தாராபுரம்: மரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பட்டியலின நபர் மர்ம மரணம் – சந்தேகம் எழுப்பும் அமைப்புகள்

பட மூலாதாரம், Vadivel Raman

படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை நடத்தியுள்ளது எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்

தாராபுரம் அருகில் சென்னக்கால்பாளையம் என்ற கிராமத்தில் கைகள் கட்டப்பட்டு, மரத்தில் தொங்கிய நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்திருந்தார்.

இது கொலை என்று பல்வேறு பட்டியலின அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தற்கொலை என்றே உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

இதுகுறித்த செய்தியை வைத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை நடத்தியுள்ளது. இறந்தவரின் மரணம் குறித்து ஆய்வக முடிவுகள் வந்த பின்பே, எதையும் உறுதிப்படுத்த முடியுமென்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்றி, மறுவிசாரணை நடத்த வேண்டுமென்று ஆணையத் தலைவருக்கு பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இதுபற்றி நேரில் விசாரித்த மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் தகவல் தெரிவித்தனர்.

இறந்தது யார்?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சென்னக்கல்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (வயது 42) என்பவர், கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று, அதே கிராமத்திலுள்ள தோட்டத்தில் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவருடைய இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. ஜூன் 26 அன்று காலையில் முருகனின் உடலை அலங்கியம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த முருகன், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதற்கு மறுநாள் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Vadivel Raman

ஓரணியில் இணைந்து போராடும் பட்டியலின அமைப்புகள்!

கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் துாக்கிட்டு இறந்திருந்த புகைப்படம், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதையடுத்து பல்வேறு பட்டியலின அமைப்புகளும் இதைக் கையிலெடுத்து போராடத் துவங்கின.

முருகனை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்தது போல மரத்தில் துாக்கிலிடப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய பல்வேறு அமைப்பினரும், முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக சந்தேகம் எழுப்பினர்.

அதை மறுத்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், ”பிரேத பரிசோதனை முடிவுகளில் வெளிப்புறம் தாக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. முருகனின் குடும்பத்தினரும் அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. அதனால்தான் பிஎன்எஸ் பிரிவு 194 ன் (தற்கொலை போன்றவை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் காவல் நடவடிக்கை) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடக்கிறது,” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில் தனி அதிகாரியை நியமித்து மறுவிசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று கோரி, சமூகநீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன் தலைமையில், ஜூன் 30 அன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ச்சிறுத்தைகள் கட்சி, அருந்ததியர் விடுதலை முன்னணி, சமூக விடுதலைக் கட்சி, தமிழ்நாடு இளைஞர் முன்னணி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம், கொங்குநாடு திராவிடக்கட்சி, மக்கள் விடுதலை பேரவை மற்றும் தேசிய புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் இணைந்து மனு கொடுத்தனர். தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் திராவிடத்தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்பின் தமிழக அரசின் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கும், தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களுக்கும் இந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார்கள் அனுப்பப்பட்டன. இதுதொடர்பாக வெளியான செய்தியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இரண்டு ஆணையங்களின் சார்பிலும் களத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய மாவீரன் பொல்லான் பேரவைத்தலைவர் வடிவேல் ராமன், ”கைகள் கட்டப்பட்ட பின்பு, ஒருவரால் எப்படி மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முடியும் என்ற அடிப்படைக் கேள்வியைக் கூட எழுப்பாமல், தற்கொலை வழக்காக போலீசார் முடித்துள்ளனர். வாழ்வாதாரத்துக்கு பயந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள பட்டியலின மக்கள் இதுபற்றி பேச மறுக்கும் நிலையில், வெளியிலிருந்து நாங்கள் குரல் கொடுத்த காரணத்தால்தான் இப்போது இரண்டு ஆணையங்களும் வந்து விசாரணை நடத்தியுள்ளன.” என்றார்.

பட மூலாதாரம், Vadivel Raman

படக்குறிப்பு, இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் தேசிய பட்டியலின ஆணைய இயக்குநருக்கு மனு அளித்துள்ளனர்தற்கொலைதான்…முரண்படும் முருகன் குடும்பத்தினர்!

பல்வேறு அரசியல் கட்சியினரும், பட்டியலின அமைப்பினரும் முருகனின் மரணத்தை கொலை என்று கூறி வரும் நிலையில், அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அது தற்கொலைதான் என்று காவல்துறையினர் மற்றும் ஆணையங்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கும் அந்த கொலைக்கு பின்னணியாகவுள்ள மாற்று சமுதாயத்தினர்தான் காரணமென்றும், அவர்களை நம்பி வாழ்வாதாரம் இருப்பதால்தான் அச்சத்தில் இவர்கள் இப்படிச்சொல்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்ப்புலிகள் கட்சி முதன்மை செயலாளர் முகிலரசன், ”இறப்பின் தன்மைக்கும், அவருடைய குடும்பத்தினர் கூறும் கருத்துக்கும் முற்றிலும் முரணாகவுள்ளது. அவருக்கு காசநோய் இருந்தது, கடுமையான வயிற்றுவலி இருந்தது என்றும் நடக்கவே முடியாமல் வெளியே சென்றார் என்றும் கூறுகின்றனர். நடக்கவே முடியாதவர் எப்படி மரமேறி துாக்கிட்டுக்கொண்டார்? குடும்பத்தினர் உட்பட அனைவரும் ஒரே மாதிரியாக எழுதிக் கொடுத்தது போல பேசுவதுதான் இந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.” என்றார்.

இந்த தகவல்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. முருகனின் குடும்பத்தினர் யாருமே ஊடகங்களில் பேசுவதற்கு முன்வரவில்லை.

படக்குறிப்பு, மாவீரன் பொல்லான் பேரவைத்தலைவர் வடிவேல் ராமன் தேசிய, மாநில ஆணையங்கள் சொல்வது என்ன?

அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புகளின் புகார்களைத் தொடர்ந்து, முதலில் மாநில ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர்கள் செல்வக்குமார் மற்றும் பொன்தோஸ் ஆகியோர் வந்து, சென்னக்கல் பாளையத்தில் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர். கடந்த ஜூலை 22 ஆம் தேதியன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வந்து விசாரணை நடத்தியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய மாநில ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினர் செல்வக்குமார், ”முருகனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவருக்கு 13 ஆண்டுகளாக காசநோய், கண்பார்வை குறைவு என்கின்றனர். அப்படிப்பட்டவர் இரவில் எப்படி எழுந்து சென்று, மரமேறி தற்கொலை செய்ய முடியும்…உடல்நலக்குறைவுக்காக மருத்துவமனை சென்று ஊசி போட்டதாக குடும்பத்தினர் சொல்கின்றனர். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ”தற்கொலை செய்வதற்கு முன்பு, அந்த மரத்தை அவர் போட்டோ எடுத்து வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர் இறந்த நேரத்துக்கும், போட்டோ எடுத்த நேரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர் சார்ந்த சமுதாயத்தில் அப்பகுதியில் புதைப்பதே வழக்கம். ஆனால் அவரை எரித்துள்ளனர். இப்படி பல சந்தேகங்கள் இருப்பதால் விசாரணை அதிகாரியை மாற்றச் சொல்லியும், மறுவிசாரணைக்கு உத்தரவிடுமாறும் ஆணையத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.” என்றார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ”நேரில் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளேன். பல தரப்பினரிடமும் பலவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் எதுவும் தெரியவில்லை என்பதால் இரசாயன ஆய்வக முடிவுகள் வந்தபின்பே எதையும் உறுதியாகச் சொல்லமுடியும். அதன் அடிப்படையில்தான் காவல்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும் இருக்கும்.” என்றார்.

இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாகவுள்ள தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமாரை மாற்ற வேண்டுமென்பது பல்வேறு அமைப்பினரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிபிசி தமிழிடம் பேசிய தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார், ”தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பல விவரங்களைக் கேட்டார். களத்திற்கு நேரில் சென்றும் விசாரித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதையும், குடும்பத்தினர் கூறியதையும் காவல்துறை தரப்பு விளக்கமாக ஆணையத்திடம் கொடுத்துள்ளோம். ஆய்வக முடிவுகள் வந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.” என்றார்.

முருகனின் உடலை அவசரமாக எரித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”பிரேத பரிசோதனையில் அவருடைய மரணத்துக்கு துாக்கிட்டதுதான் காரணமென்று தெரியவந்தது. அது தற்கொலைதான் என்று அவர் குடும்பத்தினரும் நம்பியுள்ளனர். அதனால் உடலைக் கொடுத்ததும், தற்கொலை செய்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் எரித்துவிட்டனர். அது அவர்களின் முடிவு. அதில் காவல்துறை பங்கு ஏதுமில்லை.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு