Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய பிரமாண்ட ஏரியின் இன்றைய நிலை – பிபிசி கள ஆய்வு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்27 ஜூலை 2025, 02:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்
ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன?
அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும்.
ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி.
கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து – பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார்.
அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்வரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது.
அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன்.
இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு – வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று…இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது ‘ராஜேந்திர சோழன்’ நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாகt தனது ‘பிற்காலச் சோழர்கள்’ நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.
கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை ‘கங்கா – ஜலமயம் ஜெயஸ்தம்பம்’, அதாவது ‘நீர்மயமான வெற்றித் தூண்’ எனக் குறிப்பிடுகின்றன.
திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் “சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:” எனக் குறிப்பிடப்படுகிறது.
அதாவது, “தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்” என்கிறது இந்தப் பாடல்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான ‘ஸ்தல சஞ்சிகை’ ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார்.
“உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி” என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, “ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை.
அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது” என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது.
“அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன.
மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது..”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில்இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார்.
இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்” என்கிறது அந்த நூல்.
மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, “இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது” என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர். கோமகன்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார்.
இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன்.
“இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்.”
ஆனால், “இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்” என்கிறார் ஆர். கோமகன்.
இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு