வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.

இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.  அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் இந்தியா வைக்கும் நம்பிக்கையை வலியுறுத்தினார்.

அத்துடன் தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன்மூட்டலுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்த அக்கறையுடன் செயல்படுவதாக உறுதிபட தெரிவித்தார்.

மேலும் வடமாகாணத்தில் இந்தியா மேற்கொள்ளும் விரிவான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய வீடமைப்பு திட்டம், பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு, புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின் திட்டங்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், மற்றும் யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் போன்ற இந்தியாவின் பன்முக செயல்பாடுகள் மானுடய உதவி, கல்வி ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றார்.

குறித்த பயிற்சி பட்டறையில், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிவதனுஷ் மற்றும் கிருத்திகா மருதநாயகம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதுடன், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் பிரதான நிருபர் (தரவுப் பத்திரிகைத் துறை) விஞ்ஞேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ‘பிபிசி தமிழ்’ ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொண்டனர்.

அவர்கள் தமது ஊடகத் துறையின் நடப்பு போக்குகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இந்திய துணை தூதுவர் வழங்கி வைத்தார்.