நிமிஷா பிரியா விடுதலைக்காக திரட்டப்பட்ட பணத்தில் முறைகேடா? – வழக்கை கையாளும் சாமுவேல் விளக்கம்

படக்குறிப்பு, சாமுவேல் ஜெரோம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏமனில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் தவறாக பயன்படுத்தியதாக, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனாலும், இந்த குற்றச்சாட்டை சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் மறுத்துள்ளார்.

நிமிஷா பிரியா வழக்கு திங்கட்கிழமை (ஜூலை 21) எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. கொலையுண்ட ஏமன் குடிமகனான தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி, வழக்கை கையாளும் அதிகாரம் பெற்ற சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிமிஷா பிரியாவின் பெயரில் சேகரிக்கப்பட்ட நிதியை ஜெரோம் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அப்துல் குற்றம் சாட்டினார்.

நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவராக சாமுவேல் ஜெரோம் உள்ளார்.

ஜெரோம் தன்னை ஒரு வழக்கறிஞராக தவறாக சித்தரித்துக்கொண்டு, ஏமனில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இல்லாமல், கூட்டு நிதியுதவி மூலம் திரட்டப்பட்ட 40,000 டாலர் உட்பட நன்கொடைகளை சேகரித்ததாகவும் மஹ்தி குற்றம் சாட்டினார். ஜெரோம் தனது குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்குமாறு மஹ்தி சவால் விடுத்தார்.

படக்குறிப்பு, நிமிஷா பிரியா”(ஏமன்) அதிபர் மரண தண்டனைக்கு பச்சைக்கொடி காட்டிய பிறகு, நான் அவரை (ஜெரோம்) சனாவில் சந்தித்தேன், அவர் என்னை ஒரு பரந்த புன்னகையுடன் வரவேற்று, ‘வாழ்த்துகள்’ என்று கூறினார்,” என்று மஹ்தி ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

மேலும், அவர் “நடுநிலைத்தன்மை” என்ற பெயரில் “நாங்கள் சிந்திய ரத்தத்தை வைத்து வர்த்தகம் செய்கிறார்” என்று ஜெரோம் மீது மஹ்தி குற்றம்சாட்டினார். “அவர் தனது ஏமாற்று கதையை நிறுத்தாவிட்டால் உண்மை வெளிப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புகாரை மறுத்த சாமுவேல்

தன் மீதான குற்றச்சாட்டுகளை சாமுவேல் ஜெரோம் நிராகரித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. யாரோ சிலர் கூறிய தகவல் அடிப்படையில் மஹ்தியின் சகோதரர் அவ்வாறு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பின்னர் நான் அதுகுறித்து உரிய விளக்கத்தை அளித்ததும் அவர் தனது பேஸ்புக் பதிவை நீக்கிவிட்டார்.” என தெரிவித்தார்.

நிமிஷா பிரியாவின் வழக்குச் செலவுக்காக இந்தியாவில் திரட்டப்படும் பணம் முழுவதும் இந்திய தூதரகம் வழியாகவே ஏமனில் அவருக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு அனுப்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“ஏமனில் நிமிஷா பிரியாவின் வழக்குச் செலவுக்கான பணம் இந்திய தூதரகம் வழியாகவே அனுப்பப்படுகிறது. ஆகவே, 40 ஆயிரம் அமெரிக்க டாலரை கையாள்வது குறித்த குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை” என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து மஹ்தியின் சகோதரரின் முகநூலில் சாமுவேல் மீதான குற்றச்சாட்டு குறித்த பதிவு நீக்கப்பட்டிருப்பதை பிபிசி உறுதி செய்தது.

சாமுவேல் ஜெரோம் யார்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம், பல வருடங்களாக ஏமனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏமனில் ஒரு தனியார் நிறுவனத்தில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். ஏமனில், நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவர் (Power of attorney).

ஏமனில் ஷரியா சட்டத்தின்படி, மஹ்தியின் குடும்பத்திடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நிமிஷாவின் குடும்பத்தினர் சாமுவேலுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார்.

படக்குறிப்பு, சாமுவேல் ஜெரோம் உடன் நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி நடந்தது என்ன?

நிமிஷா பிரியா கடந்த 2008ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து ஏமனுக்கு செவிலியராக பணிக்குச் சென்றார்.

தலால் அப்தோ மஹ்தி கொலைக்குப் பிறகு நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏமன் குடிமகனான மஹ்தி, நிமிஷாவுடன் சேர்ந்து கிளினிக் ஒன்றைத் துவங்கியிருந்தார்.

நிமிஷா மீது வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிமிஷா மறுத்துள்ளார். மேலும் அவரின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் வாதிடும்போது மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரிடம் இருந்த பணத்தையும் பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுவதற்காகவே மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்ததாகவும், ஆனால் தவறுதலாக அதன் அளவு அதிகரித்துவிட்டதாகவும் கூறினார் அவர். தற்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபதா மஹ்தி இந்த குற்றச்சாட்டுகளை பொய் என்று மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை ஆதாரமற்றவை என்று கூறிய அவர், “நிமிஷா பிரியா, மஹ்தி அவருடைய பாஸ்போர்ட்டை பறித்து வைத்திருந்தார் என்று கூறவில்லை,” என்று குறிப்பிடுகிறார். தலால் நிமிஷாவிடம் இருந்து பணம் பறித்ததாகக் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வதந்தி என்று கூறுகிறார்.

கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை வழங்கியது. அதை எதிர்த்து நிமிஷாவின் குடும்பத்தினர் ஏமன் நாட்டு உச்சநீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவரது மேல் முறையீடு 2023ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹ்தி அல்-மஷாத், நிமிஷாவின் மரண தண்டனையை உறுதி செய்தார். அவர் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கான உச்ச அரசியல் குழுவின் தலைவராக உள்ளார்.

ஏமனின் இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் கீழ், அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மஹ்தியின் குடும்பம்தான். அவர்கள் விரும்பினால், ‘குருதிப் பணத்தை’ பெற்றுக் கொண்டு நிமிஷாவை மன்னிக்கலாம்.

வீட்டு வேலை செய்து வந்த நிமிஷாவின் அம்மா 2024ஆம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருந்து, தனது மகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு 48 மணி நேரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு