உலக வரைபடத்தில் இல்லாத நாடுகளுக்கு தூதரகம் – டெல்லி அருகே நடந்த ‘மேற்கு ஆர்க்டிகா’ மோசடி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார்.34 நிமிடங்களுக்கு முன்னர்

போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

“மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில ‘நாடுகளின்’ தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வாகனங்களில் தூதரக ரீதியிலான, போலியான எண் தகடுகள் இருந்தன, அவை எந்த அமைப்பாலும் அங்கீகரிக்கப்படவில்லை” என்று எஸ்டிஎஃப் எஸ்எஸ்பி சுஷில் குலே தெரிவித்தார்.

ஹர்ஷவர்தன் ஜெயின் என்ற நபர் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போலி தூதரகத்தை நடத்தி வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இதுபோன்ற போலி எண்களைக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனமீட்கப்பட்ட முத்திரைகள், போலி பான் அட்டைகள் மற்றும் போலி புகைப்படங்கள்

“குற்றம் சாட்டப்பட்டவர் காஜியாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தி வந்துள்ளார்” என்று எஸ்எஸ்பி சுஷில் குலே கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மேலும், “அவர் மக்களிடம் பிரபலமாகவும், அவர்களை ஏமாற்றவும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தினார். அதன் மூலம், அவர் பல பிரமுகர்களுடன் நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்டார்” என்றும் எஸ்எஸ்பி சுஷில் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடி நடத்தியும் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான ஏராளமான பொருட்களையும், போலியான பொருட்களையும் சிறப்புப் படையினர் மீட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவற்றில் பின்வருவன அடங்கும்:

போலி தூதரக எண் தகடுகள் கொண்ட நான்கு வாகனங்கள்12 வெவ்வேறு சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள்இரண்டு போலி பான் கார்டுகள்34 வெவ்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் போலி முத்திரைகள்இரண்டு பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்ரொக்கமாக 44 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்பல நாடுகளின் நாணயங்கள்கூடுதலாக 18 போலி எண் தகடுகள்நிறுவனம் தொடர்பான ஆவணங்கள்ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்

ஹர்ஷ் வர்தன் 2011 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை பதிவுகள் கூறுகின்றன.

“அப்போது, அவரிடமிருந்து செயற்கைக்கோள் மூலம் பயன்படுத்தப்படும் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டது, பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்று எஸ்எஸ்பி சுஷில் குலே குறிப்பிட்டார்.

தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது காஜியாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள், போலி ஆவணங்களை வைத்திருத்தல், தயாரித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கு ஆர்க்டிகா என்றால் என்ன?

பட மூலாதாரம், https://www.westarctica.info/

படக்குறிப்பு, மேற்கு ஆர்க்டிகா என்று அழைக்கப்படும் நாட்டின் கொடிஇந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, மேற்கு ஆர்க்டிகாவும் பேசுபொருளாகி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தன் தான் தூதராக இருப்பதாகக் கூறி வந்த நாடுகளில் ஒன்று மேற்கு ஆர்க்டிகா.

முதலில் கேட்கும்போது அது ஒரு சிறிய அல்லது தொலைதூரத்தில் உள்ள நாடு எனத் தோன்றலாம்.

ஆனால் மேற்கு ஆர்க்டிகா என்பது 2001 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரியான டிராவிஸ் மெக்கென்ரி என்பவரால் கற்பனையாக உருவாக்கப்பட்ட நாடு.

இது தனக்கென ஒரு வலைத்தளம், கொடி, சின்னம் மற்றும் நாணயத்தைக் கொண்டுள்ளது.

எந்த நாடும் முறையான உரிமை கோராத, அண்டார்டிகாவின் பனி சூழ்ந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, இது தன்னை விவரிக்கிறது.

இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதே இதன் நோக்கம் என்றும் வெஸ்ட் ஆர்க்டிகாவின் வலைதளம் கூறுகிறது.

‘தூதர்’, ‘குடியுரிமை’ மற்றும் ‘கௌரவப் பட்டங்கள்’ போன்ற பதவிகளையும் வெஸ்ட் ஆர்க்டிகா வழங்குகிறது.

ஆனால், உலகின் எந்தவொரு நாடும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையும் அதை ஒரு உண்மையான நாடாக அங்கீகரிக்கவில்லை.

இந்த ‘நாட்டின்’ அரசாங்கம் கிராண்ட் டியூக் டிராவிஸால் தலைமை தாங்கப்படுகிறது என்றும், அவருக்கு ஒரு பிரதமரும், ஒரு ‘ராயல் கவுன்சிலும்’ உதவி செய்கின்றனர் என்றும் மேற்கு ஆர்க்டிகாவின் வலைதளம் குறிப்பிடுகிறது.

இது தவிர, மேற்கு ஆர்க்டிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களை விளக்குவதற்கு ‘கிராண்ட் டூகல் கோர்ட்’ என்ற ஒரு நிறுவனமும் செயல்படுகிறது.

அந்த நிறுவனத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, தங்களது அறிவு, நேரம் மற்றும் திறன்களை பங்களிக்கும் நபர்களை அந்த வலைதளம் ‘உறுப்பினர்கள்’ என்று விவரிக்கிறது.

ஆனால், இவை அனைத்தும் டிஜிட்டல் மற்றும் குறியீட்டு கட்டமைப்புகளில் மட்டுமே இயங்குகின்றன. நிஜத்தில் அவற்றுக்கு எந்தவொரு சட்ட ரீதியான அல்லது ராஜ்ஜிய அங்கீகாரமும் கிடையாது.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் வர்தனுடன், மேற்கு ஆர்க்டிக்காவுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு