எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் கொடுக்கவே எம்மை கைது செய்தனர் என வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு முன்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு , பின்னர் பதில் நீதவானால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிணையில் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்திலே நாங்கள் பங்கெடுத்திருந்த போது எங்களில் ஐவரை தேடித் தேடி கைது செய்தனர்.அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கைதாக பொலிசாரின் இந்தக் கைது அமைந்துள்ளது.குறித்த பௌத்த பன்சலையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்து அடாத்தாக இராணுவப்பலத்துடன் தாங்கள் அதனை ஆட்சியுரிமை செய்து முகாமை செய்கின்றனர்.இதனால், நாங்கள் எங்கள் மக்களின் காணிக்காக நீதியுரிமை வேண்டிப் போராடிய நிலையில் கைது செய்யப்படுகின்றோம்.இலங்கையிலே பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்பில் கடந்தகாலங்களிலே நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைக் கூட பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை. அது ஒரு அப்பட்டமாகவே தெரிந்த விடயம். குருந்தூர்மலையிலே பொலிசாரை அமுல்படுத்துமாறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்று வெவ்வேறு பட்ட விடயங்களின் அடிப்படையிலே பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை குறைந்த பட்சமேனும் நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்த இடத்தில் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். இந்தக் கைதுகளின் போதான நடவடிக்கைகள் என்பது எங்களின் பாதுகாப்பு அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் அளிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
எமது மண்ணை பௌத்த சிங்கள தேசமாக மாற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கை
6