Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்27 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்த 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர்.
கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘தமிழ்நாடு கள் இயக்கம்’ நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது.
அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் கள்ளை இங்கும் அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா?
கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால்தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா.கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது?
இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) என்ற நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார்.
”இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.” என்கிறார் அவர்.
பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, “அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.” என்கிறார்.
தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், “அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்,” என்கிறார்.
“கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,” என்கிறார் உணவியலாளர் வந்தனா.
இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்தோம்.
”ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை.” என்கிறார் மருத்துவர் வந்தனா.
கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?
கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது.
இந்த கூற்றை கடுமையாக மறுக்கும் உணவியலாளர் வந்தனா, ”எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.” என்கிறார்.
பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார்.
கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா?
கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா?
கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹாலால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் உணவியலாளர் வந்தனா.
இதை மேலும் விளக்கிய அவர், “அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்,” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.’உடல் வெப்பத்தை கள் குறைக்குமா?
உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?
“கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் வந்தனா.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது?
கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.
நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, “ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்பாகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்” என்கிறார்.
இதை மேலும் விவரித்த அவர், ”ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,” என்றார்.
சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார்.
தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார்.
படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன்.”கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,” என்றார் கார்த்திகேயன்.
கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
”உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.” என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு