தது, எல்லாம் அவ்வளவுதான் என நினைக்கும் போதெல்லாம், இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மீண்டுவருவதை பார்க்கிறோம். நான்காம் நாளில் இந்தியா பெட்டியைக் கட்டும் என கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த நிலையில், உறுதியுடன் போராடி ஆட்டத்தை கடைசி நாளுக்கு எடுத்து சென்றிருக்கிறது இந்தியா.

எவ்வளவு நேரம் தோல்வியை தள்ளிப்போட முடியும் என்ற கவலையுடன் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. 544–7 என்ற வலுவான நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே ரன் சேர்ப்பதில் தீவிரம் காட்டியது. மழை பெய்திருந்ததால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கம் போல இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் அண்ட் லெந்த் பிடிக்காமல் பந்துவீசி ரன்களை வாரி இறைத்தனர்.

ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் தென்பட்டது. பழைய வேகம் இல்லையென்றாலும் பும்ராவின் பந்துவீச்சில் நம்பிக்கை தெரிந்தது. நல்ல லெந்த்தில் டாசனுக்கு அவர் வீசிய பந்து ஒன்று எதிர்பாராத உயரத்துக்கு எழும்பியது. அடுத்த பந்தை அதே லெந்த்தில் வீசிய அவர், சரியாக ஆஃப் ஸ்டம்ப்பின் தலைப்பகுதியை தாக்கி டாசனின் விக்கெட்டை கைப்பற்றினார். டாசன் ஆட்டமிழந்ததும், களமிறங்கிய கார்ஸ், கேப்டன் ஸ்டோக் உடன் இணைந்து அடித்து விளையாட தொடங்கினார்.

சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு சுமாராக பந்துவீசிய சுந்தர் பந்துவீச்சையும் ஸ்டோக்ஸ் விட்டுவைக்கவில்லை. ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து, சுந்தரின் லெந்த்தையும் ரிதத்தையும் சீர்குலைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசி, சதத்தை எட்டினார் ஸ்டோக்ஸ்உணவு இடைவேளைக்கு முன்பாக, இந்தியாவை பேட் செய்ய வைத்திட வேண்டும் என்கிற திட்டத்துடன் இங்கிலாந்து விளையாடியது. கில்லின் கேப்டன்சி, வழக்கம் போல நேற்றும் சொதப்பலாகவே இருந்தது. ஜடேஜா பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்டோக்ஸ் விரும்பமாட்டார் என்பதை மறந்துவிட்டு, நேரம் கடந்த பின்தான் ஜடேஜா கையில் பந்தை கொடுத்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சாதனைகளை நிகழ்த்திய இங்கிலாந்து

புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்து கேப்டனை ஜடேஜாவாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களுக்கு இது சாதனைகளை நிகழ்த்துவதற்கான டெஸ்ட் போல. நேற்று ரூட் பல்வேறு சாதனைகளை செய்த நிலையில், இன்று ஸ்டோக்ஸ், தன் பங்குக்கு சிலவற்றை நிகழ்த்தினார். ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்களும் கைப்பற்றிய, நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். முன்னதாக, டோனி கிரைக், இயன் போத்தம், கஸ் அட்கிட்சன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், காலிஸ் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜடேஜா பந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடிக்க முயற்சித்து, லாங் ஆன் திசையில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக 47 ரன்கள் குவித்த கார்ஸ் விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்ற, இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து, 600 ரன்களுக்கு மேல் குவிப்பது, இது ஏழாவது முறையாகும். 6 இல் 5 டெஸ்ட்களில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 2002 டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில், இந்திய அணி டிராவிட் சதத்தின் உதவியுடன் போராடி தோல்வியை தவிர்த்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாய் சுதர்சன்உணவு இடைவேளைக்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில், 311 ரன்கள் பின்தங்கிய இருந்த இந்தியா இன்னிங்ஸை தொடங்கியது.

ஒன்றரை நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்கிற நெருக்கடியுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்சன் விக்கெட்டுகளை இழந்தது. இந்த டெஸ்ட் தொடர் முழுக்க சுமாராக பந்துவீசிய வோக்ஸ், நேற்று சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பினார். 311 ரன்கள் பின்தங்கியிருக்கிறோம் என்பதை விட உணவு இடைவேளைக்கு முன்பு 15 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் விளையாடியாக வேண்டும் என்ற நெருக்கடியே அவர்களது விக்கெட்டை காவு வாங்கிவிட்டது எனலாம்.

ஸ்டம்ப் லைனில் வந்த பந்தை சரியான கோணத்தில் பேட்டை வைக்காமல் தடுக்க முயன்று, ஸ்லிப் திசையில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். முதல் ஓவரிலேயே விக்கெட் விழும் என எதிர்பார்க்காத சாய் சுதர்சன், முறையான தயாரிப்புகளின்றி அவசர அவசரமாக களத்துக்கு ஓடிவந்தார். கடுமையான உடற்சோர்விலும் மனச்சோர்விலும் இருந்த சுதர்சன், ஷார்ட் ஆஃப் லெந்த்தில் வோக்ஸ் வீசிய பந்தை தொடலாமா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில், கடைசி நொடியில் பேட்டை உயர்த்தி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ‘கோல்டன் டக்’காகி பெவிலியன் திரும்பினார்.

கில்லின் உச்சபட்ச ஆட்டம்

கடைசியாக இந்திய அணியின் இரு தொடக்க வீரர்களும் ‘ டக் அவுட்’ ஆனது, 1983 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில். அந்த டெஸ்டில் நான்காவது இடத்தில் களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காமல் 236 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் முதல் சில ஓவர்களுக்கு தாறுமாறாக ஸ்விங் ஆனதால், உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி விரைவில் சரணடையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனுபவ வீரர் கேஎல் ராகுலுடன் கைகோர்த்த கில், தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ராகுல் வழக்கம் போல, பந்தை தேய்த்துக் கொடுக்கும் வேலையை எடுத்துக்கொள்ள, தைரியமாக கில் பவுண்டரிகளை அடித்து விளையாடத் தொடங்கினார். கோட்டுக்கு (crease) வெளியே நின்றுகொண்டு, நல்ல லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளையும் ஹாஃப் வாலிகளாக மாற்றி கோடு கிழித்தது மாதிரி சில டிரைவ்கள் அடித்து, இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாயிண்ட் திசையில் கில் கொடுத்த எளிமையான கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கில், அபாரமாக விளையாடி அதிரடியாக அரைசதத்தை கடந்தார்.

2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி எடுத்த 655 ரன்களை கில் முந்தினார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை (732) நெருங்குகிறார். மறுமுனையில், நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல், தவறான லைன் அண்ட் லெந்த்தில் கிடைத்த பந்துகளை பின்னங்காலுக்கு சென்று பவுண்டரிக்கு அனுப்பவும் செய்தார்.

இந்திய அணி இந்தளவுக்கு போராடும் என்பதை இங்கிலாந்து நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. ஸ்டோக்ஸ் பந்துவீசாததை இந்திய பேட்ஸ்மென்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் களத்தில் சோர்வில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் சுவாரசியமே இதுதான். எல்லா வித தடைகளையும் கடந்து எந்த அணி கடைசி வரை உறுதியுடன் நிற்கிறதோ அதுவே வெற்றிபெறும்.

பட மூலாதாரம், Getty Images

ராகுல்–கில் இணை, கிட்டத்தட்ட 60 ஓவர்களுக்கு மேல் உறுதியுடன் விளையாடி, 174 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ரன்னின்றி (0–2) ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது, வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 1977/78 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், மெல்பர்ன் டெஸ்டில் மொஹிந்தர் அமர்நாத்–குண்டப்பா விஸ்வநாத் (105), 1902 இல் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆர்ச்சி மெக்லாரன்–ஸ்டான்லி ஜாக்சன் (102*).

ஐந்தாம் நாளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் நிச்சயம் ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும். பந்த் உடற்தகுதியுடன் இல்லாத நிலையில், ராகுல்–கில் இருவரும் இன்று முடிந்தமட்டும் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம்.

இந்தியா கடந்த காலத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில், மனஉறுதியுடன் விளையாடி தோல்வியை தவிர்த்துள்ளது. 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்ட், ஒரு சிறந்த உதாரணம். டிராவிட்–லக்ஷ்மண் போல, ராகுல்–கில் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி, தோல்வியின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுப்பார்களா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு