பேரீச்சம்பழம் எப்போது காலாவதி ஆகும்? அதை சாப்பிடுவதால் என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவையில் ஆன்லைன் விற்பனை நிறுவன குடோனில் இருந்து காலாவதியான 278 கிலோ பேரீச்சம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

பாக்கெட்டுகளில் காலாவதி தேதி இருந்தும் அவற்றை அழிக்காமல் வைத்திருந்த ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.

அதற்கு அந்த நிறுவனம் விளக்கத்தில், அவை தனியாகப் பிரித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பேரீச்சம்பழங்கள் குறித்து ஒருவித அச்சம் கலந்த கருத்துகள் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளன. உண்மையில், பேரீச்சம்பழங்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன? காலாவதியான பேரீச்சம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?

கோவை நகரின் பல பகுதிகளிலும், அன்னுார், ஒத்தக்கால் மண்டபம், சூலுார் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஆன்லைன் நிறுவனங்களுக்குச் சொந்தமான குடோன்கள் உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அவற்றில் காலாவதியான சில உணவுப் பொருட்கள் ‘பேக்’ செய்யப்பட்ட பெட்டிகளும் இருப்பதாக கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் குழு மொத்தம் 37 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றின் குடோனில் சோதனை நடத்தியபோது, காலாவதி தேதியைக் கடந்த பேரீச்சம்பழங்கள் பெட்டிகளில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், Food Safety Department

படக்குறிப்பு, காலாவதியான பேரீச்சம்பழங்கள் ”அங்கு 400 கிராம், அரை கிலோ, ஒரு கிலோ எனப் பலவித எடைகளில் பேரீச்சம்பழங்கள் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் காலாவதி தேதி மே 15 மற்றும் மே 30 என இருந்ததால் அவற்றைப் பறிமுதல் செய்து மூட்டைகளில் கொட்டினோம்.

பிறகு குப்பைகளைக் கொட்டும் பைகளில் போட்டு ஃபினாயில் ஊற்றி அழித்து மாநகராட்சி குப்பைகளுடன் சேர்த்துவிட்டோம்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா.

அழிக்கப்பட்ட பேரீச்சம்பழங்களின் மதிப்பு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்தான் என்றாலும், அவை விநியோகம் செய்யப்பட்டு, காலாவதி ஆனது தெரியாமல் யாராவது சாப்பிட்டிருந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேரீச்சம்பழத்தின் காலாவதி தேதி நிர்ணயிக்கப்படுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பேரீச்சம்பழங்களின் காலாவதி தேதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

அதற்குப் பதிலளித்த அவர், ”பேரீச்சம்பழம் உலர் பழம் (Dry Fruits) என்பதால், அவற்றை இறக்குமதி செய்யும் காலத்தில் இருந்து ஓர் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் கணித்து அதற்கேற்ப பாக்கெட்டுகளில் பேக்கிங் தேதியையும், காலாவதி தேதியையும் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கும் மேற்பட்ட காலத்திற்கு இருந்தால் இயற்கையாகவே அது கெட்டுப் போய்விடும். புழுக்கள், வண்டுகள் மற்றும் பூச்சிகள் உருவாகிவிடும். அதைச் சாப்பிடும் நபர்களுக்குப் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்” என எச்சரித்தார்.

காலாவதி தேதியை கடந்த பேரீச்சம்பழத்தை அழிப்பது ஏன்?

காலாவதி தேதி முடிந்த பேரீச்சம்பழங்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணைய விதிகளின்படி உடனே அழிப்பதுதான் முறை என்று விளக்கினார் அனுராதா.

”அவற்றுக்கு பேக்கிங் செய்த நிறுவனமே, ஒரு காலாவதி தேதியை நிர்ணயித்துவிட்டது. அது முடிந்துவிட்டால் விதிகளின்படி உடனே அழிக்க வேண்டும். நாங்கள் அவற்றை கண்டுபிடித்தவுடன் அந்த பெட்டிகளைத் தயாரித்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்புவதாக ஆன்லைன் நிறுவனத்தினர் கூறினர்.

ஆனால், ஒருவேளை அவர்கள் திருப்பி அனுப்பி, அதே பழங்களை வேறு காலாவதி தேதி குறிப்பிட்டு, மீண்டும் பேக் செய்து விற்பனைக்கு அனுப்ப வாய்ப்புள்ளது. அதற்கு வாய்ப்பளிக்க முடியாது. அதனால்தான் அழித்தோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

பட மூலாதாரம், F.S.O.Anuradha

படக்குறிப்பு, காலாவதியான பேரீச்சம்பழங்கள் இயற்கையாகவே கெட்டுவிடும் என்கிறார், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா இதுகுறித்து விரிவாக விளக்கிய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், இதேபோல இயற்கையாக விளைந்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் காலாவதி தேதி முடிந்துவிட்டால், “அவற்றைத் தனியாக வைக்க வேண்டும், அவற்றின் மீது ‘விற்பனைக்கு அல்ல’ என்று ஸ்டிக்கர் ஒட்டி வைக்க வேண்டும்” என அறிவுறுத்துகின்றனர்.

அதோடு பறிமுதல் செய்யப்பட்ட பேரீச்சம்பழங்கள், எந்தவொரு ஸ்டிக்கர்களும் ஒட்டப்படாமல், தனியாகவும் வைக்கப்படாமல் இருந்ததே அவற்றைத் தாங்கள் கையகப்படுத்தி அழிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆன்லைன் விற்பனை நிறுவனம் கூறுவது என்ன?

காலாவதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது குறித்து, அதில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஃப்ளிப்கார்ட் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ”எங்கள் நிறுவனக் கிடங்குகளில் உணவுப் பாதுகாப்பு உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எங்கள் மையங்களில் நடக்கும் உணவுப் பாதுகாப்பு தணிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது.

கோவையில் காலாவதியான அந்த உணவுப்பொருள் அகற்றுவதற்காக தனியாகப் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. அது விற்பனைக்கு உட்படுத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளில் இருந்து பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்படுகிறது?

பட மூலாதாரம், Food Safety Department

படக்குறிப்பு, காலாவதியான பேரீச்சம்பழங்களை அழிக்கும் அதிகாரிகள் உலக வங்கியின் உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வு அளித்துள்ள 2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா ஆண்டுக்கு 2 லட்சத்து 67,176 அமெரிக்க டாலர் மதிப்பிலான 49 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரம் கிலோ அளவிலான பேரீச்சம்பழங்களை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்கிறது. உலகிலேயே பேரீச்சம்பழத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.

இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து மட்டும் 45 சதவிகித அளவுக்கு ஆண்டுக்கு 120 மில்லியன் டாலர் மதிப்பிலான பேரீச்சம்பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

அடுத்ததாக இராக்கில் இருந்து 30 சதவிகிதம் அளவில் 81 மில்லியன் டாலர் மதிப்பிலும், இரானில் இருந்து 14 சதவிகிதம் அளவில் 37 மில்லியன் டாலர் மதிப்பிலும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இவைபோக செளதி அரேபியாவில் இருந்து ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் மதிப்பிலும், ஓமன், இஸ்ரேல், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சிறிய அளவிலும் பேரீச்சம்பழத்தை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்து, தரம் பிரித்து நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.எத்தனை வகையான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன?

இனிப்பு, உலர், ஈரம் ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பேரீச்சம்பழங்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

உலகிலேயே பெரியதும், மிகவும் இனிப்பானதுமான மெஜூல் (Medjool) என்ற பேரிச்சம்பழம்தான், உலகளவில் உயர்தர வகையாகக் கருதப்படுகிறது. இதுவும் இந்தியாவில் கணிசமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

இவைபோக, அரேபியாவில் அதிகமாக விளைவிக்கப்படும் சக்ரி (Sukkari), இரானில் விளையும் மஜஃபாதி (Mazafati) ஆகியவற்றுடன், ஜஹிதி (Zahidi), டெக்லெட் நூர் (Deglet Noor), செய்யர் (Sayer), ஹலாவி (Halawi), பியாரம் (Piarom), ஷம்ரான் (Shamran), தையிரி (Dayri) எனப் பலவிதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய சந்தைகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, பார்ஹி (Barhi), மெஜூல் (ராஜஸ்தானில் மட்டும்), ஜஹிதி ஆகிய வகை பேரீச்சம்பழங்கள், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன.

பேரீச்சம்பழத்தை எவ்வளவு காலத்திற்கு பதப்படுத்தி வைக்கலாம்?

பேரீச்சம்பழங்களை எவ்வளவு காலம் பாதுகாப்பாக வைக்க முடியும் அல்லது எவ்வளவு காலம் பதப்படுத்தி வைத்து உண்ணலாம் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்தக் குறிப்புகளையும் வழங்கவில்லை.

ஆனால், பொதுவாக பேரீச்சம்பழத்தின் தன்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில், 6 மாதங்களில் இருந்து அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பாதுகாத்து வைத்துப் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேரீச்சம்பழத்தை காலாவதியான பிறகு சாப்பிட்டால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Food Safety Department

இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் ஹரிணிவாஷினி முருகேசன், ”பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி6, பொட்டாஷியம், மெக்னீஷியம், நார்ச்சத்து, சர்க்கரை என உடலுக்குத் தேவையான, ஆரோக்கியம் தரும் அம்சங்கள் உள்ளன.

ஆனால், காலாவதியாகி கெட்டுவிட்டால், அது விளைவிக்கும் பாதிப்புகளும் அதிகம். அதிலும், பேரீச்சம்பழம் கெட்டுவிட்டாலும் அது எளிதில் கண்ணுக்குத் தெரியாது என்பதுதான் இதிலுள்ள முக்கியமான சிக்கல்” என்றார்.

மேலும் விளக்கிய அவர், ”தமிழ்நாட்டில் பெரும்பாலும் வெப்பம் அதிகமுள்ள நிலையில்தான் அவை வைக்கப்படுகின்றன. கோவை போல மிதவெப்பமும், ஈரப்பதமும் உள்ள பகுதிகளில் பேரீச்சம்பழம் போன்ற எந்த வகை இயற்கை உணவிலும் பூஞ்சைகள் உருவாகிவிடும்.

அதில், மைக்கோடாக்சின்கள் (Mycotoxins) கலந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கும் அஃப்லாடாக்சின் (aflatoxin) உற்பத்தியாகி, கல்லீரலுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். பருவமழைக் காலத்தில் இந்த பூஞ்சை உருவாக வாய்ப்பு அதிகம்” என எச்சரித்தார்.

பேரீச்சம்பழத்தில் சர்க்கரை அதிகளவில் இருப்பதால், நாளடைவில் நொதித்தலுக்கு உள்ளாகி (fermentation) அதில் அதிக புளிப்புச் சுவை ஏற்படும் என்று குறிப்பிட்ட மருத்துவர் ஹரிணிவாஷினி முருகேசன், அதைச் சாப்பிடும்போது ஒருவித மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

அதோடு, பூஞ்சை அதிகமாகவுள்ள பேரீச்சம்பழத்தை சாப்பிடும் சிலருக்கு வாந்தி, தலை சுற்றல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் விளக்கினார்.

ஊட்டச்சத்து நிபுணர் ஹரிணிவாஷினியின் கூற்றுப்படி, ”வெகுநாளாகிவிட்ட பேரீச்சம்பழங்களில் பாக்டீரியா பாதிப்பு இருக்கும். அவை கண்ணுக்குத் தெரியாது. நுண்ணோக்கியில் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். அந்த பாக்டீரியா அருகிலுள்ள மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும்.”

எனவே, கெட்டுப்போன பேரீச்சம்பழங்களை தனியாக வைக்க வேண்டும் அல்லது அழித்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

மேலும், “சில பேரீச்சம்பழங்களில் அடர் கருப்பு நிறம் வருவதற்காகவும், கெடாமல் இருக்கவம் சல்ஃபைட் சேர்ப்பதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அந்த சல்ஃபைட் உடையும்போது ஆஸ்துமா, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தலாம்” என்றும் ஹரிணிவாஷினி கூறுகிறார்.

எந்த வகை பேரீச்சம்பழமாக இருந்தாலும் நாளாகிவிட்டால், வண்டு, புழு போன்ற பூச்சிகள் உருவாகும் என்பதால் கவனத்துடன் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தும் ஹரிணிவாஷிணி, “அவை எப்படி விளைவிக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டன என்பதைக் குறிப்பிடும் வகையில் லேபிள்களில் சில குறிப்புகள் (organic, unsulfured, preservative-free) இருப்பதையும் கவனித்து வாங்குவது மிகவும் நல்லது” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு