கிளிநொச்சி நகரிலுள்ள இலங்கை காவல் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றைய தினம்  குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காவல்நிலையத்தின்; விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்தவரான இரத்தினம் இராசு என்ற 66 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனிடையே உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிவான் நேரடியாக காவல்நிலையம் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே தென்னிலங்கையில் காவல்நிலைய விசாரணைக்கொலைகள் முனைப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.