Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,
இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் என இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்கள் அடிப்படையில் பதிவிடுகிறோம்.
கொலை செய்யாதே – விப 20:13′, மனித மாண்பை வலியுறுத்தும் சமயக்கட்டளையாக இருப்பினும், ‘கொலை செய்தல்’ இடைவிடாமல் அகிலமெங்கும் தொடரப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவேண்டிய பொறுப்பு, சர்வதேச சமூகத்தால் முறையாக நடைமுறைப்படுத்த நிலையே யதார்த்தமாகிவிட்டது. கொலை வலையமைப்பு தரும்.
அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, இலங்கை அரசின் கொலைவலையமைப்பை, உறுதிப்படுத்தி வாழ்த்துவது போலவே அமைந்திருந்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த அரசுகளால், அவர்களுடைய அடக்குமுறைக்குப் பலியான தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கொடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியாமலுள்ளது என்பது வரலாற்று உண்மை என்பதை சர்வதேசம் உட்பட அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம்.
யாழ், செம்மணி மனிதப்புதை குழியில் அடையாளப்படுத்தப்பட்ட என்புத்தொகுதிகள் எமக்கு வெளிப்படுத்தும் உண்மை என்ன? அகழ்வின்போது வெளிப்பட்ட நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு, பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்று என்பன .எமது மனிதநேயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன அல்லவா? இச்செம்மணி மனித புதைகுழி மற்றும் என்புத்தொகுதிகள், நாம் கொலைகாரரின் நாட்டில் வாழ்கிறோம் என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
இலங்கை அரசும் சர்வதேசமும், முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்தில் பொறுப்பிலிருந்தவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேறு எந்தெந்த இடங்களில் மனிதப்புதைகுழிகள் அடையாங்காட்டப்பட்டவையோ அந்த இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு, நீதியை உறுதி செய்வதற்கு அவசியமான பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பான ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ப்படவேண்டும்.
காணாமலாக்கப்பட்ட உறவுகள் உட்பட, பாதிக்கப்பட்ட மக்களின் கூக்குரல் மதிக்கப்படவேண்டும். நீதி கிடைக்கும் என அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் செப்ரெம்பர் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பரிகாரநீதியை உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை பொறுப்புடன் கையாளாத இலங்கையின் புதிய அரசு பாதிக்கப்பட்டோரை புரிந்துகொள்ள வேண்டும்.
பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட செல்வி. கிருஷாந்தி குமாரசாமி உட்பட, எமது வரலாற்றில் செம்மணியில் நடைபெற்றுள்ள மனித மாண்பற்ற செயல்களுக்காக உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதி உறுதி செய்யப்படவேண்டும். இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஸ வெளியிட்ட சாட்சியத்தின் அடிப்படையில், செம்மணியில் 300 – 400 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நீதிக்காக செயற்படுவது இன்றைய காலத்தின் தேவை.
உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கி கதறிக்கொண்டிருக்கிறது (தொடக்க நூல் 4:10)”, என கடவுள், கொலையாளி காயீனுக்கு கூறியது போல, செல்வி. கிருஷ்சாந்தி குமாரசாமி உட்பட பலருடைய கதறலை அங்கீகரித்து, உரிய நீதியை பொறுப்புடன் மேற்கொள்ள யாழ் கிறீஸ்தவ ஒன்றியம் அனைவரையும், குறிப்பாக இதனுடன் நேரடியாக சம்பந்தப்பட்டோரை அழைக்கிறது. – என்றுள்ளது