விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளினை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு குற்றச்செயல்களிற்காக பயன்படுத்திவருகின்றமை அம்பலமாகியுள்ளது.

இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து இலங்கை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர்.

ஐகதான முன்னாள் போராளியிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை விடுதி அறையில் தங்கியிருக்குமாறு கூறிச்சென்றதாக முன்னாள் போராளி தெரிவித்துள்ளார். இரகசியத் தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் போராளிகள் சிலர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.