“ஒரு பை மாவுக்கு உயிரையும் கொடுப்பேன்” – பட்டினியின் பிடியில் தவிக்கும் காஸா மக்கள்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ஸ்வாமிநாதன் நடராஜன் மற்றும் காஸா லைஃப்லைன் புரோகிராம்பதவி, பிபிசி உலக சேவைஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“நான்கு நாட்களாக சாப்பிடாததால் எனது இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர்,” என்கிறார் காஸாவை சேர்ந்த ஒருவர்.

“வீட்டுக்கு ஒரு பை மாவு கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விநியோக இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கு சென்ற போது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை,” என அவர் பிபிசி நியூஸ் அரபியிடம் தெரிவித்தார்.

“காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பதா, உயிரிழந்தவர்களை தூக்கிச் செல்வதா அல்லது மாவைத் தேடுவதா? எனது குழந்தைகள் உணவு உட்கொள்ள ஒரே ஒரு பை மாவை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் நான் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பேன் என இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகின்றனர், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார்மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) விநியோகிக்கும் உதவியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, உதவி மையங்கள் அருகே கொலைகள் எல்லாம் காஸாவில் கவலையளிக்கும் பிரச்னைகளாகி வருகின்றன.

“காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) மே 27ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உணவு பெற முயன்றபோது 1,000-த்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்,” என்கிறார் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தமீன் அல்-கீதான்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“ஜூலை 21ஆம் தேதி வரை காஸாவில் உணவை பெற முயன்றபோது 1,054 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம், இதில் 766 பேர் காஸா மனிதநேய அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும், 288 பேர் ஐநா மற்றும் பிற மனிதநேய அமைப்புகளின் உதவி வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டுள்ளனர்,” என அவர் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.

அதிகரிக்கும் இறப்புகள்

மே மாத இறுதியில் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் பல உதவி மையங்களில் குறைவான அளவு உதவிகளை வழங்கி காஸா மனிதநேய அறக்கட்டளை தனது செயல்பாடுகளை தொடங்கியது.

அதற்கு முன்பு 11 வாரங்கள் இஸ்ரேல் காஸாவை முடக்கி எந்த உணவையும் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் இறந்துள்ளனர்கடந்த 72 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அந்தப் பகுதியில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காஸா நகரில் செயல்படும் ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகம்மது அபு சல்மியா சொல்கிறார்.

காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

கவலையளிக்கும் எண்ணிக்கையில் இறப்புகளை சந்திப்பதாகவும், குறிப்பாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 101-ஆக உள்ளன, இதில் 80 பேர் குழந்தைகள் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ஸகரியா அய்யூப் அல்-மதூக் போன்ற இளம் குழந்தைகள் உயிருக்கே அச்சுறுத்தலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்பட்டினியை எதிர்கொள்ளும் நிலை

உலக உணவு திட்டத்தின்(WFP) கூற்றுப்படி காஸாவின் மொத்த மக்கள் தொகையுமே பட்டினியை எதிர்கொண்டிருக்கிறது.

“ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, 90,000 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. மூன்றில் ஒருவர் பல நாட்களுக்கு உண்ணாமல் இருக்கின்றனர்,” என ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

“ஒரு கிலோ கிராம் மாவு பையின் விலை உள்ளூர் சந்தைகளில் 100 டாலர்களை தாண்டிவிட்ட காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு உணவு உதவிதான் ஒரே வழி.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்காலிக சந்தைகளில் ஒரு கிலோ மாவு 90 முதல் 100 டாலர்கள் வரை விற்கப்படுகிறதுமார்ச் மாதத்தில் காஸாவிற்குள் செல்லும் அனைத்து பாதைகளும் மறித்த இஸ்ரேல், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் நுழைவதை தடுத்ததுடன், இரண்டு வாரங்கள் கழித்து ஹமாஸுடனான இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு ராணுவ தாக்குதலை தொடங்கியது.

சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காஸா மருத்துவ அமைப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கூட இந்த முடக்கம் தடுத்துவிட்டிருக்கிறது.

மே மாதம் மத்தியிலிருந்து 4400 லாரி மனிதாபிமான உதவிப்பொருட்கள் இஸ்ரேலிலிருந்து காஸாவிற்குள் நுழைந்திருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

எல்லையில் காஸா பகுதியில் ஐநாவால் எடுத்துக்கொள்ளப்பட மேலும் 700 லாரி நிறய உதவிப் பொருட்கள் காத்துக்கொண்டிருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வலியுறுத்தும் இஸ்ரேல், ஹமாஸ் மனிதாபிமான உதவிப்பொருட்களை திருடி தனது ஆயுததாரிகளுக்கு தருவதற்காகவோ அல்லது அதை விற்று பணம் திரட்டுவதற்காகவோ பதுக்குவதாக குற்றம்சாட்டியுள்ளது.

திங்கள்கிழமை பிரிட்டன், கனடா பிரான்ஸ் உட்பட 28 நாடுகள் காஸாவில் பொதுமக்கள் அனுபவிக்கும் துயரம் புதிய ஆழத்தை எட்டிவிட்டிருப்பதாகவும் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் எனவும் வலியுறுத்தின.

இஸ்ரேலின் உதவி விநியோகிக்கும் முறை ஆபத்தானது என்றும், உதவியை துளித்துளியாக தருவதையும், உணவு மற்றும் தண்ணீரைத் தேடும் மக்களின் “மனிதநேயமற்ற கொலைகளை” கண்டிப்பதாகவும் ஒரு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் அறிக்கையை நிராகரித்த இஸ்ரேலின் வெளியுறவுத்துறை, அது உண்மையோடு தொடர்பில்லாமல் இருப்பதாகவும், ஹமாஸுக்கு தவறான செய்தியை அனுப்புவதாகவும் தெரிவித்தது.

ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதநேய அறக்கட்டளை மே மாதம் இறுதியில் உதவிகளை விநியோகிக்க தொடங்கியது முதலே உதவியை தேடிவரும் போது பாலத்தீனர்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

“நாங்கள் வறுமையில் வாடுகிறோம்”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி, மூன்றில் ஒரு நபர் பல நாட்களுக்கு உணவு உண்ணமால் இருக்கிறார்”இன்று சந்தையில் ஒரு கிலோ மாவு 200 ஷெகெல்ஸுக்கு [$90] விற்கப்படுகிறது…ஆனால் நாங்கள் வறியவர்களாக இருக்கிறோம்,” என பிபிசி நியூஸ் அரபியிடம் சொல்கிறார் அலா முகமது பெக்கித். “மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட எங்களால் நிறைவேற்ற முடியவில்லை.”

உதவி மையங்களுக்கு அருகே இருக்கும் மக்கள் தினசரி சந்திக்கும் தாக்குதல்கள் குறித்தும் அவர் பேசுகிறார்.

“ஒரு இளைஞர் என் அருகே அமர்ந்துகொண்டிருந்தார், ஆனால் திடீரென அவர் தலையில் சுடப்பட்டார்,” என்கிறார் அவர். “தோட்டா எங்கிருந்து வந்ததென்றுகூட எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்தோம், ஆனால் ரத்தத்தில் மூழ்குவதை பார்த்தோம். இன்று ஒரு பை மாவை எடுக்கும் யாராக இருந்தாலும் தோட்டாவை சந்திக்கிறார்கள்.”

காஸா மனிதநேய அறக்கட்டளை காஸாவில் நடத்தும் உதவி மையங்களை நாடும் பொதுமக்கள் “பாதிக்கப்பட்டதாக” வெளியான தகவல்களை ஆய்வு செய்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் பிபிசியிடம் தெரிவித்திருந்தது.

“பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன,” என்றும் சட்டம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் உத்தரவுகளுக்கு மாறாக நடந்ததாக எழும் எந்த ஒரு குற்றச்சாட்டும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

பாலத்தீன மரணங்கள் பற்றி காஸாவின் ஹமாஸ் அதிகாரிகள் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் அதே நேரம் “உடனடியாக ஏற்பட்ட அபாயத்தை” அகற்றுவதற்காக “எச்சரிக்கையாக சுட்டதாக” ஒப்புக்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணவு உதவி பெறுவதற்காக காஸாவில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்மிகவும் சமீபத்திய தாக்குதல்

இந்த வாரம் இஸ்ரேல் டாங்குகள், மத்திய காஸாவில் அமைந்துள்ள டெய்ர் அல்-பலாஹிற்கு முதல்முறையாக நுழைந்துள்ளன, இதனால் பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

டெய்ர் அல்-பலாஹின் தெற்கு பகுதியில் உள்ள ஆறு நகரப் பகுதிகளை உடனடியாக காலி செய்யும்படி இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அடுத்து செல்வதற்கு தங்களுக்கு போக்கிடம் இல்லை என அங்கிருந்த பொதுமக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஹமாஸுடனான 21 மாத போரில் இஸ்ரேல் தரையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத ஒரு சில காஸா பகுதிகளில் டெய்ர் அல் பலாஹவும் ஒன்று.

ஹமாஸ் அங்கு பிணைக் கைதிகளை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாகவே ராணுவம் டெய்ர் அல்-பலாஹ் மாவட்டங்களில் இருந்து விலகி இருந்ததாக இஸ்ரேல் வட்டாரங்கள் கூறியுள்ளன. காஸாவில் எஞ்சியுள்ள 50 பிணைக் கைதிகளில் குறைந்தது 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

டெய்ர் அல்-பலாஹ்யை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பல ஆயிரம் பாலத்தீனர்களை பாதித்துள்ளதாகவும் மனிதாபிமான முயற்சிகளுக்கு “மற்றுமொரு பேரழிவு அடி” என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான டஜன் கணக்கான முகாம்கள், உதவிப்பொருட்களுக்கான கிடங்குகள், சுகாதார மையங்கள் மற்றும் முக்கியமான தண்ணீர் உள்கட்டமைப்பு உள்ளன.

இஸ்ரேலின் டெய்ர் அல்-பலாஹ் தாக்குதலின்போது தனது வளாகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனது ஊழியர்களின் வசிப்பிடம் மூன்று முறை தாக்கப்பட்டு, குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனவும் உலக சுகாதார அமைப்பு(WHO) சொல்கிறது.

இஸ்ரேல் ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து, ஆண் ஊழியர்களின் ஆடைகளை அகற்றி அவர்களுக்கு கைவிலங்கிட்டு சம்பவ இடத்திலேயே விசாரித்து, நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்ததாவும் அதில் மூவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறுகிறது.

இந்த சம்பங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து ஏதும் கூறவில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’மனிதன் ஏற்படுத்திய பேரழிவு’

மீண்டும் தாக்குதல் தொடங்கியிருந்தாலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க அதன் ஊழியர்கள் காஸாவில் தங்கியிருப்பார்கள் என ஐநா சொல்கிறது.

“காஸாவில் நடப்பது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு,” என ஐ.நாவின் பாலத்தீன அகதிகள் முகமையின்(Unrwa) தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா சொல்கிறார்.

இஸ்ரேல், பாலத்தீன அகதிகள் முகமையை காஸாவில் செயல்பட தடை விதித்தது 6000 லாரிகள் நிறைய உதவிப் பொருட்களை வழங்குவதை தடுத்துள்ளது என பிபிசியிடம் பேசிய டூமா சொல்கிறார்.

“கடந்த 24 மணி நேரத்தில் பசி மற்றும் பட்டினியால் Unrwa-வைச் சேர்ந்த சில சகாக்கள் பணியில் இருக்கும்போது மயக்கமடைந்ததாக எங்கள் ஊழியர்கள் தெரிவித்தனர்,” எனக்கூறி பணியாளர்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறார்.

“ஒரு மில்லியன் குழந்தைகள் உட்பட காஸாவின் மக்களை மொத்தமாக தண்டிக்கும் திட்டமிட்ட அரசியல் முடிவால் ஏற்பட்ட பட்டினி,” என்கிறார் அவர்.

நவம்பர் 2024-ல், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒன்று, “பட்டினி போடுவதை ஒரு வகையான போராக பயன்படுத்தியதற்கு” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோருக்கு “குற்றப் பொறுப்பு” இருப்பதாக கருத “நியாயமான காரணங்கள்” உள்ளன என்று முடிவு செய்தது.

ஆனால் பட்டினி போடுவதை ஒரு போர்க்கருவியாக பயன்படுத்தியதாக கூறப்படுவதை இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் “பொய்யானவை மற்றும் அபத்தமானவை” என நெதன்யாகு தெரிவித்தார்.

அக்டோபர் 2023-ல் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதிலிருந்து காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ தாண்டிவிட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதாரத்துறை சொல்கிறது.

1200 பேர் உயிரிழந்து 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு