Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா – பிரிட்டன் ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய நகரங்களுக்கு எவ்வாறு சாதகம்?
பட மூலாதாரம், @narendramodi
படக்குறிப்பு, இந்தியா மற்றும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்கள், பியூஷ் கோயல் மற்றும் ஜோனாதன் ரெனால்ட்ஸ்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால், தமிழகத்திலுள்ள ஜவுளித்துறைக்கும், பொறியியல் துறைக்கும் பெரும் பலன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்குமென்றும், அதில் தமிழகத்துக்கான பலன் அதிகமாகக் கிடைக்குமென்றும் ஜவுளித்தொழில் அமைப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும் அதிகரிக்குமென்றும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு கணித்துள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவை விட பிரிட்டனுக்கே அதிக சாதகமாக இருக்குமென்று கூறும் வேறு சில தொழில் அமைப்பினர், சிறு, குறுந்தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி, 2 நாள் பயணமாக பிரிட்டன் சென்ற போது, இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வேளாண் விளைபொருட்களுடன், இந்திய ஜவுளிகள், பொறியியல் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் துறைக்கு பிரிட்டனில் உள்ள சந்தை விரிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தை பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம், இந்திய தொழில்துறையினரிடையே குறிப்பாக ஜவுளித்துறை மற்றும் பொறியியல் துறையில் முன்னிலை வகிக்கும் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்ஆயத்த ஆடை துறையினர் வரவேற்பு
கோவை, திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஜவுளித்தொழில் சார்ந்த அமைப்பினர் பலரும் இந்த ஒப்பந்தத்துக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனுக்கான ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு, முக்கியமாக தமிழகத்தின் பங்களிப்பு அதிகம் என்பது இதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
பிரிட்டன், உலகின் முக்கிய ஃபேஷன் மையங்களில் ஒன்றாகவும், ஆடை இறக்குமதியில் 5வது பெரிய நாடாகவும் இருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (AEPC – Apparel Export Promotion Council) தலைவர் சுதீர் சேக்ரி கூறுகிறார். கடந்த ஆண்டில் 19.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை பிரிட்டன் இறக்குமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் இந்தியா 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து பிரிட்டனுக்கான முதல் 4 ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிலிருந்து ஜவுளி ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்பது தமிழக ஜவுளித்துறை அமைப்புகளின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவின் துணைத்தலைவர் ஏ.சக்திவேல், இந்த ஒப்பந்தம், இந்திய ஜவுளித்துறைக்கு திருப்புமுனையாக அமையும் என்று கூறினார்.
பட மூலாதாரம், Xavier Selvakumar
படக்குறிப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவின் துணைத்தலைவர் ஏ.சக்திவேல்”தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், இங்கிருந்து ஏற்றுமதியாகும் 99 சதவீதப் பொருட்களுக்கு சுங்க வரியில் விலக்கு கிடைக்கும் அல்லது பெருமளவு வரி குறையும். உணவுத்துறை, ஆடைத்துறை, நகைத்தொழில் போன்ற பல துறைகளுக்கு பெரும்பலன் கிடைக்கும். ஜவுளித்துறையில், திருப்பூர், சூரத், லுாதியானா, புனே, சென்னை, குஜராத், மேற்கு வங்கம், அசாம் ஆகிய நாட்டின் முக்கியமான உற்பத்தி மையங்களுக்கு பிரிட்டனில் இருந்து கூடுதல் ஆர்டர்கள் அதிகரிக்கும்.” என்று நம்பிக்கை தெரிவித்தார் ஏ.இ.பி.சி. துணைத்தலைவர் ஏ.சக்திவேல்.
இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ”சுங்கவரிச் சலுகையால் பிரிட்டன் ஆடைச்சந்தையில், சீனா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் போட்டித்திறன் அதிகரிக்கும். முக்கியமாக, தமிழகத்திலிருந்து பிரிட்டனுக்கான ஜவுளி ஏற்றுமதியின் அளவு இரட்டிப்பாகும். இப்போது ஆயத்த ஆடை ஏற்றுமதி 0.8 பில்லியன் டாலர் (ரூ.12,325 கோடி) என்ற அளவில் உள்ளது. இது 2 பில்லியன் டாலராக (ரூ.27,325 கோடி) அதிகரிக்கும். நெசவுத்துணி ஏற்றுமதி, தற்போது ரூ.6800 கோடியாகவுள்ளது. அது ரூ.17 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது” என்றார்.
இதையே எதிரொலிக்கும் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்குழுவின் தலைவர் கே.சக்திவேல், தமிழகத்திலுள்ள வீட்டு உபயோக ஜவுளித்துறைக்கு இது பெரும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். படுக்கை விரிப்பு, திரைச்சீலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளிப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், சிறு, குறு நிறுவனங்களின் ஏற்றுமதியையும் அதிகப்படுத்தி, பிரிட்டனின் பிரீமியம் சந்தைகளில் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Gopalakrishnan
படக்குறிப்பு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன்’வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியும் இரட்டிப்பாகும்’
தமிழகத்தில் கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் தான், திரைச்சீலை, படுக்கை விரிப்பு போன்ற வீட்டு உபயோக ஜவுளிகள் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. அங்குள்ள பல்வேறு தொழில் அமைப்புகளும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளன.
பிபிசி தமிழிடம் பேசிய கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ”தற்போது இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டு உபயோக துணி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது அடுத்து வரும் 5 அல்லது 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இது பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராமப்புற தொழிலாளர்களுக்கும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.” என்றார்.
ஹோம் டெக்ஸ்டைல்ஸ் மையமாக உருவெடுத்துள்ள கரூர், பிரிட்டன் சந்தையில் சுங்கச்சுமையின்றி நுழைய வாய்ப்பு பெறுவதால் ஏற்றுமதி, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பில் பெரிதும் முன்னேற்றத்தை கொண்டு வரும் என்று கூறும் கோபாலகிருஷ்ணன், இதனால் வர்த்தக வளர்ச்சி மட்டுமின்றி இருநாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மையும் மேலும் மேம்படுமென்றும் தெரிவித்தார்.
இதேபோன்று பொறியியல் துறை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதிக்கும் இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்று பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவும் (EEPC – Engineering Export Promotion Council) நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஏற்றுமதி அளவு 4.3 பில்லியன் டாலரிலிருந்து 7.5 பில்லியன் டாலராக அதிகரிக்குமென்று இந்த அமைப்பின் தேசியத்தலைவர் பங்கஜ் சடா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி சந்தைகளில் பிரிட்டன் ஆறாவது இடத்தில் இருப்பதாகக் கூறியுள்ள பங்கஜ், கடந்த நிதியாண்டில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 11.7 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் பொறியியல் ஏற்றுமதி 4.28 பில்லியன் டாலராகவே உள்ளது, இது பிரிட்டனின் மொத்த பொறியியல் ஏற்றுமதியில் 2.2 சதவீதத்திற்கும் குறைவான அளவு என்று கூறியுள்ளார்.
சில முக்கிய பொறியியல் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தால் அது முற்றிலும் நீக்கப்படும் என்பதால் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சி ஏற்படுமென்று அவர் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஏற்றுமதியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்
இதில் தமிழகத்திற்கான பலன் குறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழுவின் (EEPC) கோவை கிளையின் தலைவரும், ஏழு மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான சந்திரசேகர் விரிவாக விளக்கினார். இந்தியாவில் தேசிய தலைநகர மண்டலத்திலுள்ள (NCR) காசியாபாத்துக்கு அடுத்ததாக 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய கிளையாக கோவை கிளை இருப்பதாகக் கூறும் இவ்வமைப்பினர் அதற்கு இங்குள்ள திறன்மிகு பொறியியல் உற்பத்தி நிறுவனங்களே காரணமென்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய சந்திரசேகர், ”தமிழகத்திலிருந்து ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவையில் இந்த நிறுவனங்கள் மிக அதிகம். அதேபோன்று பலவிதமான வால்வுகள், இயந்திர உதிரி பாகங்கள் இங்கே உற்பத்தியாகின்றன. ஆனால் பொறியியல் பொருட்களுக்கு பிரிட்டன் ஒரு பெரிய சந்தை என்று சொல்ல முடியாது. ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் போடப்பட்டால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.” என்றார்.
”பொறியியல் பொருட்களுக்கு தற்போது 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதம் வரை அங்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது. இப்போது 4 பில்லியன் யூரோ டாலர் அளவுக்கு பொறியியல் பொருட்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகின்றன. சுங்கவரி குறைவதாலும், பல பொருட்களுக்கு முற்றிலும் நீக்கப்படுவதாலும் இன்னும் ஆறேழு ஆண்டுகளில் 7.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும். அதேநேரத்தில் ஒப்பந்தத்தில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முக்கியமாக ஹெச்.எஸ் குறியீடு (HS code- Harmonized System code) பார்த்து வரி விதிக்கப்படும். அதைப் புரிந்து கொண்டு வர்த்தகம் செய்வதும் முக்கியம்.” என்கிறார் சந்திரசேகர்.
பட மூலாதாரம், Getty Images
இந்த ஹெச்.எஸ் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உலகளாவிய அளவில் வர்த்தகம் செய்வதற்கான 11 எண்களைக் கொண்ட ஒரு பொதுக்குறியீடு ஆகும். உதாரணமாக ஒரு 100 சிசி மோட்டார் சைக்கிளுக்கு உலகம் முழுவதற்கும் ஒரு ஹெச்.எஸ் குறியீடு இருக்கும். அதேபோன்று 1000 சிசி பெட்ரோல் கார், ஆண்ட்ராய்டு போன், டிஜிட்டல் வாட்ச் என ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஹெச்.எஸ் குறியீடு இருக்கும் என்கின்றனர். அதைத் தனியாகவும், ஒரு குரூப்பிங் ஆகவும் பிரித்து அதன்படி வரி விதிக்கப்படும். இதைக் கவனிப்பது அவசியம் என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதனால் எந்தெந்தப் பொறியியல் பொருளுக்கு அதாவது எந்தெந்த ஹெச்.எஸ் குறியீடு உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தே உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென்று கூறும் சந்திரசேகர், ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்று நம்பி சிறு,குறுந்தொழில் முனைவோர் நவீன இயந்திரங்களை வாங்கிப் போட்டு அதற்கேற்ப ஆர்டர் கிடைக்காவிட்டால் கடனாகிவிடும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.
‘பிரிட்டன் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சலுகைகள்’
இந்த ஒப்பந்தம் கொண்டாட வேண்டிய ஒன்றல்ல, மாறாக எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய விஷயம் என்கிறார் இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ரகுநாதன். இதுபற்றி பேசும் அவர், ”இந்த ஒப்பந்தத்தில் பிரிட்டன் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இங்குள்ள சிறு, குறுந்தொழில் முனைவோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் ஒப்பந்தத்தின் விளைவை அறிவதற்கு ஒரு கூட்டு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். பாதிப்பு இருப்பதாக அறிந்தால் இங்குள்ள சிறு, குறுந்தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டும்.” என்கிறார்.
ஏறத்தாழ இதே கருத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) தலைவர் ஜேம்ஸ், ”இந்த ஒப்பந்தத்தால் இங்குள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. மாறாக அவர்களின் உற்பத்திப் பொருட்கள் இங்கே வரியின்றி இறங்கும் வாய்ப்புள்ளதால் பாதிப்பே அதிகரிக்கும். ” என்கிறார்.
”இந்தியாதான் உலகின் மிகப்பெரிய சந்தை. பிரிட்டன் சிறிய நாடு, மக்கள் தொகை குறைவு என்பதால் அவர்களின் வர்த்தகத் தேவை குறைவு. நமக்கு சில சலுகைகளைக் கொடுத்து விட்டு, மிகப்பெரிய பலனை அடையவே பிரிட்டன் ஒப்புக்கொள்ளும். அதற்கான முயற்சிதான் இந்த ஒப்பந்தம். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் பிரிட்டனுடனான ஒப்பந்தம், அதற்கு எந்த வகையிலும் உதவ வாய்ப்பில்லை.” என்கிறார் ஜேம்ஸ்.
பட மூலாதாரம், K.M.Subramaniam
படக்குறிப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் (TEA) கே.எம்.சுப்பிரமணியம்’இரு ஆண்டுகளில் ஆயத்த ஆடை ஏற்றுமதி இரட்டிப்பாகும்’
மற்ற துறைகளைக் காட்டிலும் இந்த ஒப்பந்தம், இந்திய ஜவுளித்துறைக்கு அதிக பலனளிக்கும் என்பதை பல்வேறு தொழில் அமைப்பினரும் ஒருமித்து சுட்டிக்காட்டுகின்றனர். அதிலும் தமிழக ஜவுளித்துறைக்கு அதிகளவில் பலன் கிட்டுமென்றும் ஜவுளித்துறையினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர். இதற்கு இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு அதிகமிருப்பதைக் காரணமாகத் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் (TEA) கே.எம்.சுப்பிரமணியம், ”ஓராண்டாக இந்த ஒப்பந்தத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தோம். இப்போது கையெழுத்தாகியுள்ளது. உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்கெனவே அடுத்த ஆண்டில் 15 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பிருந்தது. இந்த ஒப்பந்தத்தால் மேலும் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.” என்றார்.
கடந்த ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு செய்யப்பட்ட ஏற்றுமதி, அடுத்த ஆண்டிற்குள் ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்குமென்று நம்பிக்கை தெரிவித்த சுப்பிரமணியம், தற்போது பிரிட்டனுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு நடக்கும் ஜவுளி வர்த்தகம் அப்படியே இரட்டிப்பாகி ரூ.8 ஆயிரம் கோடியாகும் என்கிறார். அதற்கேற்ப ஜவுளி நிறுவனங்களில் கட்டடம், நவீன இயந்திரங்கள் என கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமென்று கூறும் அவர், அதற்கு அரசுகள் உதவ வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
பட மூலாதாரம், Prabhu Thomodaran
படக்குறிப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன்இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன், ”தற்போது பிரிட்டன் ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 6 சதவீதமாகவுள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு பிரிட்டனுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மிக விரைவில் 10 சதவீத பிரிட்டன் ஜவுளி சந்தையை நம்மால் கைப்பற்ற முடியும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள்ளாகவே, இப்போது இருப்பதை விட நமக்கு ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி வர்த்தகம் அதிகரிக்கும்.” என்றார்.
இவ்வாறு அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதியில் 40 சதவீத பலன் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்று கூறிய பிரபு தாமோதரன், இந்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்து தமிழகத்தில் ஏற்கெனவே பல ஜவுளி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக் கட்டமைப்பை மேம்படுத்தத் துவங்கிவிட்டதாகத் தகவல் தெரிவித்தார்.
”இப்போதே பல ஜவுளி நிறுவனங்கள், கட்டடம், இயந்திரங்கள் நிறுவுவது போன்ற பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர். அதேபோன்று ஜவுளி உற்பத்தியாளர்கள், Buyer எனப்படும் ஜவுளி இறக்குமதியாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தையும் ஏற்கெனவே துவங்கி நடந்து வருகிறது.” என்றார் பிரபு தாமோதரன்.
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிடும் மற்ற நாடுகள் பெரும்பாலும், ஆயத்த ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலையில், இந்தியாவில் மட்டுமே அனைத்தும் கிடைக்கின்ற சூழ்நிலை இருப்பதாகக் கூறும் பிரபு தாமோதரன், உலகளாவிய ஒரு அரசியல் நெருக்கடி வரும்பட்சத்தில், பிற நாடுகளை நம்பியுள்ள நாடுகளின் ஆடை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்கிறார். இந்தியாவுக்கு அந்த நிலையில்லை என்பதால், இதுபோன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யவே பிரிட்டன் வர்த்தகர்கள் விரும்புவார்கள் என்பதும் ஒரு கூடுதல் பலம் என்கிறார் பிரபு தாமோதரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு