Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ்நாட்டின் முதல் பௌத்த ஸ்தூப சின்ன கல்வெட்டில் உள்ள கடைக்கோட்டூர் எங்கே உள்ளது?
படக்குறிப்பு, பௌத்த ஸ்தூப சின்னத்துடன் கூடிய பௌத்தப் பள்ளி குறித்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு.எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜகதாப் கிராமத்தில் பௌத்த ஸ்தூப சின்னத்துடன் கூடிய 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு சில சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கோயில்களுக்கு அரசர்கள் தானம் அளித்த செய்திகளைத் தெரிவிப்பவையாகவே உள்ளன. அதிலும் சைவ, வைணவக் கோவில்களுக்கு தானம் அளிப்பதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளாகளாகவே அவை இருக்கின்றன.
ஒரு சில கல்வெட்டுகள் சமணம், பௌத்தம் தொடர்பான செய்திகளைத் தருகின்றன. சோழப் பேரரசன் ராஜராஜன், சூடாமணி பௌத்த விகாரை கட்ட ஶ்ரீ விஜய மன்னனுக்கு அனுமதி வழங்கியதை பெரிய லெய்டன் செப்பேடு தெரிவிக்கிறது.
திருச்சிராப்பள்ளி கீழ்க்குறிச்சி கல்வெட்டு, கும்பகோணம் திருவிளந்துறை கோயிலின் நிலைக்காலில் கிடைத்த கி.பி. 1580ஆம் ஆண்டைச் சேர்ந்த தானக் கல்வெட்டு, 15ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது ராஜராஜப் பெரும்பள்ளியானது ஸ்ரீமாஹேஸ்வரப் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதை குறிப்பிடும் நாகேஸ்வரர் கோயில் கல்வெட்டு ஆகியவை தமிழ்நாட்டில் இதுவரை கிடைத்த பௌத்தக் கல்வெட்டுகளாக இருக்கின்றன.
பௌத்த ஸ்தூப சின்னம்
இப்படி தமிழ்நாட்டில் ஆங்காங்கே பௌத்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு வந்தாலும் பௌத்த ஸ்தூப சின்னத்துடன் கூடிய பௌத்தப் பள்ளி பற்றிய கல்வெட்டுகள் எதுவும் தமிழகத்தில் கண்டறியப்பட்டதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே ஜகதாப் என்ற கிராமத்தில் பௌத்த ஸ்தூப சின்னத்துடன் கூடிய பௌத்தப் பள்ளி குறித்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற காப்பாட்சியரான கோவிந்தராஜ் என்பவர் இந்தக் கல்வெட்டை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
இக்கல்வெட்டு அக்கிராமத்தில் உள்ள நாசன் என்பவரின் மாந்தோப்பில் இருக்கிறது. இந்த கல்வெட்டையும் சின்னங்களையும் படிப்பது சற்று சிரமமான காரியமாகவே இருந்தது என்றார் கோவிந்தராஜ்.
படக்குறிப்பு, இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன.”இக்கல்வெட்டின் முற்பகுதி சமன் செய்யப்படாத பாறையில் இடம்பெற்றிருந்தது. இதனால் மூன்று முறை நேரில் சென்று படிக்க வேண்டியிருந்தது. மடிக்கணினியில் புகைப்படத்தை வைத்து, கடைக்கோட்டூர் என்பதைப் படித்தறிய மட்டும் 2 நாட்கள் தேவைப்பட்டன” என்கிறார் அவர்.
அந்தக் கல்வெட்டில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன:
“ஸ்வஸ்திஸ்ரீ கடைக்கோட்டூர் நாற்பத்
தெண்னாட்டு நானா தேசிச் சித்திரமேழிப்பெரும்பள்ளி
ப்புத்த தம்மமாக… (கணசமாக) இம்மார மங்கல நாற்பாலெல்லை குடுத்தேன் நன்செய் புன்செயும் புளிய… ளி ஏரியும் யிதேவனார் பக்கலிலே பொன்னற இட்டு மண்ணறக் கொண்டு ….ட்டேன்…மங்கல முடையான் தில்லையேன்
இத்தன்மம் அழிவு செய்தாருண்டாகில் கெங்கைக் கறை குறால் பசுவை கொன்றான் பாபங்கொள்வான்”
கடைக்கோட்டூர் நாற்பத்தெண்னாட்டு நானாதேசிச் சித்திரமேழிப் பௌத்தப் பெரும்பள்ளிக்கு மார மங்கலமுடையான் தில்லையன் என்பவன் பொன்னைக் கொடுத்து நிலத்தை வாங்கி மாரமங்கலம் என்று தன் பெயரில் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிப்பதாக அந்தக் கல்வெட்டின் அர்த்தத்தை விளக்கினார் கோவிந்தராஜ்.
கல்வெட்டில் இரண்டு குறியீடுகள்
படக்குறிப்பு, கல்வெட்டையும் சின்னங்களையும் படிப்பது சற்று சிரமமான காரியமாகவே இருந்தது என்றார் கோவிந்தராஜ்.இக்கல்வெட்டின் தொடக்கத்தில் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று, “ஒரு வட்டத்தினை நான்காகப் பிரிக்கும் வகையிலான கூட்டல் குறியுடன் கூடியதாகவும் அதன் செங்குத்துக் கோடு கீழே நீண்டு சிறு கிடைக்கோட்டில் முடிந்தும் காணப்படுகிறது. மேல் மற்றும் கிடைக்கோட்டின் இரு முனைகளிலும் சுடர் அல்லது சூலம் போன்று மூன்று கோடுகள் உள்ளன.
இக்குறியீடு ஒரு தாங்கியின்மீது நிற்கும் நான்கு ஆரங்களைக் கொண்ட தர்மசக்கரத்தைக் குறிக்கிறது. அதனை அடுத்து உள்ள குறியீடு ‘மார்பளவு மனிதத் தலையின்மீது கூம்பு’ இருப்பது போல் உள்ளது. இதனை ஒரு ஸ்தூபத்தின் கட்டட அமைப்புடன் ஒப்பிடலாம்” என்கிறார் கோவிந்தராஜ்.
கீழ் செவ்வகப் பகுதி ஒரு பௌத்த ஸ்தூபத்தின் மேடைப் (மேதி) பகுதியாகவும் அதன் மீதுள்ள முக்கால் வட்டப்பகுதி அண்டம் (அண்டா) என்னும் ஸ்தூபத்தின் நடுப்பகுதியாகவும், அதன் மேலுள்ள முக்கோணப் பகுதி ஸ்தூபத்தின் உச்சியில் காணப்படும் குடைப் பகுதியாகவும் (சத்ரா) அடையாளம் காண முடிவதாகவும் குறிப்பிடுகிறார் அவர்.
குறியீடுகள் எதனை உணர்த்துகின்றன?
இதுபோன்ற குறியீடுகள் இதற்கு முன்பு சில இடங்களில் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணிகிலுப்பை என்ற ஊரின் ஏரிக்கரையில் சோழர் காலத்து புத்தர் சிற்பம் ஒன்று உள்ளது.
அதற்கு, நேர் எதிரே சற்றுத் தொலைவில் 5 அடி உயரத்தில் தூண் போன்ற ஒரு கல் இருக்கிறது. அந்தத் தூணில் மேலே ஒரு பத்ம பீடத்தின் மீது வட்டமும் அதன் மீது ஒரு முக்கோணமும் உள்ளன. இதுவும் ஜகதாப் கிராமத்தில் கிடைத்த ஸ்தூப குறியீடு போன்றே ஒரு ஸ்தூபத்தின் அலங்காரமான அடையாளம் தான். அதற்கு கீழே நான்கு ஆரங்களுடன் கூடிய தர்ம சக்கரம் இருப்பதையும் காண முடியும்.
மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டு தற்போது சோழிங்கநல்லூரில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் பின்பக்கத்தில் மிக லேசாக பொறிக்கப்பட்டுள்ளதும் ஒரு ஸ்தூபத்தின் சின்னமாகும். கீழுள்ள சதுரப்பகுதி தூண்போல நீண்டும் அதன்மீது வட்டமும் அதன்மீது கூம்பாய் முடியும் சில அடுக்கு வளையங்களும் புலப்படுகின்றன.
ஜகதாப் கல்வெட்டிலும் கணிகிலுப்பையில் புத்தர் சிலைக்கு முன்னால் உள்ள தூணிலும், பட்டு கிராமத்தில் புத்தர் சிலையின் முதுகிலும் பொறிக்கப்பட்டுள்ளவை எல்லாமே பௌத்த ஸ்தூப சின்னம் என்று குறிப்பிடும் கோவிந்தராஜ், கீழ்க்குறிச்சியில் கிடைத்த பௌத்தப் பள்ளி கல்வெட்டில் பூர்ண கும்பம், குத்து விளக்குகள், கத்தி, வில், உடுக்கை வடிவில் பசும்பை, கலப்பை ஆகியவற்றோடு தர்மசக்கரமும் காணப்படுகிறது. ஆனால் அதில் ஸ்தூப சின்னம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
திரிசூலம் சைவ தேவதானங்களிலும், சக்கரம், சங்கு, வாமனர் உருவங்கள் வைணவ தானங்களிலும், முக்குடை சமண தானங்களிலும் குறிப்பிடப்படுவது போல பௌத்த தானங்களில் இந்த தர்ம சக்கரம் மற்றும் ஸ்தூப சின்னங்கள் பொறிக்கும் வழக்கம் உள்ளதை இந்த ஜகதாப் கல்வெட்டு உணர்த்துகிறது என்கிறார் கோவிந்தராஜ்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கல்வெட்டில் குறிப்பிடப்படும் கடைக்கோட்டூர் எங்கு இருந்தது?
தருமபுரி அருங்காட்சியகத்தில் இரண்டு புத்தர் சிலைகள் இருக்கின்றன. இந்த புத்தர் சிலைகள் இரண்டும் ‘கடைக்கோட்டூரான தேசி உய்யகொண்ட சோழப் பட்டணம்’ என கல்வெட்டுகள் குறிப்பிடும் கடகத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை.
கடகத்தூரில் தொடக்கப் பள்ளி கட்டடம் கட்டுவதற்காக குழிகள் தோண்டும்போது கிடைத்த சிலைகள் இவை. அவற்றில் ஒன்று நின்ற நிலையிலும் மற்றது அமர்ந்த நிலையில் தலை நீக்கப்பட்டும் உள்ளது. மேலும் கடகத்தூர் சிவன் கோயில் மண்டப மேற்கு சுவரில் உள்ள விஜயநகர கால கல்வெட்டில் இக்கோயிலுக்கு வழங்கிய தானத்தை குறிப்பிடும்போது கிரந்த எழுத்துகளில் “புத்தர் தம்மம் …உட்பட்டனவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜகதாப் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘கடைக்கோட்டூர் நாற்பத்தெண்னாட்டு நானா தேசிச் சித்திரமேழிப்பெரும்பள்ளி’ இருந்த இடம் இன்றைய கடகத்தூர்தான் என்கிறார் கோவிந்தராஜ்.
தொடர்ந்து பேசிய அவர், “இக்கல்வெட்டில் தானம் வழங்கியவர் தன்னை ‘மங்கலமுடையான் தில்லையேன்’ எனக் குறிப்பிட்டுக்கொள்கிறார். இக்கல்வெட்டின் அருகே காணப்படும் தர்ம சக்கர, ஸ்தூப சின்னங்களுக்கு சற்று இடப்புறமாக உடுக்கை அல்லது பசும்பை என்ற குறியீடும் ஒரு வாளும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் பொதுவாக வணிகக் குழு கல்வெட்டுகளில் காணப்படும் குறியீடுகள் ஆகும்” என்றார்.
“இக்குறியீடுகளைக் கொண்டு தானம் அளித்த மங்கலமுடையான் ஒரு வணிகனாகவோ அல்லது வணிகர்களை பாதுகாக்கும் படைத் தலைவனாகவோ இருக்கலாம்” என்கிறார் கோவிந்தராஜ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு