நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக் கூடிய காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக மீளச்செலுத்த தேவையற்ற 65மில்லியன் அமெரிக்கன் டொலர்களை வழங்க இந்தியா முன்வந்துள்ள நிலையிலும், துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதற்கான காரணம் என்ன என்றும் சபையில் கேள்வியெழுப்பினார்.

துறைமுகத்தை மீள இயக்குவதற்கான சூழலியல் தாக்க மதிப்பாய்வு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளதையும் சபையில் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன்துறை துறைமுகம் யுத்தத்துக்கு முற்பட்ட காலத்தில் சிறப்பாக இயங்கி வந்துள்ளது.

அந்த வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நோக்கத்திற்கான துறைமுகமாக புனரமைப்பதன் மூலம் இந்தியாவிற்கு அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவுக்கும் வடக்கு-கிழக்கு பகுதிகளுக்குமான பொருள் பரிமாற்றம்சார் வர்த்தக நடவடிக்கைளிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும், அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

2009 வரையான 30 ஆண்டுகால யுத்தம், பிற்பட்ட 15 ஆண்டுகள் என சுமார் 45 ஆண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியிலும், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் கடைசிப் பங்காளியாகவுமுள்ள வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி முக்கியத்துவம் பெறுவதாகவும்  தெரிவித்தார்.