Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
1.ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு நீதிப்பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
2.ஈழத்தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதிப்பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படரமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
3.தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
4.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.
5.ஸ்ரீலங்காவில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
6.செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
7.தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும். (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)
8.தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் இறுதியில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்.
யாழ்ப்பாணம்
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான – நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியிலும் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் மாவட்ட செயலகம் முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன், வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா
தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வவுனியா புதியபேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் இடம்பெற்றது.
இதன்போது பன்னாட்டு நீதிபொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்தும் திரட்டப்பட்டது.
குறித்த ஆர்பாட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சமூக செயற்ப்பாட்டாளர்கள், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக ‘மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு’ அமைப்பினர் கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.