ஹிட்லரிடம் இருந்து யூத குடும்பங்களை காப்பாற்றிய இந்தியர் – கதைகளை விஞ்சிய சாகச வரலாறு

பட மூலாதாரம், Vinay Gupta

படக்குறிப்பு, 1928ம் ஆண்டில் அடையாளம் தெரியாத ஒருவருடன் பெர்லின் வனவிலங்கு பூங்காவில் குந்தன்லால் (வலது) எழுதியவர், சுதா ஜி திலக் பதவி, டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“உனக்கு நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். நாஜிக்களிடமிருந்து தப்பிக்க யூத குடும்பங்களுக்கு உன்னுடைய நானா (தாத்தா) உதவியுள்ளார்.”

தன் தாய் கூறிய இந்த ஒற்றை வாக்கியம் தான் தன்னுடைய தாத்தாவின் கடந்த காலத்திற்கு வினய் குப்தாவை பயணிக்க வைத்தது. அவர் அதில் கண்டுபிடித்தது, ஒரு புனைவை விட சுவாரஸ்யத்தைத் தரக்கூடியது. ஐரோப்பாவின் இருண்ட காலகட்டத்தில் முன்பின் அறியாதவர்களை காப்பாற்றுவதற்காக எல்லா ஆபத்துகளுக்கும் துணிந்த ஒரு இந்திய தொழிலதிபரின் அதிகம் அறியப்படாத சாகசங்கள் நிறைந்த கதை இது.

அவர்களை காப்பாற்றுவதற்கு இரக்கம் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை; மாறாக இந்த பயணம், போக்குவரத்து சவால்கள், ஆபத்துகள் மற்றும் உறுதிப்பாடு நிறைந்ததாக இருந்தது. மறுபுறம் இந்தியாவில் யூதர்களை பணியமர்த்தும் வகையில் நிறுவனங்களையும் அவர்கள் வசிப்பதற்காக வீடுகளையும் உருவாக்கினார் குந்தன்லால். ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது யூதர்களை “எதிரி நாட்டவர்கள்” என பிரிட்டிஷ் அறிவித்தது.

குந்தன்லாலின் வாழ்க்கை ஒரு காவியம் போன்றது: லூதியானாவை சேர்ந்த ஏழை சிறுவனாக 13 வயதில் திருமணமாகி, மரக்கட்டைகள், உப்பு முதல் ஆய்வு உபகரணங்கள் மற்றும் மாட்டு வண்டி சக்கரங்கள் வரை எல்லாவற்றையும் விற்றவர் குந்தன்லால். ஆடை தொழில் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையையும் அவர் நடத்தியுள்ளார். லாகூரில் படிப்பில் முன்னிலையில் இருந்த அவர், 22 வயதில் காலனியாதிக்கத்தின் கீழ் குடிமைப் பணிகளில் இணைந்தார். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் இணைவதற்காக, அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார், அதன்பின் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார்.

பட மூலாதாரம், Getty Images

இந்திய சுதந்திர போராட்ட தலைவரும் பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராகவும் இருந்த ஜவஹர்லால் நேருவை அவர் சந்தித்துள்ளார். ஐரோப்பாவுக்கு செல்லும் நீராவிக் கப்பல் ஒன்றில் நடிகை தேவிகா ராணியையும் சந்தித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எ ரெஸ்க்யூ இன் வியன்னா எனும் தன்னுடைய குடும்ப நினைவு குறிப்பு புத்தகத்தில், தன்னுடைய தாத்தா வெளிநாட்டில் எப்படி அசாத்தியமான பணிகளை செய்துள்ளார் என்பதை வினய் குப்தா வெளிப்படுத்தியுள்ளார். தன் குடும்பத்தின் கடிதங்கள், தப்பித்தவர்களின் நேர்காணல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை அவர் இதில் தொகுத்துள்ளார்.

வேலை, வாழ்வாதாரத்தை வழங்கிய குந்தன்லால்

1938-ம் ஆண்டில் ஹிட்லர் ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்த சமயத்தில், பஞ்சாபின் லூதியானாவை சேர்ந்த இயந்திர கருவிகளை உற்பத்தி செய்பவரான குந்தன்லால், அமைதியாக யூதர்கள் தப்பிப்பதற்கான விசாக்கள் கிடைப்பதற்காக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார். வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை வழங்கி, இந்தியாவில் அந்த குடும்பங்களுக்கு வீடுகளையும் அமைத்துக் கொடுத்தார்.

ஐந்து குடும்பங்களை காப்பாற்றினார் குந்தன்லால்.

30 வயதான யூத வழக்கறிஞர் ஃபிரிட்ஸ் வெய்ஸ், உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து மருத்துவமனையில் ஒளிந்துகொண்டிருந்தார். குந்தன்லாலும் அதே மருத்துவமனையில் உடல்நல பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

தன்னுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள தெருக்களை சுத்தம் செய்யுமாறு வெய்ஸ்-ஐ நாஜிக்கள் கட்டாயப்படுத்தியபோது, குந்தன்லால் அவருக்கு தப்பிப்பதற்கான ஒரு வழியை வழங்கினார்: போலியான “குந்தன் ஏஜென்சிஸ்” எனும் நிறுவனத்தில் அவருக்கு வேலை வழங்கினார். அதன்மூலம் வெய்ஸுக்கு இந்தியாவுக்கு செல்வதற்கான விசா கிடைத்தது.

பட மூலாதாரம், Keystone

மரப்பொருட்களை தயாரிக்கும் ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் என்பவர், தன்னுடைய கர்ப்பிணி மனைவியை பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, குந்தன்லாலை சந்தித்தார். மரச்சாமான் நிறுவனத்தில் அவருக்கு வேலையையும் வழங்கி, இந்தியாவில் குடியேறுவதற்கு உதவுவதாகவும் குந்தன்லால் உறுதியளித்தார். அதன்மூலமாக, 1938ம் ஆண்டு ஜனவரி முதல் 1939ம் ஆண்டு பிப்ரவரி வரை இந்தியாவை அடைந்த யூத குடும்பங்களுள் வெக்ஸ்லரின் குடும்பமும் இணைந்தது.

ஜவுளி துறையில் தொழில்நுட்ப பணியாளரான ஹன்ஸ் லாஷ், ஆஸ்திரிய செய்தித்தாள் ஒன்றில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்காக குந்தன்லால் அளித்த விளம்பரத்துக்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கற்பனையான “குந்தன் க்ளாத் மில்ஸ்” எனும் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பையும் அத்துடன் வீடு, லாபத்தில் பங்கு மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றையும் அவருக்கு வழங்கினார் குந்தன்லால். அதன்மூலம் மீண்டும் வாழ்க்கையை தொடங்குவதற்கான வாய்ப்பு லாஷுக்கு கிடைத்தது.

முன்பு 50 பணியாளர்கள் அடங்கிய பிளைவுட் தொழிற்சாலைக்கு உரிமையாளராக இருந்த ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக், தன்னுடைய திறன்கள் குறித்து குந்தன்லாலிடம் கூறினார். அதன்பின், இந்தியாவின் மிகவும் நவீனமான பிளைவுட் ஆலையை உருவாக்குவதற்கான பொறுப்பை அவருக்கு வழங்கினார் குந்தன்லால். இதன்மூலம், மெக்கானிக்கான அவருடைய சகோதரர் உட்பட அவரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் தப்பித்தது.

இயந்திர கருவிகள் தொழிலதிபரான சியக்முன்ட் ரெட்டெர், குந்தன்லால் ஆரம்பத்தில் உதவியவர்களுள் ஒருவர் ஆவார். அவருடைய தொழில் நாஜி ஆட்சியில் வீழ்ந்தபோது, இந்தியாவுக்கு சென்று மீண்டும் தொடங்க குந்தன்லால் ஏற்பாடுகளை செய்தார்.

பட மூலாதாரம், Vinay Gupta

படக்குறிப்பு, ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் (இடது மூலையில் நிற்பவர்), சியெக்ஃப்ரெய்ட் ஸ்காஃப்ரானெக் (இடமிருந்து மூன்றாவதாக நிற்பவர்), ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக் (இடமிருந்து நான்காவதாக நிற்பவர்), குந்தன்லால் (இடது மூலையில் அமர்ந்திருப்பவர்) ஆகியோருடன் குந்தன்லால் அமைதியாக சாதித்த குந்தன்லால்

இவை எல்லாமும் வியன்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் படுக்கையிலிருந்துதான் தொடங்கியது.

அச்சமயத்தில் நீரிழிவு மற்றும் மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் 45 வயதான குந்தன்லால். அதற்காக புதிய சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து யோசித்த வேளையில், வியன்னாவில் உள்ள நிபுணர் ஒருவர் குறித்து படித்திருந்தார். 1938-ம் ஆண்டில் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் வேளையில், அங்கு லூசி – ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர் தம்பதியை சந்தித்தார் குந்தன்லால். அவர்கள் தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் மூலம் அங்கு யூதர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களின் வாழ்வை அழித்தொழிப்பது பற்றி குந்தன்லால் அறிந்தார்.

அடுத்த சில மாதங்களில், அவர் அப்படியான மேலும் சிலரை சந்தித்தார். இந்த வெற்றியின் காரணமாக, குந்தன்லால் இந்தியாவுக்கு இடம்பெயர்வதற்கு விருப்பம் கொண்டுள்ள, திறன் வாய்ந்த பணியாளர்கள் வேண்டும் என செய்தித்தாள்களில் விளம்பரம் அளித்தார். அதற்கு ஆல்ஃப்ரெட் வெக்ஸ்லர், லாஷ், ஸ்காஃப்ரானெக் மற்றும் ரெட்டெர் போன்றவர்கள் விருப்பம் தெரிவித்தனர். குந்தன்லால் ஒவ்வொருவருக்கும் வேலை, நிதி ஆதாரங்களுக்கான உறுதி மற்றும் இந்தியாவுக்கு செல்வதற்கான விசாக்களை பெறுவதற்கு உதவி போன்றவற்றை வழங்கினார்.

“இந்த சிக்கலான, நீண்ட நடைமுறைகளை குந்தன்லால் செய்ததில் மிகவும் அசாதாரணமான ஒன்று என்னவென்றால், அனைத்தையும் அவர் மிகவும் அமைதியாக செய்ததுதான். தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு பரிமாற்றம் செய்வது குறித்து இறுதி வரை அமைதி காத்தார்” என வினய் குப்தா எழுதுகிறார்.

“அவர் தன்னுடைய நோக்கம் அல்லது திட்டங்களை எந்தவொரு இந்திய அல்லது பிரிட்டிஷ் அதிகாரிகளிடமும் பகிரவில்லை. பல மாதங்கள் கழித்து தன்னுடைய வீட்டுக்கு அவர் திரும்பிய பின்னர்தான் அவருடைய குடும்பமே இந்த திட்டங்கள் குறித்து அறிந்தது.”

இந்தியா வந்தவர்கள் என்ன ஆனார்கள்?

1938-ம் ஆண்டு அக்டோபர் மாதம், குந்தன்லால் பணிக்கு அமர்த்தியவர்களுள் முதலாவதாக லூதியானா வந்தார் லாஷ்.

அவர் குந்தன்லால் வீட்டில் வரவேற்கப்பட்டார், ஆனால் அந்த அமைதியான நகரில் லாஷ் அசௌகரியத்தை உணர்ந்ததாக எழுதுகிறார் வினய் குப்தா. யூத சமூகம், கலாசாரம் இல்லாதது, நெருக்கடியில் ஆடை ஆலை ஆகியவற்றின் காரணமாக, மோசமான பணி சூழல்கள் மற்றும் லாபத்துக்கான வாய்ப்பு இல்லை என கூறி, லாஷ் சில வாரங்களிலேயே பாம்பேக்கு (தற்போது மும்பை) சென்றார். அதன்பின், அவர் லூதியானாவுக்கு திரும்பவே இல்லை.

ஃபிரிட்ஸ் வெய்ஸ் அதைவிட சிறிது காலமே இருந்தார், இரு மாதங்களுக்குள்ளேயே அவர் இடம்பெயர்ந்தார். அவருக்காக உருவாக்கப்பட்ட குந்தன் ஏஜென்சிஸ் நிறுவனம் தொடங்கப்படவே இல்லை. அவரும் விரைவிலேயே பாம்பேக்கு இடம்பெயர்ந்தார், அங்கு கட்டுமான வேலையில் இணைந்து பின் 1947-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்.

அவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்ததால் குந்தன்லாலுக்கு எவ்வித மனக்கசப்பும் ஏற்படவில்லை என, வினய் குப்தா எழுதுகிறார்.

“அதற்கு மாறாக குந்தன்லால் தன்னால் வியன்னாவுக்கு ஏற்ப வாழ்க்கை முறையையும் சமூக சூழலையும் வழங்க முடியவில்லை என சங்கடம் அடைந்ததாகவும் அப்படி ஏற்படுத்தியிருந்தால் இருவரும் லூதியானாவிலேயே தங்கியிருப்பார்கள் என எண்ணியதாகவும் என்னுடைய அத்தை கூறினார்.”

பட மூலாதாரம், Vinay Gupta

படக்குறிப்பு, புரந்தாரில் உள்ள காவல் முகாமில் லூசி மற்றும் அலெக்ஸ் வெக்ஸ்லர் ஆனால், எல்லா கதைகளும் இப்படி முடியவில்லை.

ஆல்ஃப்ரெட் மற்றும் லூசி வெக்ஸ்லர் தம்பதி தன்னுடைய பச்சிளம் குழந்தையுடன் கடல், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக பயணித்து, லூதியானாவை அடைந்தனர்.

தங்களுக்காக ஸ்காஃப்ரானெக்ஸ் வீட்டுக்கு அடுத்ததாக குந்தன்லால் தங்களுக்கென உருவாக்கியிருந்த நல்ல பரந்த வீட்டில் அவர்கள் தங்கினர். பர்மா தேக்கு மூலம் தயாரிக்கப்பட்ட மரச்சாமான்கள் பட்டறையை உருவாக்கிய அவர், உள்ளூரில் இருந்த சீக்கிய பணியாளர்களை கொண்டு அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட டைனிங் மேசைகளை உருவாக்கினர், அதில் ஒன்று வினய் குப்தாவின் வீட்டில் இன்றும் இருக்கிறது.

1939-ம் ஆண்டு மார்ச் மாதம், ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக் தன் சகோதரர் சியெக்ஃப்ரெய்ட் மற்றும் அவரின் குடும்பத்துடன் ஆஸ்திரியாவிலிருந்து இந்தியா வந்தார். அவர் இரண்டு வீடுகளுக்குப் பின்னால், இந்தியாவின் மிகவும் ஆரம்பகால பிளைவுட் தொழிற்சாலையை ஒரு கூடாரத்திலிருந்து உருவாக்கினார்.

பயிற்சி பெறாத பணியாளர்களை கடுமையாக உழைப்பதற்கு ஊக்குவித்த ஆல்ஃப்ரெட், நீடித்து நிற்கும் ஒன்றை உருவாக்குவதற்காக உறுதிபூண்டார். அவருடைய பணிகள் ஆழமானதாக இருந்ததாக குறிப்பிடுகிறார் வினய் குப்தா. குறிப்பாக, வீட்டு வேலைகளில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்கள், கடினமான வேலை மற்றும் பஞ்சாபின் வெப்பத்தில் தனிமையாக உணர்ந்தனர்.

லூதியானாவில் சில மாதங்கள் கழிந்த நிலையில், சலிப்பு ஏற்பட்டது.

ஆண்கள் நீண்ட நேரம் வேலை செய்தனர், மொழி கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் தினசரி வீட்டு வேலைகளிலேயே ஈடுபட்டனர்.

1939-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஹிட்லர் போலந்து மீது படையெடுத்தார். நாட்கள் கழித்து, ஜெர்மனி மீது பிரிட்டன் போரை அறிவித்தது. இந்த மோதலில் பிரிட்டன் நாடாளுமன்றம் இந்தியாவையும் இழுத்தது. சுமார் 25 லட்சம் இந்தியர்கள் இந்த போரில் ஈடுபட்டனர், அவர்களுள் 87,000 பேர் திரும்பி வரவே இல்லை.

லூதியானாவில், இந்த போரின் யதார்த்தம் வேகமாகவே தாக்கியது.

பட மூலாதாரம், Vinay Gupta

படக்குறிப்பு, லூதியானாவில் அலெக்ஸ் வெக்ஸ்லருடன் குந்தன்லாலின் மகள் பிரேமலதா 1940-ம் ஆண்டில், யூத மற்றும் யூதர் அல்லாத ஜெர்மானிய குடிமக்கள் யாராக இருந்தாலும் காவல் முகாம்களில் அடைக்க வேண்டும் என புதிய கொள்கைகள் மூலமாக உத்தரவிடப்பட்டது.

ஆல்ஃப்ரெட் ஸ்காஃப்ரானெக் மற்றும் லூசி வெக்ஸ்லரின் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக பூனாவுக்கு (தற்போது புனே) புரந்தர் காவல் முகாமில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள், மண்ணெண்ணெய் விளக்குகள் மற்றும் குறைந்தபட்ச வசதிகளுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, தவறான பாஸ்போர்ட்டுகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.

அவர்கள் ஊதியத்துடன் கூடிய வேலையை கண்டறிந்தால் விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.

ஆல்ஃப்ரெட் மற்றும் அவரின் சகோதரர் சியெக்ஃப்ரெய்ட் இருவருக்கும் பெங்களூருவில் புதிய பிளைவுட் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது, பின்னர் குடும்பத்துடன் அங்கே இடம்பெயர்ந்து எல்லாவற்றையும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். ஆல்ஃப்ரெட்டுக்கு கராச்சியில் வேலை கிடைத்ததையடுத்து, வெக்ஸ்லரின் குடும்பம் 1942ம் ஆண்டில் முகாமில் இருந்து வெளியேறினர். அந்த இரு குடும்பங்களும் மீண்டும் சந்திக்கவே இல்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புரந்தர் முகாம் 1946-ம் ஆண்டில், போர் முடிவுற்று கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு மூடப்பட்டது.

1948-ம் ஆண்டில் வெக்ஸ்லரின் உறவினர் ஒருவர், அக்குடும்பத்துக்கு அமெரிக்க அகதி விசா கிடைக்க உதவினார். அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அவர்கள் கராச்சியில் இருந்து வெளியேறினர், பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பவே இல்லை. ஸ்காஃப்ரானெக் குடும்பம் பெங்களூருவில் வெற்றிகரமாக பிளைவுட் நிறுவனத்தை நடத்தி, பின்னர் 1947ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தது.

இந்த புத்தகத்துக்கான ஆய்வுக்காக வினய் குப்தா அலெக்ஸ் வெக்ஸ்லரை சந்தித்தார், அவருடைய தந்தை ஆல்ஃப்ரெட், குந்தன்லால் தன்னுடைய சிறிய 120 சதுர அடி அலுவலகத்தில் பயன்படுத்திய பர்மா தேக்கினால் ஆன மேசையை செய்தவர் ஆவார். (ஆல்ஃப்ரெட் 1973-ம் ஆண்டில் உயிரிழந்தார்.)

“10 வயதிலிருந்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய 80 வயதுகளில் இருக்கும் அலெக்ஸ் தற்போதும் இந்தியாவில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடனேயே உள்ளார். இந்திய உணவகங்களில் சாப்பிடுவதையும் இந்தியர்களை சந்திப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறார், உருது மொழி மீதான தன் ஞானத்தால் அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறார்,” என வினய் குப்தா எழுதியுள்ளார்.

லூதியானாவில் குந்தன்லால் தன் மகள்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார், அந்த பள்ளி பின்னாட்களில் பஞ்சாபின் மிக பழமையான பள்ளிகளுள் ஒன்றாக விரிவடைந்தது, இப்போதும் 900 மாணவர்களுடன் இயங்கிவருகிறது. அவருடைய மனைவி சரஸ்வதி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தார்.

குந்தன்லால் – சரஸ்வதி தம்பதியருக்கு 4 மகள்கள் உட்பட 5 குழந்தைகள் இருந்தனர். 1965-ம் ஆண்டில், வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்து சரஸ்வதி உயிரிழந்தார். தன்னுடைய கடைசி நாட்களை அமைதியாகவும், குடும்பத்திடமிருந்து விலகியும் கழித்தார் சரஸ்வதி. அதற்கு அடுத்த ஆண்டு குந்தன்லால் தன் 73வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

“ஒரு பிரச்னையை பார்த்துவிட்டு கடந்து செல்வது குந்தன்லாலுக்கு வெறுப்பூட்டக் கூடியது. கவனம் தேவைப்படும் யாரையோ அல்லது எதுவொன்றையோ அவர் கவனித்தால், அதன்மீது குந்தன்லால் கவனம் கொள்வார், அந்த பிரச்னையின் தீவிரத்தன்மை குறித்து பயப்பட மாட்டார்,” என வினய் குப்தா எழுதியுள்ளார்.

வணிகத்தைத் தாண்டி அமைதியான எதிர்ப்பு, இரக்கம் மற்றும் உறுதிப்பாட்டை கொண்ட ஒருவருக்கு பொருத்தமான கல்லறை வாசகம் இது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு