பெருகும் ‘நவீன வரதட்சணை’: இந்தியாவில் சட்டம் போட்டு தடுத்தாலும் ஒழிக்க முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்25 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் வரதட்சணை தடை சட்டம் 1961-த்தின் படி குற்றம் என்றாலும், வரதட்சணை என்பது இன்றளவும் சமூகத்தில் வெளிப்படையான நடைமுறையாகவே இருந்து வருகிறது. கல்வி, வேலை, பொருளாதார சுதந்திரம், இணையரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் – எதனாலும் அசைக்க முடியாததாக இருக்கிறது வரதட்சணை. சட்டப்படி குற்றமாக இருந்தாலும், எந்தவித குற்ற உணர்வு, அச்சம் இல்லாமல் இந்திய சமூகத்தில் இயல்பாக்கப்பட்ட ஒன்றாக வரதட்சணை இருக்கிறது.

திருமணச் சந்தையில் வரதட்சணை மதிப்பும், சீதனமாக‌ பெறும் பொருட்களும் புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. வரதட்சணையை கணக்கிட்டு சந்தை மதிப்பை நிர்ணயிக்கும் இணையதளங்கள் கூட இன்று செயல்பாட்டில் இருக்கின்றன.

திருப்பூர் ரிதன்யா தற்கொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் வரதட்சணை பிரச்னை மீண்டும் பேசுபொருளாக மாறிவிட்டிருக்கிறது.

ஓராண்டில் 6450 வரதட்சணை தொடர்புடைய இறப்புகள்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 6450 வரதட்சணை தொடர்புடைய இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் 359 வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் மூடப்பட்டுள்ளன. 4148 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையில் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

வரதட்சணை தடுப்பு சட்டம் 1961, அமலுக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குற்றங்கள் வெகுவாக குறையவில்லை என்பதுடன், வரதட்சணையின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி தமிழிடம் பேசிய அவர் “நுகர்வு கலாசாரத்துக்கு ஆளான சமூகத்தில் எல்லாமே ஆடம்பரமாகிவிட்டது. அம்பானி வீட்டு திருமணத்தை பார்க்கும் போது தங்களுக்கும் அப்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். கோடியில் செலவு செய்வது என்பது சில குடும்பங்களில் சாதாரணமாகிவிட்டது. தென்னிந்தியாவில் இல்லாத மெஹந்தி போன்ற சடங்கு தற்போது திருமணங்களின் அங்கமாகிவிட்டது. கேரளாவில் தாய்வழி பாரம்பரியம் கொண்ட நாயர் சமூகத்திலும் கூட வரதட்சணை நிலவுகிறது,” என்கிறார்.

1960ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை கிராமப்புற இந்தியாவில் 17 மாநிலங்களில் நடைபெற்ற திருமணங்களை ஆராய்ந்த உலக வங்கியின் ஆய்வு அறிக்கை ஒன்று வரதட்சணை குறையவில்லை, அப்படியே தொடர்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.

சதர்ன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரீ வீவர் மற்றும் விர்ஜினியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த கவுரவ் சிப்லுங்கர் ஆகியோர் இந்தியாவில் 1930 முதல் 1999 வரை நடைபெற்ற 74 ஆயிரம் திருமணங்களை ஆய்வு செய்தததில் 95% திருமணங்களில் வரதட்சணை இருந்தது என்று கூறுகிறது. நல்ல படிப்பு, வேலை கொண்ட ‘உயர் தர’ மாப்பிள்ளைகளுக்கு அதிக வரதட்சணை கேட்கப்படுவதாகவும் கூறியது.

பட மூலாதாரம், Getty Images

வரதட்சணை கணக்கிடும் இizயதளங்கள்

மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவு வரதட்சணை கேட்கலாம் என்பதை முடிவு செய்ய, சூத்திரம் வகுத்து செயல்படுத்துவதாக குறைந்தது இரண்டு இணையதளங்களை காண முடிகிறது.

அவற்றில் “நீங்கள் எவ்வளவு வரதட்சணை பெறலாம்?” என்று கணக்கிட வேண்டுமா?, உங்களது “சந்தை மதிப்பு” என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டுமா? – உங்கள் வயது, வேலை, படிப்பு, படிப்புக்கான செலவு, சொந்த வீடு, கார், வசிப்பது நகரமா, கிராமமா, வெளிநாடா உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்தால், தோராயமாக எவ்வளவு வரதட்சணை வாங்கலாம் என்று கணக்கிட்டு ஒரு தொகையை காட்டுகிறது.

பொறியாளரை விட மருத்துவருக்கு சற்று அதிகமாகவும், கிராமத்தை விட நகரத்தில் வசிப்பவருக்கு சற்று அதிகமாகவும், வெளிநாட்டில் வசிப்பவருக்கு இன்னும் அதிகமாகவும் வரதட்சணை கேட்க முடியும் என்று கணக்கிடுகிறது.

படக்குறிப்பு, வரதட்சணையைக் கணிக்கும் இணையதளம் பெருகி வரும் ‘நவீன வரதட்சணை’ முறை

கடந்த 30 ஆண்டுகளாக குடும்ப நீதிமன்ற வழக்குகளை கையாண்டுவரும் மூத்த வழக்கறிஞர் ஆதிலக்‌ஷ்மி லோகமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசும் போது, மனைவியின் சம்பளத்தை கணவரே வாங்கிக் கொள்ளும் வழக்கத்தை நவீன வரதட்சணையாக பார்ப்பதாக கூறுகிறார்.

“நன்கு படித்த பெண்ணாக, கணவனை விட அதிகம் சம்பாதித்தாலும் பரவாயில்லை, பல ஊர்களுக்கு மாறி செல்ல வேண்டியிருந்தாலும் பரவாயில்லை திருமணம்‌ செய்யலாம் என்று சில பையன் வீடுகளில் கூறுகின்றனர்.

திருமணம் ஆன பிறகு அந்த பெண்ணின் சம்பளம் முழுவதும் அந்த கணவர் கையில் இருக்கும். ஒரு வழக்கில், கணவர் பெயரில் இரண்டு வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளுக்கான மாதாந்திர கடன் தொகையை மனைவி தான் செலுத்துகிறார். ஆனால் அதை அவர் நேரடியாக வங்கியில் செலுத்த மாட்டார். மனைவியின் கணக்கிலிருந்து கணவருக்கு அனுப்பப்படும். கணவர் தனது கணக்கிலிருந்து வங்கிக்கு செலுத்துவார்.

இது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரதட்சணை என்று கருதப்படாது என்றாலும், குடும்ப வன்முறை, பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும்” என்றார்.

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் ஆதிலக்‌ஷ்மி லோகமூர்த்தி சீதனமாக கார் கேட்கும் வழக்கம்

கார் வாங்கி தரச் சொல்லுவதும், சொத்துகளில் பங்கு எழுதிக் கேட்பதும் சமீபத்திய வழக்கமாகியிருப்பதாக கூறினார், தஞ்சாவூர் மாவட்ட வரதட்சணை தடுப்பு அலுவலர்.

“இப்போது ‘டவுரி’ ‘வரதட்சணை’ என்ற வார்த்தைகளை யாரும் பயன்படுத்துவதில்லை. உங்கள் பெண்ணுக்கு ‘சீதனம்’ அதாவது ‘கிஃப்ட் (gift) கொடுங்கள் என்று கேட்கின்றனர். நகையை தவிர, இப்போது திருமணங்களில் பெறப்படும் முக்கிய ‘சீதனம்’ கார்.

மாப்பிள்ளைக்கு கார் வாங்கிக் கொடுங்க என்று கேட்பது மிக சாதாரணமாகிவிட்டது, இது என் மாமியார் வீட்டில் வாங்கி கொடுத்த கார் என்று வெளியில் சொல்வது குறிப்பாக கிராமங்களில் மிகவும் பெருமையாக பார்க்கப்படுகிறது. எங்களிடம் வரதட்சணை புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் வீட்டில் வழங்கிய காரில், பெண்ணின் அண்ணன் மகன் பெயர் எழுதப்பட்டிருப்பது கூட கணவர் வீட்டாரால் பிரச்னையாக எழுப்பப்பட்டுள்ளது.

இதை தவிர மற்றொரு புதிய வடிவிலான வரதட்சணை – பெண்ணுக்கு அவரது வீட்டில் கிடைக்க வேண்டிய சொத்தை பாகம் பிரித்து, அதை ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என்று பையன் வீட்டிலிருந்து கேட்கப்படுகிறது. அல்லது பெண்ணுக்கு வர வேண்டிய சொத்தை திருமணத்தின் போதே பெண்ணின் பெயரில் எழுதி வைக்க வற்புறுத்துவதும் நடக்கிறது.

இவை இல்லாமல், வரதட்சணையாக பணம் கேட்பதும் வழக்கத்தில் உள்ளது. இது வங்கி பரிவர்த்தனையாக இல்லாமல், கையில் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்பது பையன் வீட்டின் நிபந்தனையாக இருக்கிறது” என்றார்.

பட மூலாதாரம், Getty Images

“வன்முறைகள் வெளியே தெரிவதில்லை”

வரதட்சணைக்காக பெண்ணை அவமதிப்பது பற்றி இரு வீட்டிலும் கவலைப்படுவதில்லை என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். “வரதட்சணை குறித்து இப்போது வெளியே வந்திருப்பது கடுகளவு மட்டுமே. நிறைய விதமான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உடல் ரீதியாக, அவமானப்படுத்தும் விதமாக, பெண்ணின் சுதந்திரத்தை மறுப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்குவது போன்றவை நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இதில் சவால் என்னவென்றால் வரதட்சணை கொடுப்பதிலும், பெறுவதிலும் இருவீட்டாருக்கும் எந்தவித அவமான உணர்வும் இல்லை. பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் போது மட்டுமே அது வெளியே வருகிறது. சட்டப்படி வரதட்சணை வாங்குவது கொடுப்பது இரண்டுமே குற்றம் தான். ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை” என்றார்.

இப்போது பெண்கள் புகார் கொடுக்க முன்வருவது அதிகமாகியுள்ளது என்றார் தஞ்சாவூர் சமூக நல அதிகாரி, “வரதட்சணை புகார்கள் அனைத்துமே திருமணத்துக்கு பிறகு தான் வருகின்றன. திருமணத்துக்கு பிறகு, கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கேட்கும் போதே பிரச்னை உருவாகிறது. அந்த நிலையில் தான் புகார்கள் வருகின்றன. ஆனால் முன்பு போல் பல ஆண்டுகள் கழித்து அல்ல, இப்போது பெண்கள் திருமணமான சில மாதங்களிலேயே புகார் அளிக்க தைரியமாக வெளியே வருகின்றனர்”

படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் “ஒரு குடும்பத்தின் ஒன்பது ஆண்டு போராட்டம்”

தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள் படி 2022-ம் ஆண்டு இறுதியில் 67% வழக்குகள் ஆறு மாதங்களாக விசாரணை நிலையிலேயே தேக்கமடைந்திருந்தன.

2016-ம் ஆண்டு சென்னையில் உயிரிழந்த பிகாரைச் சேர்ந்த ஆகன்ஷா ராஜின் வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகன்ஷாவின் அண்ணன் அமன் ராஜ் “செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்குக்காகவே நான், எனது வயதான பெற்றோருடன் 2016-ம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வருகிறேன். தென் ஆப்பிரிக்காவில் வேலை செய்த நான், தற்போது சென்னையிலேயே பணி தேடி, எனது மனைவி மற்றும் குழந்தையுடன் இங்கேயே இருக்கிறேன்” என்கிறார்.

ஆகன்ஷாவும் அவரது கணவரும் பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு 2014-ம் ஆண்டு திருமணம் ஆனது. கணவர் சென்னையில் வேலை பார்த்ததால் சென்னையில் இருவரும் தங்கியுள்ளனர். 2016-ம் தேதி மே 15ம் தேதி நள்ளிரவு ஆகன்ஷா தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கணவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் அவர் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்த கணவரால் கொல்லப்பட்டுள்ளார் என்று ஆகன்ஷாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

“காவல்துறையினர் போதிய சாட்சிகளை சேகரிக்கவில்லை, எங்கள் வாக்குமூலங்களையும் பெறவில்லை. எனவே முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்று, பிறகு எதிர் தரப்பு மேல்முறையீடு செய்ததால் உச்சநீதிமன்றத்துக்கும் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பெற வேண்டியிருந்தது.

விசாரணை முடிந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனது அப்பா அம்மா வாக்குமூலம் அளிக்க உதவியாக இந்தி தெரிந்த மொழிபெயர்ப்பாளரை எனக்கு வழங்க ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டனர். வழக்கறிஞர் மாற்றம், புதிய வழக்கறிஞரை நியமிக்க காலம் வேண்டும், அவ்வபோது நடைபெறும் நீதிமன்ற புறக்கணிப்புகள் என பல்வேறு காரணங்களால் வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை” என்கிறார் அமன் ராஜ்.

“சமூக மாற்றம் தேவை”

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் நீதித்துறையிலும் கூட பாலின சமத்துவம் குறித்த தெளிவு இருப்பதில்லை என்றார் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பஞ்சாப், அரியாணா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன்.

“நாம் இப்போதும் ஆணாதிக்க சமூகத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இது நீதித்துறையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு முறை பஞ்சாப் பெண் நீதிபதி ஒருவர், ‘எனது வீட்டில் எனக்கு மகளை விட மகனையே விரும்புகிறேன். மகன் தான் என்னை கவனித்துக் கொள்வான், மகளால் அதை செய்ய முடியாது. இப்படி நினைப்பதில் என்ன தவறு உள்ளது என்றார். தீர்ப்புகளில் ‘நல்ல மனைவி’, ‘பணிவான பெண்’ போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எப்படி கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் ரேக்கிங் அனுபவித்த அதே மாணவர்கள் மூன்றாம் ஆண்டில் பிறருக்கு ரேக்கிங் செய்கிறார்களோ அதே போல மருமகளாக அனுபவித்ததை மாமியாராக இருக்கும் போது சில பெண்கள் செய்கின்றனர்.” என்கிறார் அவர்.

சில வழக்குகளில் பெண்களும், திருமணமாகி செல்லும் போது முடிந்தவரை தனது வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு செல்வோம் என்று நினைக்கிறார்கள் என்கிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், “பெண்களை வளர்க்கும் போதே வேறு ஒரு வீட்டுக்கு செல்ல வேண்டியவர் என்று சொல்லி தானே வளர்க்கிறோம். இதை தனி நபரின் கிரிமினல் குற்றமாக பார்க்காமல் சமூக குற்றமாக பார்த்தால் தான் மாற்றம் வரும்.” என்கிறார் அவர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரிதன்யா மரணத்துக்கு பிறகு, வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளித்து வரும் வழக்கறிஞர் ஆதிலட்சுமி, சில நேரங்களில் பெண்ணை தைரியமாக கணவர் குடும்பத்தை விட்டு வெளியே வர சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் “அவர்களைப் போன்ற பெற்றோர் இருப்பதால் தான் சமூகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், ” திருமணமாகி ஆறு மாதங்களில் எனது மகளுக்கு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அவரது மாமியார் கூறினார். எனது மகளுக்கு என்ன வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறினேன்” என்கிறார். தனது மகள் தற்போது வேறொருவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு