சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் – விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

எழுதியவர், எஸ். தினேஷ் குமார்பதவி, பிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை.

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில்

சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார்.

கில்லின் கேப்டன்சி, உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாக தெரியவில்லை. பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி களத்துக்கு செல்கிறார். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை எனில், வியூகத்தை மாற்றாமல் அதையே திரும்பத் திரும்ப முயன்று பார்த்து சோர்ந்துவிடுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அப்படியே கில்லுக்கு நேரெதிராக இருப்பதை பார்க்கலாம். வாய்ப்பே இல்லாத ஒன்றை கூட, தனது வியூகத்தை பயன்படுத்தி, கடைசி வரைக்கும் முயன்று நிகழ்த்திக்காட்டுகிறார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Clive Mason/Getty Images

கடைசியில், ரூட்–போப் பார்ட்னர்ஷிப்பை, வாஷிங்டன் சுந்தர்தான் உடைத்தார். சுந்தரை சீக்கிரம் கொண்டுவந்திருந்தால், இவ்வளவு ரன்களை போப் குவித்திருக்க மாட்டார். பந்து தாறுமாறாக எல்லாம் திரும்பவில்லை என்றபோதும், காற்றில் டிரிஃப்டை (Drift) பயன்படுத்தி, வலக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை கொண்டுசென்றார். சுந்தரின் டிரிஃப்டை கணிக்க முடியாமல்தான் போப் தவறான லைனில் ஆடி, ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான புரூக், இறங்கிவந்து விளையாட முயன்று ஸ்டம்பிங் ஆனார்.

வழக்கம் போல, கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாவிட்டாலும், போப்பின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை, உடல் இரண்டையும் முன்னகர்த்தி அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்த விதம் அபாரமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனுக்கு கால் நகர்வுக்கு நிகராக தலை நகர்வும் அவசியம். சுழற்பந்து வீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டு ரன் குவித்தார். அவருடைய துருதுருப்பான பேட்டிங், இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை ஞாபகப்படுத்தியது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். நாயகனாக மிளிர்ந்த ஜோ ரூட்

சந்தேகமே இன்றி நேற்றைய நாளின் நாயகன் ஜோ ரூட்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ரூட் அளவுக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேறு எவருமில்லை. எப்போது ரன் சேர்த்தார் என்று தெரியாத அளவுக்கு, நேற்றைய நாள் முழுக்கவும் அடக்கமாக ரன் சேர்த்தார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்பட தனக்குப் பிடித்தமான ஷாட்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி சதத்தை எட்டினார். இந்த தொடர் முழுக்க பிரமாதமாக விளையாடாவிட்டாலும், தொடரில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதற்கு ரூட்டின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம்.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் இருந்து ரூட்டை எடுத்துவிட்டால், அது ஒரு சாதாரண அணியாக மாறிவிடும். நேற்று ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில், டிராவிட், காலிஸ், பாண்டிங் என மூன்று ஜாம்பவான்களையும் முந்தினார். கம்போஜ் பந்தை ஃபைன்லெக் திசையில் தட்டிவிட்டு தனது 38வது சதத்தை பதிவுசெய்த அவர், அதிக சதங்கள் எடுத்தவர்கள் வரிசையில், சங்கக்காராவை சமன்செய்தார்.

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

ரூட் சதத்தை கடந்த பிறகு, இந்தியா முழு நம்பிக்கையும் இழந்துவிட்டது. களத்தில் இந்திய வீரர்களின் உடல்மொழி, அதிர்ஷ்டத்தில் விக்கெட் ஏதும் கிடைக்காத என ஏங்குவதை போலிருந்தது. பும்ரா வழக்கத்தை விட வேகம் குறைவாக பந்துவீசியது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சராசரியாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் அவருடைய பந்துகளை மிகவும் அலட்சியமாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று நிச்சயம் அணி நிர்வாகம் நினைத்திருக்கும்.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் இலக்கு என கில் பேட்டி கொடுத்தார். ஆனால், மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல், 10-20 உதிரி ரன்களுக்கு ஆசைப்பட்டு ஆல்ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்பினால், 20 விக்கெட்கள் எடுக்க முடியாது என்பதை கில் இப்போது உணர்ந்திருப்பார்.

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

இங்கிலாந்து அணி, ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பும்ராவை, 28 ஓவர்கள் பந்துவீச பணித்துள்ளார் கேப்டன் கில். அணித் தேர்வில் கவனம் செலுத்திருந்தால், பும்ராவுக்கு இவ்வளவு வேலைப்பளு ஏற்பட்டிருக்காது. கடைசி 3 விக்கெட்களை விரைவாக இழந்தாலும், ஸ்டோக்ஸ் களத் நிற்பதால், நான்காம் நாளில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய இங்கிலாந்து முயற்சிக்கும்.

நான்காம் நாளில், மதிய உணவு இடைவேளை வரை விளையாடினாலே, பெரிய லீடை (Lead) இங்கிலாந்து எட்டமுடியும். பிறகு, 150 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்படும். தசைப்பிடிப்பால் ரிட்டர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் களத்துக்கு வந்தது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை களைந்தது.

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா?

இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டுமானால், கேஎல் ராகுல் எண்ணிலடங்கா பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். கடைசி 3 இன்னிங்ஸ்களாக ரன்னின்றி தவிக்கும் கேப்டன் கில், பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியாக வேண்டும்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னபடி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தொடரின் இறுதிக்கட்டத்தில் வீரர்களுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயிருக்கும். ஆரம்பகட்டத்தில் இருந்த ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வரும். தோல்வியின் விரக்தியில் இருக்கும் அணி, நிதானத்தை இழந்து நிறைய தவறுகளை செய்யத் தொடங்கும். கில் தலைமையிலான இந்திய அணி, இப்போது அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது.

இரண்டாம் நாளின் கடைசியில் புதிய பந்தை எடுக்காதது, புதிய பந்தை அனுபவம் இல்லாத கம்போஜிடம் கொடுத்தது, தவறான நேரத்தில் பவுன்சர் பொறியை கையில் எடுத்தது என இந்தியா செய்த தவறுகள் அநேகம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்திய அணி எழுச்சி பெறுமா என்று பார்ப்போம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு