இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’காணொளிக் குறிப்பு, அசைவ பாலை உற்பத்தி செய்யும் அமெரிக்கா – இந்தியா என்ன சொல்கிறது?இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’

12 நிமிடங்களுக்கு முன்னர்

பால் சைவமா அல்லது அசைவமா?

இந்த கேள்வி உங்களூக்கு வித்தியாசமாக தோன்றுகிறதா?

இந்தியாவில் பசு, எருமை, ஆடு , ஏன் ஒட்டக்கத்தின் பால் கூட பயன்படுத்தப்படுகிறது.

அதனால், இந்த கேள்விக்கான அவசியம் எழுவதில்லை.

ஆனால், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவில் ‘நான்-வெஜ் மில்க்’ இருக்கிறது.

இந்தியாவில் நாம், விலங்குகளிடம் இருந்து இயற்கையான முறையில் பாலை பெறுகிறோம்.

ஆனால், அமெரிக்காவில் பசுக்களின் எடையை அதிகரிக்க, விலங்குகளின் இறைச்சி, ரத்தம் போன்றவை கலந்த தீவனம் வழங்கப்படுகிறது. இது ‘பிளட் மீல்’ (Blood Meal) என அழைக்கப்படுகிறது. இத்தகைய தீவனங்களை உட்கொள்ளும் கால்நடைகளிடம் பெறப்படும் பால் அசைவ பால் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க செய்தித் தளமான சியாட்டில் போஸ்ட் இண்டலிஜென்ஸில் (Seattle Post Intelligence) வெளியான ஒரு கட்டுரையின்படி, “பன்றிகள், மீன், கோழி, குதிரைகள் மற்றும் பூனைகள் அல்லது நாய்களின் இறைச்சியைக் கொண்ட தீவனம் பசுக்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. மேலும், புரதத்துக்காக கால்நடைகளுக்கு பன்றி மற்றும் குதிரை ரத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த விலங்குகளின் கொழுப்பின் ஒரு பகுதியும் எடையை அதிகரிக்க கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பிளட் மீல், பசுக்களுக்கு தேவையான லைசின் அமினோ அமிலத்தை தருகிறது.

பால் கொடுக்கும் விலங்குகளுக்கு ஆரோக்கியமாகவும் அதிக பால் உற்பத்தி செய்யவும் ‘ரத்த உணவு’ தொடர்ந்து வழங்கப்படுகிறது.

பசுக்களின் உடலில் காணப்படும் புரதத்தில் சுமார் ஒன்பது வகையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு மிக முக்கியமானவை – லைசின் மற்றும் மெத்தியோனைன்.

புரதங்களை விட அமினோ அமிலங்களை எளிதாக பசுக்கள் செரிமானம் செய்துவிடும். எனவே, அவற்றுக்கு ‘ரத்த உணவு’ மற்றும் சோளம் உணவாக அளிக்கப்படுகின்றன. ‘ரத்த உணவு’ லைசினின் மூலம் என்றால், சோளம் மெத்தியோனைனின் மூலமாகும்.

ஃபீடிபீடியா (Feedipedia) என்ற வலைத்தளத்தின்படி, ‘ரத்த உணவை’ தயாரிப்பதால், இறைச்சி கூடத்தில் உருவாகும் கழிவுகளும் மாசுபாடும் குறைகிறது, ஆனால் ரத்தத்தை உலர்த்தும் செயல்முறையில் அதிக மின்சாரம் செலவாகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த அசைவ பாலுக்கும் இந்தியா – அமெரிக்கா வர்த்தகத்துக்கும் என்ன தொடர்பு?

பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பான காலக்கெடுவை ஜுலை 9ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு டிரம்ப் நீட்டித்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஏற்படலாம் என்றும், அது விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்திய சந்தையை அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் பொருட்களுக்காக திறந்துவிடவேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கோரி வந்தாலும், இந்திய விவசாயம் மற்றும் பால் துறையை பாதுகாக்கும் பொருட்டு இந்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மறுத்து வருகிறது.

மேலும், ‘அசைவ பால்’ மீதான கலாசார கவலைகளை காரணம் காட்டி , அமெரிக்க பால் பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு மறுத்துவிட்டது.

பல்வேறு ஊடக செய்திகளின்படி, இந்தியா தனது ‘குடிமக்களின் பாதுகாப்புக்காக விவசாயத் துறை மற்றும் பால் பொருட்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதையும் மேற்கொள்ள தயாராக இல்லை’ என்று தெளிவாகக் கூறிவிட்டது.

இறக்குமதி செய்யப்படும் பால், விலங்குகளின் இறைச்சி அல்லது ரத்தம் கொண்ட தீவனங்கள் கொடுக்கப்படாத பசுக்களிடமிருந்து வருவதை உறுதி செய்வதற்காக, அமெரிக்க பால் பொருட்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதிக்க இந்தியா விரும்புகிறது.

உள்நாட்டு பால்வளத் துறை, நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெரும்பாலான சிறு விவசாயிகளுக்கான வாழ்வாதாரமாக இருப்பதால், இந்தியா பால் தொடர்பாக தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இருப்பினும், இது தேவையற்ற வர்த்தக தடை என்று அமெரிக்கா வாதிடுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு