Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இளம்பெண் வலையில் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் – தாயின் சிறு தவறால் குடும்பமே சிக்கியது எப்படி?
பட மூலாதாரம், Rajwinder Singh/BBC
படக்குறிப்பு, திருமணம் செய்து கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக 12 இளைஞர்களை ஏமாற்றிய ஹர்பிரீத் கவுர்எழுதியவர், ஹர்மன்தீப் சிங் பதவி, பிபிசி பத்திரிகையாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
‘அன்பும் துரோகமும்’ என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இந்தக் கதை மன வேதனையின் கதை அல்ல, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக திருமண ஆசை காட்டிய மோசடி பெண்ணின் ஏமாற்றுக்கதை என்றால், பண மோசடியால் பாதிக்கப்பட்ட பல ஆண்களின் சோகக் கதை.
இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஹர்பிரீத் கவுர், அவர் ஒன்றல்ல, 12 இளைஞர்களை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹர்பிரீத் கவுரின் தாய் சுக்தர்ஷன் கவுர், சகோதரர் மன்பிரீத் சிங் மற்றும் அசோக் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹர்பிரீத் கவுர் கனடாவில் இருப்பதால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 12 இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 1.60 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோசடி அம்பலமானது எப்படி?
கனடாவில் குடியேற விரும்பிய இளைஞர் ஒருவர் ஹர்பிரீத் கவுர் மோசடி செய்ததாக புகார் அளித்த பின்னரே இந்த மோசடி அம்பலமானது என காவல்துறையினரிடமிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஹர்பிரீத்தும் அவரது குடும்பத்தினரும் பல இளைஞர்களை மோசடி செய்து சுமார் ரூ.1.60 கோடி வசூல் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
தாயாரின் உடல்நிலை சரியில்லை, தனது கல்விக் கட்டணம், இளைஞருடன் வெளியில் செல்வதற்காக என பல்வேறு காரணங்களை கூறி, ஹர்பிரீத் கவுர் பணம் வாங்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
காவல்துறையினரின் கருத்து என்ன?
பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, லூதியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த குறைந்தது 12 இளைஞர்கள் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
“இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹர்பிரீத் கவுரின் தாய் சுக்தர்ஷன் கவுர், தனது மகள் கனடாவில் வசிப்பதாக கூறுவார். ஹர்பிரீத் கவுரை திருமணம் செய்துக் கொண்டால், கனடாவுக்கு சென்றுவிடலாம் என்று வாக்குறுதி அளிக்கும் சுக்தர்ஷன் கவுர், அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு இளைஞர்களின் பெற்றோரிடம் பணம் வாங்கிவிடுவார். குற்றம் சாட்டப்பட்ட ஹர்பிரீத் கவுர், திருமணத்திற்கு துணை தேட உதவும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை தொடர்பு கொள்வார். அசோக் குமார் ஒரு இடைத்தரகராக இருந்தார்” என்று உதவி துணை ஆய்வாளர் ஹர்ஜித் சிங் கூறினார்.
மேட்ரிமோனியல் தளங்களைத் தவிர, கனடா செல்ல விரும்பும் இளைஞர்களையும் அவர்கள் இலக்கு வைத்தனர்.
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், ஹர்பிரீத் கவுரின் புகைப்படத்தை வைத்து திருமணத்தை நிச்சயித்துவிடுவார்கள். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, ஹர்பிரீத் கவுர், நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைகளுடன் தொடர்ந்து பேசுவார்.
ஹர்பிரீத்தின் தாய், வெகு இயல்பாக பேசுவது போல, கைம்பெண்ணான தான், தனது மகளை வளர்க்க எதிர்கொண்ட சிரமங்கள், கல்விக்கான செலவுகள் மற்றும் பிற கடன்கள் பற்றி மணமகன் வீட்டாரிடம் பேசத் தொடங்குவார். அடுத்த சில நாட்களில் செலவுகள் மற்றும் கடன்களைக் காரணம் காட்டி, இளைஞர்களின் குடும்பத்தினரிடம் பணம் கேட்பது வழக்கம்.
இதைப் பற்றி விரிவாக பேசிய உதவி துணை ஆய்வாளர், “பணப் பரிமாற்ற செயல்முறை முற்றிலும் சட்டப்பூர்வமானது. குற்றம் சாட்டப்பட்ட ஹர்பிரீத் கவுர், மணமகனை கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக உறுதியளித்தார். பணம் நேரடியாக பெண்ணின் சகோதரர் மன்பிரீத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொகை நிரப்பப்படாத, ஆனால் கையெழுத்திட்ட வெற்று காசோலைகளையும் வழங்கினார். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நம்பிவிட்டனர்.”
வழக்கின் பின்னணி
லூதியானாவின் டோராஹா நகரில் பண மோசடி வலையை விரித்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், அங்கு ஒருவரை ஏமாற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் மோசடி நடப்பதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம், ஹர்பிரீத் கவுரின் தாயார் காட்டிய அலட்சியமே. தனது மகளுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை, ஹர்பிரீத் கவுருடன் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவருக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார்.
ஜூலை 10ஆம் தேதி லூதியானா மாவட்டத்தின் ஃபைஸ்கர் என்ற கிராமத்தில் வசிக்கும் 27 வயது ஜஷன்தீப் சிங்குடன் ஹர்பிரீத் கவுருக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. அங்கு, ஹர்பிரீத் கவுரால் ஏமாற்றப்பட்ட பதிண்டாவைச் சேர்ந்த 28 வயது ராஜ்விந்தர் சிங் வந்துவிட்டார்.
ஹர்பிரீத்தின் தாய் தன் மகளுக்கு அனுப்புவதாக நினைத்து ராஜ்விந்த்ர சிங்குக்கு அனுப்பிய செய்தியில், ஃபைஸ்கர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து பணம் பெறுவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்னணி
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஹர்பிரீத் கவுர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்வி விசாவில் கனடா சென்றார். அவர் தற்போது கனடாவின் சர்ரே நகரில் வசித்து வருகிறார்.
விசாரணை உதவி துணை ஆய்வாளர் (ASI) ஹர்ஜித் சிங் கூறுகையில், ஹர்பிரீத் கவுர் கனடாவுக்கு படிக்கச் சென்றபோது ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் ஹர்பிரீத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு குடும்பத்தினர் தான் ஏற்றுக்கொண்டனர். ஹர்பிரீத், அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் கனடாவுக்கு அழைத்துச் செல்வார் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஹர்பிரீத் கவுரின் தாய் சுக்தர்ஷன் கவுர் மற்றும் அவரது சகோதரர் லூதியானாவின் ஜக்ரானில் வசிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமார் லூதியானாவில் உள்ள சாப்பர் கிராமத்தில் வசிப்பவர்.
ஒரு இளைஞருடன் திருமணம் பேசும்போது, அசோக் சில சமயங்களில் தன்னை அந்தப் பெண்ணின் உடன்பிறந்தவர்களின் மகன் என்றோ, மாமா என்றோ, தாய்வழி மாமா என்றும் சொல்லிக் கொள்வார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Rajwinder Singh/BBC
படக்குறிப்பு, ஹர்பிரீத் கவுரின் அம்மா பையன்களிடம் பேசி பணத்தைப் பற்றிப் பேசுவார்காவல்துறை நடவடிக்கை என்ன?
இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி துணை ஆய்வாளர் (ASI) ஹர்ஜித் சிங், சுக்தர்ஷன் கவுர், மன்பிரீத் சிங் மற்றும் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹர்பிரீத் கவுர் கனடாவில் இருப்பதால் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 316(2) (நம்பிக்கை மோசடி), 318(4) (ஏமாற்றுதல்) மற்றும் 61(2) (கூட்டுச்சதி) ஆகியவற்றின் கீழ் டோராஹா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஏஎஸ்ஐ தெரிவித்தார்.
“இதுவரை ஹர்பிரீத் கவுரால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் எங்களை அணுகியுள்ளனர். அவர்கள் அனைவரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளோம்” என்றார்.
2022ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற ஹர்பிரீத், இன்னும் அங்கு தனது கல்வியை தொடர்வதாகவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல இளைஞர்களை ஆன்லைனில் ஹர்பிரீத் கவுர் திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தார்’நிலங்களை விற்க வேண்டியிருந்தது’
இந்த திருமண மோசடியை அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ராஜ்விந்தர், ஹர்பிரீத் கவுருக்காக தனது நிலத்தை கூட விற்க வேண்டியிருந்தது என்று கூறுகிறார்.
ஹர்பிரீத் கவுரின் திருமணத்திற்கான விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்ததாக ராஜ்விந்தர் கூறுகிறார். அதன் பிறகு 2024 ஜூலை 11ஆம் நாளன்று மோகாவில் உள்ள ஒரு தாபாவில் வீடியோ அழைப்பு மூலம் ஹர்பிரீத் கவுருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டாதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிடமிருந்து ரூ. 2 லட்சம் வாங்கியதாக கூறும் ராஜ்விந்தர், இந்தத் தொகையை கொடுக்காவிட்டால் நிச்சயதார்த்தம் நடக்காது என்று ஹர்பிரீத் கூறியதாக தெரிவித்தார்.
“நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, என்னை கனடாவுக்கு அழைத்துச் செல்ல 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டார்கள், பின்னர் 23 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டோம். ஹர்பிரீத்தின் கல்விக் கட்டணமான ரூ.6.50 லட்சத்தையும் நான் செலுத்தியிருந்தேன். இதுவரை குற்றம் சாட்டப்பட்டவருக்கு 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன்.”
“நான் சிறிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சுமார் ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது. அதில் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்றுதான் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அந்தத் தொகையைக் கொடுத்தேன்.”
“தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது”
ஹர்பிரீத் கவுருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த ஜஷன்தீப் சிங் எப்படி இந்த வலையில் சிக்கினார்?
ஜஷன்தீப் சிங்கின் சகோதரி கனடாவில் வசிக்கிறார். அவரது பெற்றோருக்கும் கனடிய விசா கிடைத்துவிட்டது. இதுவரை இத்தாலியில் இருந்த ஜஷன்தீப் சிங் தற்போது பஞ்சாபிற்கு வந்துவிட்டார். எனவே குடும்பத்தார் இருக்கும் கனடாவுக்கு செல்ல விரும்பினார்.
“எங்கள் முழு குடும்பமும் கனடாவிற்கு செல்ல விரும்பினோம். அதனால்தான் கனடாவில் இருப்பவரை திருமணம் செய்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று பெண் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான், ஹர்பிரீத்தைப் பற்றி எங்கள் உறவினர்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் மூலமாக இந்த வரன் வந்தது. திருமணப் பேச்சுவார்த்தைகளின் போது, ஹர்பிரீத் கவுரின் அம்மா 18 லட்சம் ரூபாய் கேட்டார்” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருந்தோம். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், மீதமுள்ள பணத்தை நான் கனடா சென்ற பிறகு கொடுப்பதாக ஒப்புக்கொண்டோம். ஜூலை 10-ஆம் தேதி நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, முழு ரகசியமும் வெளிப்பட்டது.” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஜஷன்தீப் சிங்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு