Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கெங்கிஸ் கான் மங்கோலிய சாம்ராஜ்யத்தை கட்டமைக்க வித்திட்ட மனைவியின் ஆலோசனைகள்
பட மூலாதாரம், Getty Images/Pictures from History / Contributor
படக்குறிப்பு, கெங்கிஸ் கான் தனது மனைவி போர்டேவுடன் (சித்தரிப்பு ஓவியம்)எழுதியவர், வக்கார் முஸ்தபாபதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்56 நிமிடங்களுக்கு முன்னர்
போர்டே, தெமுஜினை (கெங்கிஸ் கான்) மணந்த சிறிது காலத்திலேயே எதிரிகளால் கடத்தப்பட்டார்.
போர்ஜிகன் பழங்குடியினரின் தலைவரான யெசுகோய், மெர்கிட் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஹுய்லோன் என்ற பெண்ணைக் கடத்தியதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, போர்டேவின் கடத்தல் நடந்ததாக பத்திரிகையாளர் எரின் பிளேக்மோர் தனது கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். ஹுய்லோன் பின்னர் தெமுஜினின் தாயானார்.
தெமுஜின், கடத்தப்பட்ட தனது மனைவி போர்டேவை விடுவித்தார். இதற்குப் பிறகு ஒரு போர் நடந்தது, அதில் மெர்கிட் பழங்குடிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் பகுதி கைப்பற்றப்பட்டது.
போர்டே மற்றும் தெமுஜினின் சந்திப்பு குறித்து இகோர் டி. ராஷ்வில்ட்ஸின் மங்கோலியர்களின் ரகசிய வரலாறு என்ற புத்தகத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: “போரில் கொள்ளை தொடர்ந்தபோது, தெமுஜின் தப்பி ஓடிக் கொண்டிருந்த மக்களிடையே புகுந்து, – ‘போர்டே! போர்டே!’ என்று கூச்சலிட்டார்.”
“தெமுஜினின் குரலை போர்டே அடையாளம் கண்டுகொண்டதும், அவர் தெமுஜினை நோக்கி ஓடினார். இரவு நேரமாக இருந்தாலும், போர்டே நிலவொளியில் தெமுஜினின் குதிரையின் கடிவாளத்தையும் கயிற்றையும் அடையாளம் கண்டு, அவற்றைப் பிடித்தார். தெமுஜினும் போர்டேவை அடையாளம் கண்டுகொண்டார்.”
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கெங்கிஸ் கானின் வாழ்க்கைத் தத்துவம்
பட மூலாதாரம், Universal History Archive/UIG via Getty Images
படக்குறிப்பு, கெங்கிஸ் கான் பல போர்களில் தொடர் வெற்றிகள் பெற்று மங்கோலியப் பேரரசை நிறுவினார்.போர்ஜிகன் பழங்குடிகளின் இத்தகைய வெற்றிகள் தொடர்ந்தன. பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெமுஜின், ‘கெங்கிஸ் கான்’ என்று அறியப்பட்டு, மங்கோலியப் பேரரசின் நிறுவனர் ஆனார்.
ரிச்சர்ட் பிரெஸ்லர் தனது ‘பதிமூன்றாம் நூற்றாண்டு: ஒரு உலக வரலாறு’ என்ற புத்தகத்தில் கெங்கிஸ் கான் போர்கள் மூலம் தனது அந்தஸ்தை வளர்த்துக் கொண்டார் என்று எழுதியுள்ளார்.
“அவர் எந்த முறையான தத்துவத்தையும் அறிந்திருக்கவில்லை. அவரது தத்துவத்தை, அவரது கூற்றே சிறப்பாக விவரித்தது. ஸ்டூவர்ட் லெக்கின் தி ஹார்ட்லேண்ட் புத்தகத்தின்படி, அந்தக் கூற்று என்பது, ‘ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது எதிரியை வீழ்த்தி, மிதித்து, நசுக்கி, அவனிடமிருந்து அனைத்தையும் பறிப்பதில் உள்ளது’.”
கெங்கிஸ் கான் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டார்.
எரின் பிளேக்மோர் பின்வருமாறு எழுதுகிறார், “அவர் (கெங்கிஸ் கான்) தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றார், அதன் மூலம் பல பிரதேசங்களை இணைத்தார். அவருக்கு பல மனைவிகளும் நூற்றுக்கணக்கான அடிமைகளும் இருந்தனர். ஆனால் போர்டே தான் அவரது முதல், மிகவும் பிரியமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க மனைவி. கெங்கிஸ் கானின் இதயத்தில் மட்டுமல்ல, அரசு விவகாரங்களிலும் அவர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார்.”
மைக்கேல் பிர்ன் மற்றும் ஹோடாங் கிம் ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘மங்கோலியப் பேரரசின் கேம்பிரிட்ஜ் வரலாறு’, அரசியல், இராஜதந்திர மற்றும் மூலோபாய மட்டங்களில் மங்கோலிய சமூகத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததைக் காட்டுகிறது.
“அவர் கான் குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குவார், தூதர்களை வரவேற்பார் அல்லது தானே ராஜதந்திர பயணங்களுக்குச் செல்வார், மற்ற பிராந்தியங்களில் உள்ள ஆட்சியாளர்களுடன் தொடர்பு கொள்வார். அவர் அரசாங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வார் மற்றும் போர்களைத் திட்டமிடுவார், அதேபோல் கொள்கை முடிவுகள் மற்றும் வாரிசுரிமை முடிவுகளில் பங்கேற்பார். கானின் விதவையாக தன்னை தானே ஆட்சியாளராக தேர்ந்தெடுக்க அவரால் முடியாவிட்டாலும், அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.”
“பேரரசின் ஆரம்ப காலத்தில் கெங்கிஸ் கானின் தாயார் ஹுய்லோன் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்மணியாக இருந்தார். யெசுகெயின் மரணத்திற்குப் பிறகு, அவர் குழந்தைகளை வறுமையில் வளர்த்து, தெமுஜினுக்கு அரசியல் ஞானத்தைக் கற்பித்தார். இவை அனைத்திலும் போர்டே முக்கிய பங்கு வகித்தார்.”
போர்டே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கதை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கெங்கிஸ் கான் தனது மனைவி போர்டேவுடன்போர்டே 1161 ஆம் ஆண்டு தெமுஜினின் (கெங்கிஸ் கானின் உண்மையான பெயர்) போர்ஜிகன் பழங்குடியினரின் கூட்டாளிகளான ஓல்கோனுட் பழங்குடியினத்தில் பிறந்தார். அவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் நிச்சயம் செய்யப்பட்டு, போர்டேவுக்கு 17 வயதும், கெங்கிஸ் கானுக்கு 16 வயதும் ஆன போது திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, மெர்கிட் பழங்குடியினர், போர்டே- கான் தம்பதியினரின் முகாமைத் தாக்கினர். தெமுஜினால் தனது ஆறு இளைய சகோதரர்கள் மற்றும் தாயுடன் தப்பிக்க முடிந்தது, ஆனால் போர்டே சிக்கிக்கொண்டார்.
மெர்கிட் பழங்குடி மக்கள் உண்மையில் போர்டேவை பிடிப்பதற்காக மட்டுமே வந்திருந்தனர்.
தெமுஜினின் தாய் ஹுய்லோன் மெர்கிட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்றும், தெமுஜினின் தந்தை அவளைக் கடத்தி தனது மனைவியாக்கிக் கொண்டார் என்றும் கதை கூறுகிறது.
மெர்கிட்களால் இந்த சம்பவத்தை பல ஆண்டுகளாக மறக்க முடியவில்லை, இப்போது போர்டேவைக் கடத்தி பழிவாங்க விரும்பினர்.
போர்டே ஒரு மாட்டு வண்டியில் ஒளிந்து கொண்டார், ஆனால் மெர்கிட்கள் அவளைக் கண்டுபிடித்து குதிரையில் ஏற்றி அழைத்துச் சென்றனர். தெமுஜின் தனது மனைவியை விடுவிப்பதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்தார்.
மத்திய ஆசியாவின் ஆயிரக்கணக்கான மைல்கள் மேய்ச்சல் நிலங்களில் நாடோடிகளான மெர்கிட் பழங்குடியினர் எங்கு சென்றாலும், தெமுஜின் அவர்களைத் தொலைவில் பின்தொடர்ந்தார். இந்த நேரத்தில், அவர் அங்கும் இங்குமாக தனக்கான தோழர்களை ஒன்றிணைக்கத் தொடங்கினார்.
அவரது பிரபலமான கூற்றுகளில் ஒன்று, “மெர்கிட் பழங்குடியினர் என் கூடாரத்தை காலி செய்தது மட்டுமல்லாமல், என் மார்பைக் கிழித்து என் இதயத்தையும் எடுத்துக் கொண்டனர்” என்பதாகும்.
இறுதியில், மெர்கிட் பழங்குடியினர் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரிக்கு அருகில் முகாமிட்டபோது, தெமுஜினும் அவரது ஆட்களும் ஒரு வியத்தகு கொரில்லா போர் முறை நடவடிக்கையில் போர்டேவை எதிரிகளிடமிருந்து மீட்டனர்.
சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவம் கெங்கிஸ் கானின் வாழ்க்கையில் மிக முக்கியமானது, ஏனெனில் அது அவரை ‘பேரரசராக மாற்றும் ஒரு பாதைக்கு’ இட்டுச் சென்றது.
போர்டேவும் பேரரசின் நிறுவலும்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போர்டே மற்றும் கெங்கிஸ் கானின் திருமண உறவு அவர்களது குழந்தை பருவத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.’தி கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி’யில் போர்டே 1178 ஆம் ஆண்டு தெமுஜினை மணந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. போர்டே கொங்கிராட் பழங்குடியினரின் தலைவரான டாய் சச்சினின் மகள் என்று கட்டியா ரைட் தனது கட்டுரைகளில் ஒன்றில் எழுதுகிறார்.
இந்தத் திருமணத்துடன் தெமுஜினின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.
இந்த உறவு “அவருக்கு ஒரு மரியாதைக்குரிய குடும்பத்தின் அடையாளத்தை அளித்தது மற்றும் தான் அதிகாரத்திற்கு வருவதற்கு உதவிய நண்பர்கள் வட்டத்துடன் தன்னை இணைத்து கொள்ளவும் அனுமதித்தது. மங்கோலிய அரசியல் கூட்டணிகளுக்கு இன்றியமையாத ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கு தெமுஜினுக்கு இந்த திருமணம் ஒரு வழிமுறையாகவும் செயல்பட்டது.”
‘தி கேம்பிரிட்ஜ் வரலாறு’ படி, “போர்டே தெமுஜினுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கினார். அவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். அவரது மகன்கள் (ஜோச்சி, சுக்தாய், ஒகெடி மற்றும் டோலி) பேரரசின் பல்வேறு பகுதிகளின் ஆட்சியாளர்களாக மாறினர். ஒகெடி கெங்கிஸ் கானின் வாரிசாக அறிவிக்கப்பட்டார். அடுத்தடுத்த மனைவிகளின் மகன்கள் அத்தகைய அந்தஸ்தைப் பெறவில்லை.”
தெமுஜினுக்குப் (கெங்கிஸ் கான்) பிறகு போர்டேவின் மகன்கள் மட்டுமே அடுத்த ‘கான்’ பதவிக்கான போட்டியாளர்களாகக் கருதப்பட்டனர் என்று டிமோதி மே ‘மங்கோலியப் பேரரசு’ புத்தகத்தில் எழுதுகிறார்.
மங்கோலியப் பேரரசுக்கு அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தைக் கொண்டு வந்த எல்கார்ஸ், அவிராட், ஆகோட், கூன்கிராட் மற்றும் ஐகூர் போன்ற பழங்குடியினங்களில் போர்டேவின் மகள்களுக்கு (கோகன், செச்செகின், அலைகா, டோமிலோன் மற்றும் அல் அல்தான்) திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ‘கேம்பிரிட்ஜ் வரலாறு’ கூறுகிறது.
இந்த உறவுகள் அண்டை சமஸ்தானங்களை, போர் இல்லாமல் பேரரசில் இணைக்க உதவியது. போர்டே மகள்களின் கணவர்கள் பின்னர் குவாரெஸ்ம் படையெடுப்பு (1219) மற்றும் வடக்கு சீனா மீதான படையெடுப்பு (1211–1215, 1217–1223) போன்ற ராணுவ நடவடிக்கைகளிலும் பங்கேற்றனர்.
டிமோதி மேயின் கூற்றுப்படி, போர்டே பல ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தார். அதில் கத்தாகுனியன், போடானியன் முக்கியமானவர்கள். போர்டே அவர்களைத் தனது சொந்தக் குழந்தைகளாக வளர்த்தார். இந்தப் பணி அவர் மீதான நம்பகத்தன்மையையும் அவரது சமூக அந்தஸ்தையும் பெரிதும் அதிகரித்தது.
அரசியல் மற்றும் போர் விஷயங்களில் ஆலோசனை வழங்கிய போர்டே
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தெமுஜின் பிற்காலத்தில் கெங்கிஸ் கான் என அழைக்கப்பட்டார்’போர்டேவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்’ என்று ஆன் பிராட்பிரிட்ஜ் தனது ‘பெண்களும் மங்கோலியப் பேரரசின் உருவாக்கமும்’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
போர்டே புத்திசாலி. பழங்குடி முகாமின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது உள்பட சில பொறுப்புகளை அவர் தனது மாமியார் ஹுய்லோனுடன் பகிர்ந்து கொண்டார்.
“சிறந்த மனைவியாக, போர்டே தெமுஜினின் முகாம் மற்றும் கால்நடைகளை மேற்பார்வையிட்டது மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட உதவியாளர்கள், வேலைக்காரர்கள், அடிமைகள், மனைவிகள் மற்றும் அரச காவலர்கள் என அனைவரையும் நிர்வகித்தார். இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டக்கூடும். மங்கோலிய மரபின் படி, தனது கணவர் மற்றும் விருந்தினர்களை உபசரிப்பதற்கு அவர் பொறுப்பு ஏற்றிருந்தார். பல முக்கியமான ஒப்பந்தங்களும் கூட்டணிகளும் அவருடைய முகாமில் நிறைவேற்றப்பட்டன.”
“அவர் தெமுஜினுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார், அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அவரது குடும்பம், அரசியல் மற்றும் போரில் கெங்கிஸ் கானிற்கு சிறந்த ஒத்துழைப்பை அளித்தது. அவர் மங்கோலிய சமூகத்தில் ஒரு உயர் பதவியை வகித்தார். கெங்கிஸ் கான் அரசியல் மற்றும் போர் விஷயங்களில் ஆலோசனை பெற அவரை அழைப்பார்.”
இந்த நம்பிக்கையை அவர் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். உதாரணமாக, போர்டே கடத்தப்பட்ட பிறகு, அவரை விடுவிக்க உதவிய கெங்கிஸ் கானின் நெருங்கிய நண்பர் ஜமுகா, பிற்காலத்தில் படிப்படியாக அரசியல் எதிரியாக மாறியபோது, அவருடனான நட்பை முறித்துக் கொள்ளுமாறு கெங்கிஸ் கானுக்கு போர்டே அறிவுறுத்தினார். 1204இல், ஜமுகாவை தோற்கடித்த கெங்கிஸ் கான் அவரை கொல்ல உத்தரவிட்டார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.டிமோதி மேயின் கூற்றுப்படி, போர்டே ஆசியா முழுவதும் இருந்த வர்த்தகப் பாதைகள் தொடர்பான விஷயங்களை நிர்வகித்தார். அந்த வழிகளில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் வணிகர்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். வரலாற்று ஆவணங்களின்படி, அவர் இந்த பொறுப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அவர் எடுத்த பல நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றொரு சந்தர்ப்பத்தில், கானின் நெருங்கிய கூட்டாளியான தைப் டாங்ரி, தெமுஜினின் சகோதரரை அவமதித்தார். போர்டே உடனடியாக எதிர்வினையாற்றி, தனது கணவர் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“இந்த சந்தர்ப்பத்தில் கெங்கிஸ் கான் போர்டேவின் ஆலோசனையைப் பின்பற்றி, மக்களிடையே அமைதியை மீட்டெடுத்து, தனது தலைமையை வலுப்படுத்தினார்” என்று வரலாற்றாசிரியர் டோனா ஹாமிலை மேற்கோள் காட்டி பிளேக்மோர் எழுதுகிறார்.
பிளேக்மோரின் கூற்றுப்படி, “போர்டே தூதர், ஆலோசகர் மற்றும் நிர்வாகியாக இருந்தார். பேரரசுக்குள் ராணியின் பங்கை தீர்மானிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது.”
“போர்டேவின் வாழ்க்கையின் பல அம்சங்கள் வரலாற்றின் திரையில் மறைக்கப்பட்டிருந்தாலும், பேரரசைக் கட்டியெழுப்புவதிலும் அதன் அன்றாட நிர்வாகத்திலும் பெண்கள் ஆற்றிய முக்கிய பங்கிற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாகச் செயல்படுகிறார்.”
“போர்டேவைப் போன்ற பெண்கள் மங்கோலியப் பேரரசில் இருந்திருக்கவில்லையென்றால், அந்தப் பேரரசும் இருந்திருக்காது.” என்று பிராட்பிரிட்ஜ் எழுதுகிறார்.
“அவர் தனது வாழ்நாள் முழுவதும் கெங்கிஸ் கானின் மூத்த மனைவியாக இருந்தார். அவர் பெரும்பாலான நேரம் தனது கணவருடன் வாழ்ந்தார். கானுடன் இல்லாதபோதும், பேரரசின் சில பகுதிகளை அவர் தானே நிர்வகித்தார்.”
கெங்கிஸ் கானின் வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக போர்டேவை பிராட்பிரிட்ஜ் விவரிக்கிறார். போர்டேவைப் பற்றிய கதைகள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.
உலகின் பல பகுதிகளை வெற்றி கொள்வதில் கெங்கிஸ் கான் மும்முரமாக இருந்தபோது, போர்டே மங்கோலியாவில் தங்கி அந்தப் பேரரசை நிர்வகிக்க உதவினார். அவரது தனிப்பட்ட நிலங்கள் கிர்லான் நதிக்கரையில் அமைந்திருந்தன.
டிமோதி மேயின் கூற்றுப்படி, போர்டே தனது கணவர் கெங்கிஸ் கானுக்குப் பிறகு 1230இல் இறந்தார். அவரது வாழ்நாளில், மங்கோலிய தேசத்தில் மிகவும் மதிக்கப்படும் நபராக அவர் மாறியிருந்தார்.
“போர்டே தனது கணவருக்கு ஆலோசகராக பணியாற்றியது மட்டுமல்லாமல், தனது மகள்களைப் பிரதிநிதிகளாகவும், தூதர்களாகவும், அரசு விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்கவும் பயிற்சி அளித்தார்.”
‘ஏசியா டாபிக்ஸ்’ ஆசிரியரான மாக்ஸ் லூவின் கூற்றுப்படி, “இன்றைய மங்கோலியாவில் அமைந்துள்ள ஹோலோன் மற்றும் சாஹான் ஏரிகள், மங்கோலியர்களுக்கு புனிதமானதாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் கெங்கிஸ் கானும் ராணி போர்டேவும் இங்கு திருமணம் செய்து கொண்டனர். அப்பகுதி அவர்களின் வாழ்நாள் உறவின் அடையாளமாக மாறியது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு