மோடியை நோக்கி வீடு நகர்கிறது: தமிழ்நாட்டில் சைக்கிள் ஓடுகிறது: நீயா நானா போட்டி...

மோடியை நோக்கி வீடு நகர்கிறது: தமிழ்நாட்டில் சைக்கிள் ஓடுகிறது: நீயா நானா போட்டி தொடர்கிறது – பனங்காட்டான்

by ilankai

தமிழகம் சென்றுள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை மாகாண சபையை புறந்தள்ளும் தங்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் தெரிவித்து அதனை செயற்படுத்துமாறு தமிழக அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைமையிலான அணி இந்திய பிரதமரிடம் கையளிக்குமாறு இந்திய உயர் ஸ்தானிகரிடம் யைளிக்கும் ஆவணத்தில் மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்த உதவுமாறு கேட்டுள்ளது. இதில் எதனை மோடி தெரிந்தெடுக்கப் போகிறார்? டித்வா புயல் ஏற்படுத்திய பேரிடர் இலங்கையை சர்வதேச உதவி வட்டத்துள் புகுத்தியுள்ளது. எவ்வளவு நிதி கிடைத்துள்ளது, அதில் நிவாரணம் எவ்வளவு, கடன் எவ்வளவு என்ற விபரம் பூரணமாகத் தெரியவில்லை. பேரிடர் நிவாரணத் தேவைக்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறியுள்ளது. ஆனால், பொதுவெளியில் எதிர்க்கட்சிகள் அரசின் நிதிப் பங்களிப்பை விமர்சித்து வருகின்றன. மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி பேதமின்றி சமத்துவமாக மதிக்காது ஆட்சித் தரப்பின் அரசியல் தலைமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பேரிடர் நிவாரணம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டு. சர்வதேசம் தாராளமாக வழங்கும் நிவாரண உதவி ஜே.வி.பி.யின் உதவி என்ற தோற்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடு முழுவதும் அபிப்பிராயம் பரப்பப்படுகிறது. இதில் உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால், அநுர குமர அரசு இதனையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்சிக் கதிரையில் ஏற அறுபது ஆண்டு காலத்தில் இரு தடவை முயற்சித்து தோல்வியையும் இழப்புகளையும் கண்டவர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தைத் தக்கவைத்து ஆட்சியில் நீட்சி காண விரும்புவதாக இதனைப் பார்க்கலாம்.முன்னைய ஆட்சியாளர்கள் ஊழலும் மோசடிகளும் செய்தவர்கள் என்பதாலும், இன்றைய அரசு அதனை முற்றாக அழித்து ஊழலற்ற ஆட்சியை நடத்துவதாலும் சர்வதேசம் வரையாது வழங்குகிறது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச உதவிகளை வெளிநாடுகளிலிருந்து பெறுவதில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்டுவரும் எதிர்கட்சிகளின் வேண்டுகோள்களையும் பிரதமர் நிராகரித்துள்ளார். ஊழல்வாதிகளான முன்னைய ஜனாதிபதிகளையும் நாம் இணைத்துச் செயற்பட்டால் சர்வதேசம் எமக்கு உதவ முன்வராது என்று இவர் சுட்டியிருப்பது அனைத்துப் பிரதான சிங்களக் கட்சிகளையும் ஒரு கூடைக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஏற்கனவே இப்பத்தியில் சொன்னதுபோல அடுத்த சில வருடங்களில் அல்லது நீண்ட காலத்துக்கு இடம்பெற வேண்டிய பல்வேறு தேர்தல்களையும், தற்போதைய பேரிடரிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதாகக் காரணம் கூறி பின்போடுவதற்கும் ஆட்சியிலிருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இலங்கை அரசியல் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்க தமிழர் தாயக அரசியல் வேறொரு அரசியல் நோக்கி நடைபயில்கிறது. இதனை முன்வைத்து எழுத ஆரம்பிக்கும்பொழுது என் மனசு ஒரு சினிமாப் பாடலை முணுமுணுக்கிறது. பலே பாண்டியா திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும், சிவாஜி கணேசனும் பாடுவதாக இடம்பெற்ற நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற பாடல்தான் இது. இப்பாடல் காட்டும் நீயா நானா என்ற தோரணையில் தமிழர் தாயக அரசியல் இன்று போட்டி போடுகிறது. தமிழர்களின் அரசியல் தலைமை என்று தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் முன்னணியில் உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் என்ற எண்ணி;க்கையை தவிர்த்து, மூத்த அரசியல் கட்சிகள், சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக தமிழர்களோடு இணைந்தவர்கள், அமைச்சர் பதவிகளை வகித்த கட்சிகள், அவ்வப்போது அரசுடனும் வெளிநாடுகளுடனும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேசி வருபவர்கள் என்று இவர்களை மதிப்பதற்கு இடமுண்டு. ஆயுதங்களைக் கைவிட்டு அரசியலுக்குள் வந்த ரெலோ, ஈ.பி,ஆர்.எல்.எவ். என்பவை ஒருபோதும் தனித்து இயங்கும் வல்லமை கொண்டவர்களாக இருக்கவில்லை. அரசியலில் சாதனை புரிந்தவர்களும் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பால் தமிழரசு, தமிழ்  காங்கிரஸ் ஆகியவற்றோடு இவை மூன்றும் இணைக்கப்பட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது. 2019ன் பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தக் கூ(ட்)டு ஒவ்வாமையாலும், வசதி கருதியும் பிரிந்தது. இப்போது தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழர் தேசிய பேரவை இயங்குகிறது. தமிழரசு கட்சி முன்னர் பிரிந்து போன மூன்று குழுக்களையும் அதன் சுயதேவை கருதி தம்முடன் இணைக்கும் பேச்சுவார்த்தையில் முதற்படி தாண்டியுள்ளது. இந்த இணைப்பில் சமத்துவ கட்சியும் ஜனநாயக போராளிகள் அணியும் சேர்ந்துள்ளன. மாகாண சபைத்தேர்தலை இலக்கு வைத்து தமிழரசு கட்சி தனது காய்களை நகர்த்துகிறது. அதே விருப்புடன் முன்னைய மூன்று அணிகளும் மற்றைய இரண்டும் தமிழரசு கட்சியுடன் இணையும் சாத்தியம் காணப்படுகிறது. ஒற்றை ஆட்சியின்றி சம~;டி முறையைக் கோரும் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய பேரவையும் தமக்குள் ஓர் அணியை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் மாவீரர் நினைவேந்தல் காலத்தில் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். பசுமை இயக்க பொ.ஐங்கரநேசனின் அழைப்பில் இவரது வருகை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் ஒரு கல்லை தமிழ்த் தேசிய குளத்துக்குள் வீசி ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த அலையின் ஊடாக அரசியலை எடுத்துச் செல்ல கஜேந்திரகுமார் அணி கால் பதித்துள்ளது. இவரது தலைமையில் ஐங்கரநேசன் உட்பட ஆறு பேர் கொண்ட குழு தமிழகம் சென்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து பேசி, தங்களின் கோரிக்கை ஆவணத்தையும் அவரிடம் கையளித்தது. அதனை பிரதமர் மோடியிடம் எடுத்துச் செல்லுமாறு கோரியுள்ளனர். இச்சந்திப்பில் திருமாவளவனும் பங்குபற்றினார். அடுத்து, சீமானையும், அதிமுக பிரமுகர் எடப்பாடியையும் இக்குழு சந்தித்துள்ளது. இதன் பலாபலன்களை அறிய சில வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டி வரலாம். தமிழரசு கட்சி தலைமையிலான அணி இந்த மாதம் 23ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அணியில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகளின் பிரதிநிதிகள், தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இச்சந்திப்பில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏதோ ஒரு வகையில்  இச்சந்திப்பில் இணைந்து கொள்வாரென்று உறுதிபட கூறலாம். மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென இக்கட்சிகள் தயாரித்த ஆவணம் இச்சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்சொன்ன இரண்டு தரப்பு சந்திப்புகளிலும் பங்குபற்றுபவர்கள் ஈழத்தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு பற்றியே அக்கறை கொள்பவர்கள். அதனை வைத்தே அரசியல் செய்பவர்களும். ஆனால், இரண்டினதும் கோரிக்கைகள் வெவ்வேறானவை. அதேசமயம், இரண்டு கோரிக்கைகளும் இந்திய அரசை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் சென்றுள்ள கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை மாகாண சபையை புறந்தள்ளும் தங்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசிடம் தெரிவித்து அதனை செயற்படுத்துமாறு தமிழக அரசியல் தலைவர்களை கேட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைமையிலான அணி இந்திய பிரதமரிடம் கையளிக்குமாறு வழங்கவுள்ள ஆவணத்தில் மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளது.   இரு தரப்பினரும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை முன்வைத்து நகர்கிறார்கள். ஆதலால் இ;ப்போது இதனை விமர்சிக்காது தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் மறந்துவிட்ட இரண்டு விடயங்களை இங்கு நினைவூட்டுவது காலத்தின் தேவையாகிறது. • கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன் தம்மைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரமுகர்களிடம் என்ன சொன்னார்? தமிழ்நாடு கொந்தளித்தாலும் ஈழத்தமிழருக்கு விடிவில்லை என்றுதானே சொன்னார். தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வலுவாக எதிர்த்து வரும் பா.ஜ.கவின் தலைவர் மோடி ஈழத்தமிழருக்கான தமிழகத்தின் குரலை செவிமடுப்பாரா?• சில மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ;ஜெய்சங்கரை தமிழ்க் கட்சி பிரமுகர்கள் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுச் சொன்னது என்ன? உங்கள் பிரச்சனைத் தீர்வை நீங்கள் அனைவரும் ஒரே குரலில் ஒன்றாக கொண்டு வாருங்கள் என்று சொன்னாரல்லவா?இது எதனையுமே புரிந்து கொள்ளாமல் வெவ்வேறு கூட்டுகளாக ஒரே இடத்துக்கு இரு பாதையால் செல்வதில் என்ன கிடைக்கப் போகிறது? சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தனித்தனி வழியே செல்லப்போகின்றன?

Related Posts