கோவை மாஸ்டர் பிளானை விவசாயிகளும் கட்டுமானத் துறையினரும் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், DTCP

எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ் 22 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கோவைக்கான புதிய மாஸ்டர் பிளானுக்கு விவசாயிகளும், சில கட்டுமான நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தங்கள் சார்பில் தரப்பட்ட எந்த ஆட்சேபனையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பு குடியிருப்பாக இருந்த பகுதியை இப்போது விவசாயப் பகுதி என்று மாற்றி, நில உபயோக மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குறை கூறுகின்றனர்.

ஆனால், கோவையில் ஏற்கெனவே இருந்த 60 சதவீதம் விவசாய நிலங்கள், தற்போது 30 சதவீதமாக்கப்பட்டுவிட்டதாகவும், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்பே நிலப் பயன்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் பற்றி விவசாயிகள், கட்டுமான நிறுவனங்கள் கூறுவது என்ன?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கோவை மாஸ்டர் பிளான்-2041

கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, 1,531 சதுர கி.மீ., பரப்பளவு கோவை திட்டப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டு, கோவை மாஸ்டர் பிளான் 2041 (Master Plan 2041) தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 3-ஆம் தேதி வெளியிட்டார். அதற்கு ஒரு வாரம் கழித்து நில உபயோக வரைபடங்களுடன் முழுமையான மாஸ்டர் பிளான் இணையத்தில் வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம், DTCP

பசுமை வழிச்சாலைக்கு இணையாக திட்டச்சாலையா?

அதில் உத்தேச நிலப்பயன்பாடு விவரங்கள், வரைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. பகுதி வாரியாக குடியிருப்புப் பகுதிக்கு மஞ்சள், வணிகப் பகுதிக்கு நீலம், விவசாயப் பகுதிக்கு பச்சை, தொழிற்சாலைப் பகுதிக்கு வயலெட், கல்வி நிறுவனங்கள் பகுதிக்கு சிவப்பு என தனித்தனியாக பிரித்துக் காட்டப்பட்டிருப்பதுடன் அதற்குரிய சர்வே எண்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த வரைபடங்களையும், நிலப் பயன்பாடு மற்றும் உத்தேச திட்டச்சாலைகளின் வரைபடத்தையும், அவற்றுக்குரிய சர்வே எண்களையும் பார்த்து கட்டுமானத்துறையினர், விவசாயிகள் என பல தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை–சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் ஏற்கெனவே எதிர்த்து வரும் நிலையில், ஏறத்தாழ அதே அளவீட்டில் சின்னச்சின்ன மாற்றங்களுடன் இந்த மாஸ்டர் பிளானில் A 14 என்ற பெயரில் 200 அடி அகலத்தில் புதிய திட்டச்சாலை உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டச்சாலை, கோவை–சத்தியமங்கலம் இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 4 வழி பசுமை வழிச்சாலை துவங்கும் அதே குரும்பபாளையம் பகுதியிலிருந்து துவங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து சர்க்கார்சாமக்குளம், கொண்டையம்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், கரியாம்பாளையம், காரே கவுண்டம்பாளையம் வழியாக ஒட்டார்பாளையம் என்ற இடத்தில் முடிவடைவதாக இந்த திட்டச்சாலை உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதையொட்டிய பல்வேறு பகுதிகளும் குடியிருப்பாக வரையறை செய்யப்பட்டு, நிலப்பயன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறிக்கப்பட்டுள்ள பட்டா நிலங்களில் எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் செய்ய முடியாது. நில உபயோக மாற்றமும் செய்ய இயலாது.

திட்டச்சாலைக்கு எதிர்ப்பு

இந்த திட்டச்சாலையை ரத்து செய்ய வேண்டுமென்று பல்வேறு விவசாய அமைப்பினரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்கம், பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு (கோவை மாவட்டம்) உள்பட பல தரப்பினரும் இணைந்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி மனு கொடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Dhanabal

படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் பிபிசி தமிழிடம் பேசிய கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க நிர்வாகி தனபால், ”மாஸ்டர் பிளான் வரைவில் இத்திட்டச்சாலை இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருத்து கேட்பு கூட்டத்தில் மனு கொடுத்தோம். அன்றைக்கு விவசாயிகள் எதிர்ப்பால் அந்த கூட்டமே பாதியில் நிறுத்தப்பட்டது. அதனால் அந்த கூட்டத்தில் நாங்கள் கொடுத்த ஆட்சேபனையை ஏற்காமல், விவசாயப் பகுதிகள் நிறைந்த பகுதிகளில் ஏறக்குறைய பசுமை வழிச்சாலைக்கு இணையாக சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து, 200 அடி அகலத்துக்கு திட்டச்சாலையை வடிவமைத்துள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.” என்றார்.

“ஆட்சேபனை புறக்கணிக்கப்பட்டுள்ளது”

பிபிசி தமிழிடம் பேசிய மேலும் சில விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாஸ்டர் பிளானில் இடம் பெற்றுள்ள இந்த திட்டச்சாலையில், சர்க்கார்சாமக்குளம், கொண்டையம்பாளையம் ஆகிய 2 கிராம ஊராட்சிகளில் மட்டும் 3 கி.மீ. துாரத்துக்கு, ஏராளமான அங்கீகாரம் பெற்ற மனைப் பிரிவுகள் மற்றும் வீடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். அதற்கான ஆவணங்களையும் காண்பித்து விளக்கினர். மாஸ்டர் பிளானை தயாரித்துள்ள அதே நகர ஊரமைப்புத் துறைதான், இந்த மனைப்பிரிவுகளுக்கும் அங்கீகாரம் கொடுத்ததாகக் கூறும் குடியிருப்புவாசிகள், இப்போது அதே சர்வே எண்களில் திட்டச்சாலையை வடிவமைக்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.பாபு, ”வளர்ச்சித்திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களை எடுப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் நலனுக்காக எடுப்பதாக எழுதிக் கேட்டு பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்களை எடுத்தனர். புறவழிச்சாலை அமைத்து தனியாரிடம் ஒப்படைத்து சுங்கம் வசூலிக்கின்றனர். இப்போதும் அதற்கான முயற்சியே நடக்கிறது.” என்று குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், A.S.Babu

படக்குறிப்பு, தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் விவசாய நிலங்களை எடுப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்கிறார் பாபு கட்டுமான நிறுவனங்கள் அதிருப்தி

மாஸ்டர் பிளான் வரைவில் குடியிருப்பாக இருந்த பகுதியை தற்போது விவசாயம் மற்றும் தரிசு நிலப்பகுதி என்று குறிப்பிட்டுள்ளதாக கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பலரும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

மாஸ்டர் பிளான் சுருக்கம் வெளியான போது, கட்டுமானத்துறை அமைப்புகளான கிரடாய் (Confederation of Real Estate Developers’ Associations of India), இந்திய கட்டுநர்கள் சங்கம் (BAI-Builders Association of India) மற்றும் கோயம்புத்துார் சிவில் என்ஜினியர்கள் சங்கம் (COCENA-Coimbatore Civil Engineers Association) ஆகிய அமைப்புகள் அதனை வரவேற்றன. ஆனால் முழுமையான திட்டம் வெளியான பின்பு, நிலப் பயன்பாட்டில் உள்ள ஏராளமான மாற்றங்கள் குறித்த அவர்களது வேறாக உள்ளது.

கிரடாய் அமைப்பின் கோவை கிளை நிர்வாகி பாலச்சந்திரன், ”சில குழப்பங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதுபற்றி கூட்டம் போட்டு முடிவெடுக்கப்போகிறோம்.” என்றார்.

கோயம்புத்துார் சிவில் என்ஜினியர்கள் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், ”சில பகுதிகளில் நிலப் பயன்பாடு பிரித்ததில் குளறுபடிகள் இருப்பதாகத் தெரிகிறது. முழுமையாகத் தெரியாமல் எதையும் கூற முடியாது. அதுபற்றி ஆய்வு செய்து விட்டு பதில் தருகிறோம்.” என்றார். மாஸ்டர் பிளான் பற்றி கலந்தாலோசிப்பதற்கான கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் ஜோசப், ”திட்டப் பகுதிகளில் நிலப் பயன்பாடு பிரிப்பதில் சில குளறுபடிகள் உள்ளன. இதுபற்றி விவாதிப்பதற்காக கூட்டு கமிட்டி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நிலப் பயன்பாட்டில் உள்ள தவறுகளை சரி செய்வதற்கு நகர ஊரமைப்புத் துறையின் சார்பில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனால் இந்த தவறுகளை விரைவில் அரசு சரி செய்து தருமென்று நம்புகிறோம்.” என்றார்.

“மஞ்சளாக இருந்த பகுதி பச்சையாக மாறியது”

பட மூலாதாரம், DTCP

அமைப்புகளின் சார்பில் பலரும் கருத்துத் தெரிவிக்க தயங்கும் நிலையில், இதே அமைப்புகளில் உறுப்பினர்களாகவுள்ள பல்வேறு கட்டுமான நிறுவனத்தினரிடமும் பிபிசி தமிழ் பேசியது. அவர்களில் பலரும் வெவ்வேறு பகுதிகளில் மாஸ்டர் பிளான் வரைவுக்கும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இறுதி மாஸ்டர் பிளானுக்கும் இடையில் நிலப் பயன்பாட்டிலுள்ள மாற்றங்களைப் பட்டியலிட்டனர். அவை சார்ந்த சில ஆதாரங்களையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.

உதாரணமாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட வீரகேரளம், வடவள்ளி, காளப்பட்டி, துடியலுார் உள்ளிட்ட சில பகுதிகளில் மாஸ்டர் பிளான் வரைவில் குடியிருப்பு என்று காட்டப்பட்டிருந்த பல சர்வே எண்கள், இறுதி செய்யப்பட்ட மாஸ்டர் பிளானில் உத்தேச விவசாயப்பகுதி (Proposed Agriculture Land) என்று மாறியுள்ளன. இன்னும் சில பகுதிகள், தரிசு நிலப் பகுதிகள் (Dry Land) என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி, ”வரும் 2041 ஆம் ஆண்டு வளர்ச்சியை கணக்கிட்டு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்பாக மாறிய பகுதியை இப்போது விவசாயப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். கள ஆய்வே செய்யாமல் ஜிபிஎஸ் உதவியுடன், அதிக மரங்கள் உள்ள பகுதிகளை எல்லாம் விவசாயப் பகுதி என்று தீர்மானித்துள்ளனர். எங்கள் பகுதியில் மட்டும் 300 ஏக்கரை இப்படி மாற்றியுள்ளனர்.” என்றார்.

ஏற்கெனவே மனைப் பிரிவாக பிரிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டுள்ள பல பகுதிகளை விவசாய ப்பகுதி என்று மாற்றியிருப்பதையும் வரைபடத்துடன் கட்டுமான நிறுவனத்தினர் சுட்டிக்காட்டினர். இதனால் நில உபயோக மாற்றத்துக்காக மீண்டும் ஒவ்வொரு துறையிலும் தடையின்மைச் சான்று வாங்கி, சென்னைக்கு சென்று திட்ட அனுமதி வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுவரை திட்டம் அல்லாத பகுதியாக இருந்த (Non Planning Area) காரமடை, பெரியநாயக்கன்பாளையம் தாலுகா பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை திட்டப்பகுதியாக மாற்றிவிட்டதால், அங்கு நில உபயோக மாற்றத்துக்காக சென்னைக்கு கோப்புகளை எடுத்துக் கொண்டு அலைய வேண்டியிருக்கும் என்கிறார் கட்டடப் பொறியாளர் கணேஷ். இதனால் ஏராளமான கட்டுமானத் திட்டங்கள் தேக்கமடையும் என்று கூறும் அவர், இதை 2041 வரை மாற்ற முடியுமா என்பதும் சந்தேகமாகவுள்ளதாக தெரிவிக்கிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”மாஸ்டர் பிளான் கட்டுமானத்துறைக்கு மட்டுமானதல்ல ”

விவசாயிகள் மற்றும் கட்டுமானத்துறையினரின் புகார்கள் குறித்து, தமிழக நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசனிடம் பல்வேறு கேள்விகளை பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ”முன்பிருந்த உள்ளூர் திட்டக்குழுமப் பகுதியில் 60 சதவீதமாக இருந்த விவசாயப் பகுதி, இந்த மாஸ்டர் பிளானில் 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் குறைத்தால் விவசாயப் பகுதியே இருக்காது.” என்றார்.

”மாஸ்டர் பிளான் வரைவில் இருந்ததை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. குடியிருப்பாக மாற்றப்பட்ட பல பகுதிகள், மனைப் பிரிவாக மேம்படுத்தப்படாததால் மாற்றப்பட்டிருக்கலாம். இது துறை அதிகாரிகள் மட்டும் தயாரித்ததில்லை. பல்வேறு துறை நிபுணர்கள், அரசுத்துறைகள், ஆலோசனை நிறுவனங்கள் என 30க்கும் மேற்பட்டோரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்படும்.” என்றார் கணேசன்.

நிலப் பயன்பாடு மாற்றத்தால் கட்டுமானத்துறையினர், நில உபயோக மாற்றத்துக்காக மீண்டும் கோப்புகளை துாக்கிக் கொண்டு சென்னை செல்ல வேண்டிய கட்டாயமும், அலைச்சலும், செலவும் ஏற்படும் என்று அச்சப்படுவது குறித்து அவரிடம் கேட்டபோது, ”நிலப் பயன்பாட்டை மாற்றுமாறு முன்மொழிவு (Proposal) அனுப்பினால் அதை மறு வகைப்பாடு (reclassification) செய்வதற்கு வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி மறுவகைப்பாடு முன்மொழிவு வழிமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தப் போகிறோம்.” என்றார்.

“மாஸ்டர் பிளான் என்பது கட்டுமானத்துறையினர் மட்டும் பயன் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டதில்லை. அதில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, தொலைநோக்குடன் கூடிய மேம்பாடு என பல விஷயங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய அவரிடம், மறுபுறத்தில் விவசாயப்பகுதிகளையும் திட்டச்சாலையாக மாற்ற விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்தும் பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த அவர், ”அதுவும் நகர ஊரமைப்புத் துறை முன்மொழிந்த திட்டமில்லை. மாநில நெடுஞ்சாலைத் துறையால் பரிந்துரைக்கப்பட்டதுதான். போக்குவரத்து மற்றும் சாலைக் கட்டமைப்புகள் குறித்து ஓர் ஆலோசனை நிறுவனம் கொடுத்த ஆலோசனைப்படியே அந்த திட்டச்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளானில் எதையும் உடனே மாற்ற முடியாது.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு